Skip to main content

அழகிய கோபுர சிங்கர்

அழகிய கோபுர சிங்கர்


ஆவணி ஹஸ்தம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு முக்கியமான நாள். இரண்டு காரணம். ஒன்று ‘ஸ்ரீ ராமானுஜ தயாபாத்திரம்’ என்ற தனியன் அவதார நாள். இன்னொன்று ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கர் என்று அன்புடன் நாம் அழைக்கும் 44ஆம் பட்டம் அழகிய சிங்கர் ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்ததேசிக யதீந்திரமஹாதேசிகன் திருநட்சத்திரம்.

இதை ஒரு பாமரனுக்குச் சொன்னால் ”யார் சாமி அவர் ?” என்பார்.  ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டிய ஜீயர் - 'கோபுர ஜீயர்’ என்றால் ’அட அவரா!” என்று உடனே எல்லோருக்கும் கோபுரத்தின் மீது விளக்காக எல்லோருக்கும் தெரிந்தவராகிவிடுவார். 

1987 ஆம் ஆண்டு 44ஆம் பட்டம் அழகியசிங்கர் ராயகோபுரத்தை பதின்மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராஜகோபுரமாகக் கட்டிமுடித்தார்.  85 வயதில் கோபுரத்தைக் கட்ட தொடங்கி, தன் 92வது வயதில் இதைக் கட்டி முடித்தார். ராஜகோபுரத்தைவிட இது எனக்குப் பெரிய ஆச்சரியத்தைத் தந்தது.

இந்த அழகியசிங்கர் செய்யாறு நதிதீரத்தில் உள்ள முக்கூர் என்ற அக்ரஹாரத்தில் ஸ்ரீ.உ.வே வித்வான் ரங்காசார்யர் ஸ்வாமிக்கு 1895ல் அவதரித்தார். இதுவரையில் அஹோபில மட சரித்திரத்தில் ‘வேதாந்த தேசிகன்’ என்ற திருநாமம் கொண்ட ஒரே அழகியசிங்கர் இவர் தான். கூடவே இவருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. ’யதீந்திர மஹாதேசிகன்’ என்று ஸ்வாமி ஸ்ரீராமானுஜரையும் தன் திருநாமத்தில் கொண்டு ஸ்ரீ ராமானுஜர் போல ஐந்து ஆசாரியர்களிடம் திருவடிகளை ஆசிரியத்து இருந்தார்.


40, 41, 42, 43 - ஸ்ரீஅழகியசிங்கர்கள் சந்நிதியில் காலக்ஷேபம் நடக்கும்போதெல்லாம் கூடவே இருந்துள்ளார். அவர்களுக்கு மிகுந்த பிரியமானவர். கூடவே இருந்துள்ளார். 

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் மட்டும் அல்லாமல் பல கைங்கரியங்கள் செய்துள்ளார்.  உதாரணத்துக்குச் சில - நைமிசாரண்யத்தில் 43ஆம் பட்டம் ஸ்ரீஅழகியசிங்கருக்கு ப்ருந்தாவனம்.  முக்கூர் கோயில், காஞ்சிபுரத்தில் நம்மாழ்வார் சந்நிதி. அஹோபிலத்தில் ராஜகோபுரம், ஆதனூர் திவ்யதேசங்களில் மூலவர்கள் விக்ரஹ பிரதிஷ்டை.. என்று பல கைங்கரியங்கள் இந்த அழகிய சிங்கரால் செய்யப் பெற்றன.

ஸ்வாமி தேசிகன் மாதிரி ’conviction’ என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். அவருடைய உறுதிக்கு ஓர் உதாரணம் -  ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கட்டி முடிந்து சம்ப்ரோக்ஷணம் முடிவானது. சம்ப்ரோக்ஷணத்துக்கு சில நாள் முன் அரியலூரில் ரயில் விபத்து ஒன்று நிகழ்ந்தது.  ஏற்கனவே கோபுரம் கட்டினால் இலங்கைக்கு ஆபத்து என்று புரளி உலாவிக்கொண்டு இருந்தது.  ரயில் விபத்து அதனால் சம்ப்ரோக்ஷணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசாங்கத்திலிருந்து வந்து கேட்க ஜீயருக்கு கோபம் சிங்கம்போலக் கொப்பளித்தது.


“குறிப்பிட்ட தேதியில் நடக்கும்.. போய்ச் சொல்லுங்கள்” என்றார் அழகிய சிங்கர்.

எம்.ஜி.ஆர்க்கு விஷயம் எட்டியது. வேறு வழி இல்லாமல் தன் துணைவியாருடன் வந்து கலந்துகொண்டார்.

அழகிய சிங்கரின் கனவில் பெரிய பெருமாள் தோன்றி கோபுரம் கட்ட வேண்டும் என்று சொன்னவுடன் ஸ்ரீமத் அழகிய சிங்கர் அந்த முயற்சியில் உடனே இறங்கினார். 

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பொறியியல் அற்புதம் (engineering marvel) என்றாலும் கிடுகிடு என உயர்ந்ததற்குக் காரணம் பலர் அதன் கட்டமைப்பில் பங்கேற்றார்கள்.  பங்களிப்புகள் பல பகுதியிலிருந்து வந்தது. - ஸ்ரீ அஹோபில மடம், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம், ஸ்ரீ காஞ்சி மடம், ஆந்திரா, கர்நாடகா, தமிழக அரசு, இளையராஜா போன்ற பல நபர்களின் நன்கொடைகள் அந்தக் கோபுரம் வளர்வதற்கு முக்கிய காரணம்.   இவ்வளவு மடங்கள், அரசுகள் ஒன்றாகச் சேர்ந்து கட்டிய கோபுரம் என்று இந்தியச் சரித்திரத்தில் இதுவே முதல் முறை என்று  நினைக்கிறேன். இவ்வளவு பேர் ஒன்றாகச் சேர்ந்ததற்குக் காரணம், திருவரங்கம் நம்பெருமாளிடம் இருந்த பிரேமையும், நம் ஜீயர் மீது இருந்த நம்பிக்கையும் மரியாதையும் தான் காரணம்.


வயது முதிர்ந்த காலத்திலேயும் கோபுர திருப்பணிகள் நல்லவிதமாக நடக்கிறதா என்று தன் தள்ளாத வயதில் படிக்கட்டு வழியே உட்கார்ந்து உட்கார்ந்து, மெது மெதுவே கோபுரம் ஏறிச் சென்று பணிகளைப் பார்வையிட்டு வழிகாட்டி ஆசியாவிலேயே ‘பெரிய’ கோபுரத்தை அரங்கனுக்கு அர்ப்பணித்தார்.

பெரிய பெருமாள் நீண்ட நாள் கனவு நனவானது !

காரேய் கருணை இராமானுச என்று சொல்லுவதைப் போல இவரும் கருணை மிக்கவராக இருந்தார். ஓர் உதாரணம். ஒரு நாள் நல்ல வெய்யில். அலுமினிய பாத்திரம் விற்பவன் தன் பாத்திரங்களை இறக்கிவைத்துவிட்டு தன் முகத்தில் அரும்பிய வியர்வையை துடைத்துக்கொள்கிறான்.  அவன் இளைப்பாறியது ஜீயர் மட வாசலில்.

“என்னப்பா வியாபரம் எல்லாம் எப்படி நடக்குது ?” என்று குரல் கேட்டு திரும்பி பார்க்கிறான். கேட்டது அழகியசிங்கர்.

“காலையிலிருந்து சுத்தியது தான் மிச்சம்.. வியாபாரம் ஒண்ணுமில்லை”

ஜீயர் உடனே அலுமினிய பாத்திரம் மொத்தத்தையும் விலைபேசுடா என்று ஆணையிடுகிறார்.

சிஷ்யர்களுக்கு ‘அலுமினிய பாத்திரத்துக்கும் மடத்துக்கும் சம்பதம் இல்லையே?” என்று யோசிக்க

நமது வேலையாட்களுக்குக் கொடு அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்” என்று சொல்கிறார்.


ஸ்வாமி தேசிகனின்  வைராக்கியம் எல்லோரும் அறிந்தது.  தன் ஆயுள் முழுவதும் ஸ்வாமி தேசிகன் உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்க்கை நடத்தினார். ஸ்ரீ தேசிகனின் இளமைத் தோழரான வித்யாரண்யர் அரசருடைய ஆதரவு பெற்றிருந்தார். ஸ்வாமி தேசிகனின் ஏழ்மையைப் போக்கி இவரையும் செல்வந்தராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ராஜ சபைக்கு வருமாறு பத்திரிக்கையை அனுப்பினார். ஸ்வாமி தேசிகன் அதற்குப் பதிலாக ‘வைராக்கிய பஞ்சகம்’ என்று ஐந்து ஸ்லோகங்கள் எழுதினார்.   அதில் ’மூதாதையர்கள் காட்டிய வரதராஜர் என்ற பேரருளாளப் பெருஞ்செல்வம் இருக்க நான் எதற்குக் கையேந்த வேண்டும்?’ எனக்கு ஸ்ரீ வரதனே ‘ராஜன்’ என்பது தான் ஸ்ரீ தேசிகனின் வைராக்கியம்.

நம் ஆசாரியர்களின் வாழ்க்கையில் வைராக்கியத்தைப் பல இடங்களில் பார்க்கலாம். ஸ்ரீ வைஷ்ணவத்தில் வைராக்கியம் பெருமாளிடம் மட்டும் இல்லாமல் ஆசாரியர்களிடம் அதிகமாக இருக்க வேண்டும்.

கூரத்தாழ்வான் பார்வை இழந்து மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார்.அப்போது ஒரு நாள் பெரிய பெருமாளைச் சேவிக்கச் சென்றவரைக் கோயில் வாசலில் காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

“ராமானுஜ சம்பந்தம் உள்ளவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது மன்னரின் உத்தரவு. உங்களுக்கும் ராமானுஜருக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்களேயானால் கோயிலுக்குள் போகலாம்”

அதற்குக் கூரத்தாழ்வான் ”பெருமாளின் சம்பந்தத்தை விட என் ஆசாரியன் ராமானுஜ சம்பந்தமே முக்கியம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இது எல்லாம் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த விஷயங்கள். 21ஆம் நூற்றாண்டு விளிம்பிலும் இந்த மாதிரி வைராக்கியத்தை 44ஆம் அழகிய சிங்கரிடம் பார்க்கலாம்.

முக்கூர் அழகியசிங்கர்   ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை முடித்தபிறகு கோபுரம் கட்டியதற்குக் கோயில் மரியாதை ஏற்க மறுத்துவிட்டார். காரணம் ஸ்ரீரங்கம் கோயிலில் வேதாந்த தேசிகனுக்குக் கிடைக்காத மரியாதை தனக்கு வேண்டாம் என்ற ’தேவு மற்று அறியேன்’ வைராக்கியம் !  இன்னொரு உதாரணம் அழகிய சிங்கருக்கு இயற்றிய கிரந்தத்துக்கு ஸ்ரீமதே ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம திவ்ய பாதுகா சேவகா” என்ற பட்டம் கொடுத்தார்கள். ஆனால் தன் ஆசாரியனுக்கு அந்தப் பட்டம் இல்லை, அடியேனுக்கு அது வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

அழகியசிங்கர் கூறிய ஒரு சுலபமான அருள்மொழியுடன் நிறைவு செய்யலாம்.


நல்ல காரியங்கள் செய்யும் போது மனம் அதை விட்டு நழுவினால், ‘தொழுதெழு என் மனனே’ என்றபடி கஷ்டப்பட்டு பெருமாளின் திருவடிகளிலேயே அதை ஈடுபடுத்தியிருக்க வேண்டும். ‘என் மனம் நல்ல விஷயங்களிலேயே ஈடுபடும்படி அனுக்கிரகிக்க வேண்டும்’ என்று பகவானிடம் அடிக்கடி பிரார்த்தனை செய்ய வேண்டும்  பகவதாராதனம் செய்யும் போது மனம் நிலைத்திருக்காது. அப்போது மனம் வேறு விஷயங்களை நினைத்தால் பகவானுக்கு அர்ச்சனை செய்த திருத்துழாய் தளத்தை வலக் காதில் வைத்துக் கொண்டு ஆராதனம் செய்தால் மனம் அநேகமாக வேறிடத்தில் செல்லாது. மனதைச் சுலபமாக அடக்க முடியும். அப்படி அடக்கும் போது பகவானை மஹாலக்ஷ்மியோடு நினைக்க வேண்டும். ஜயம் உண்டாகும்.


இந்த அழகிய சிங்கர் 35 சாதுர்மாஸ்யங்கள் அனுஷ்டித்தவர். 16.8.92 ஞாயிற்றுகிழமை காலை 10.50க்கு திருநாட்டுக்கு எழுந்தருளினார். 

’கோபுர ஜீயர்’ என்று அழைக்கப்பட்ட ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கரின் திருநட்சத்திரம் இன்று

- சுஜாதா தேசிகன்
ஆவணி ஹஸ்தம்
2-9-2019 அன்று எழுதியது. 
கோபுர படங்கள் நன்றி: அரவிந்தன், எதிராஜன். 





Comments

  1. தனியன் என்று நீங்கள் சாதரணமாகச் சொல்லி சென்றுவிட்டீர்கள். என் போல கத்துக்குட்டி வைஷ்ணவர்களுக்கு அதைப் பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லை, தெரிந்துக் கொள்ள தேடினால் பல விசயங்கள் இருக்கிறது! தமிழை வைஷ்ணவர்கள் எந்தளவு நேசிக்கிறார்கள், எப்படி அள்ளி அள்ளி பெருமாளுக்கு படைத்திருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஓர் சான்று. விருப்பமிருப்பவர்கள் படிக்கலாம்:
    http://www.vdssabha.org/taniyan-meaning-significance-of-the-term-taniyan
    http://vallinam.com.my/version2/?p=3742
    https://aroonkumar1990.blogspot.com/2014/07/blog-post_29.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். தனியன் பற்றி பல விஷயங்கள் இருக்கிறது. ஆழ்ந்து நோக்கினால் இதைப் பற்றி தனி கட்டுரையே எழுதலாம்.

      Delete
  2. 🙏🙏🙏🙏
    Though I read it before, it’s a great pleasure to read it again. Thank you Swamy

    ReplyDelete
  3. ஆசாரியன் திருவடிகளே சரணம்.
    அருமையான படைப்பு.

    ReplyDelete
  4. Thanks for the video too. Though we might have seen in doordarshan it is pleasure seeing here. For me I can say I am blessed to have darshan of three azhagiya singhars (44,45 and 46) and astonished that they are down to earth that they reach to the devotees to give prasad. 44th during my childhood (10 years) we used to go daily when he camped in Chennai as the camp was on the way to school. Still in pleasant memory. 45th azhagiya singhar I got darshan in thiruvendhipuram during our visit unexpectedly. 46th azhagiya singhar recently when mahapurush made visits in TN and I got darshan in Madurai.

    ReplyDelete
  5. நன்றி தேசிகன்.
    அருமை.

    பல விஷயங்கள் 54 வயசு எனக்கு இதுவரை தெரியவில்லை. அக்கறையோடு எழுதி பகிர்ந்ததற்கு வந்தனமு.. " தனியன்" குறித்து தயவுசெய்து எழுதவும்.

    ReplyDelete
  6. நல்லதொரு படைப்பு. நன்றி கலந்த வணக்கங்கள்.

    ReplyDelete
  7. 🙏🙏 முக்கூர் அழகியசிங்கர் ஸ்வாமி திருவடிகளே சரணம். இதில் பல பகுதிகள் படித்த ஞாபகம். ஆனால் இந்த வீடியோ பார்த்த ஞாபகம் இல்லை. அடடா, 85 -92 வயதில் இந்த உறுதியும், உயரம் சென்று மேற்பார்வை பார்ப்பதற்கும் என்ன மனோபலம் வேண்டும்! தன்யோஸ்மி!

    ReplyDelete
  8. Excellent information. Reading it blessed by the acharyans. HARE Krishna. Om namo baghavadey vasudevaya

    ReplyDelete
  9. அருமையான பதிவு!ஆச்சார்யன் கருனையின்றி யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது அந்த மகானின் அனுபவத்தை நேரிலேயே அனுபவித்தது போல இருக்கிறது !ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !

    ReplyDelete
  10. பழைய கட்டுரையானாலும் அருமை🙏🙏🙏

    ReplyDelete
  11. அழகிய கோபுர சிங்கர் --- அவருக்கு அரங்கன் கட்டளை அருளி அமைத்த கோபுரம் --
    உங்கள் பதிவு இந்த இரண்டையுமே நேரில் கொண்டுவந்து அனுபவிக்க வைத்தது .. தன்யோஸ்மி .. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  12. மன்னிக்கவும், எதற்காக தேசிகருக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் மரியாதை தரவில்லை?

    ReplyDelete
  13. பர்ணிகாசிரமம் என்றால் என்ன

    ReplyDelete
  14. அவர் திருவடிவாரத்தில் பிறந்து வளர்ந்தவள் அடியேன்,அவர் திருநாட்க்கு ஏளும்போது அங்கேயிருந்து அழுதிருக்கேன் மீண்டும் அதே நினைவுடன் வாஸித்து அழுதுண்டே இதை எழுதுகிறேன்,எங்களுக்கு அவரே ந்ருஸிம்ஹம் அவரே எல்லாமும்

    ReplyDelete

Post a Comment