தொடை நடுங்கி - 1
‘சரியான தொடை நடுங்கி’ என்ற சொல்லை நிச்சயம் நாம் எல்லோரும் கேட்டிருப்போம். தொடை நிஜமாக நடுங்குமா ? அல்லது ’தலை கால் புரியவில்லை’ என்பது போல இதுவும் ஒரு சொற்றொடரா ?
தொடை நடுங்கும். எனக்கு நடுங்கியிருக்கிறது. எப்படி என்று சொல்லுகிறேன்.
பதினைந்து வருடம் முன், பெங்களூர் வந்த புதிது. புது கார் வாங்கினேன். பொன்வண்டு போலப் பளப்பாக இருந்தது. ஓட்டுநர் உரிமம் +12 லீவில் ஒரு அம்பாசிடர் கார் ஓட்டிக் காண்பித்தபோது ’பிழைத்துப் போ’ என்று கொடுத்தது.
”நீங்களே வீட்டுல டிராப் செய்துவிடுங்கள்” என்று கார் வீட்டுக்கு வந்தது.
ஒரு வாரம் ஸ்டார்ட் செய்து விடியற்காலை யாரும் இல்லாத சமயம் அடுக்குமாடிக்குடியிருப்பை ஒரு வட்டம் அடித்துவிட்டு பார்க் செய்துவிடுவேன். ஒரு நாள் கொஞ்சம் தைரியம் வந்து அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு சென்றேன்.
ஒரு வாரத்துக்குப் பிறகு பெங்களூர் சாலைகள், சிக்னல், எஃப் எம் வானொலியில் ‘Sakkath Hot Magaa’ எல்லாம் பழக்கப்பட்டது. எல்லாம் நன்றாகச் சென்று கொண்டு இருந்த சமயம். அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அன்று மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பியபோது தூறல். காரை மழையில் ஓட்டிப் பார்க்கலாம் என்று ஓட்ட ஆரம்பித்தேன். கொஞ்சம் நேரத்தில் கார் கண்ணாடி எல்லாம் பனி படிந்து சினிமா ஹீரோ விரலில் ‘ஐ லவ் யூ’ எழுதும்படி ஆகிவிட்டது.
ஆட்டோ ஓட்டுநர்போல ஒரு கையில் கண்ணாடியைத் துடைத்துக்கொண்டு குத்துமதிப்பாகத் தவழ்ந்து, மேம்பாலம்மேல் ஏறினேன்.
அன்றைய மழையில் எனக்கு முன் பல வண்டிகள் வரிசையாக நின்றுகொண்டு இருக்க என்னுடைய வண்டும் மெதுவே மேலே ஏறியது. பக்கத்திலிருந்த யானை, காண்டாமிருகம் எல்லாம் வண்டே தள்ளிப் போ என்று கல் உரலில் மாவை அலட்சியமாகத் தள்ளிவிடுவது போலத் தள்ளிவிட்டுச் சென்றது.
பொறுமையாகத் தத்தித் தத்தி மேலே சென்றேன். காரை மேலே செலுத்த முற்பட்டபோது அது வழுக்கி கொண்டு கீழே சென்றது. எனக்குப் பின்னாடி இருப்பவர்கள் எல்லாம் கீச்மூச் என்று ஹரன் வழியாகத் திட்ட. ஹாரராக இருந்தது. பிரேக் பிடித்தேன். கார் நின்றது. எஞ்சினும் நின்றது. மீண்டும் ஸ்டார்ட் செய்து கிளப்பினேன். இந்த முறை கீச்மூசுடன் கிய்யா முய்யாவும் சேர்ந்து கேட்டது.
அப்போது தான் டேஷ்போர்டு பக்கம் சிகப்பாக ஒரு லைட் எறிந்துகொண்டு இருந்தது தெரிந்தது. இரண்டு நாளாக எறிந்துகொண்டு இருக்கிறதே அதனால் தான் கார் பின்னாடி போகிறதா என்று நினைக்கும்போது கார் செங்குத்தாக நின்று Gravity on Inclined Planes என்ற பாடத்தின் பிராக்டிகல் வகுப்பை மழை எனக்கு நடத்திக்கொண்டு இருந்தது.
“என்ன சார் எப்படி நிற்கறீங்க.. கார் ஓட்டத் தெரியாதா ?” என்று என் பின்னாடி ஹரன் அடித்துச் சலித்து போனவர் வெளியே வந்தார்.
“கார் நின்றுவிட்டது” என்று சொன்னபோது இவ்வளவு நேரம் நான் செய்த சர்கஸ் வேலையைப் பார்த்துச் சந்தேகமாக ”ஸ்டார் செய்யுங்க” என்று டெஸ்ட் வைத்தார்.
தொண்டையில் கிச்கிச் என்பது போல ஓசை மட்டும் கேட்டது.
“சார் காரில் பெட்ரோல் இல்லை...இந்த இண்டிகேட்டரை பாருங்க” என்றார்
இரண்டு நாளாக எனக்குப் பழகிய அந்த விளக்கு எறிந்துகொண்டு இருந்தது… ( ஓ அது ரிசர்வ் இண்டிகேட்டரா ? என்று நினைத்துக்கொண்டேன் )
“எப்ப ரிசர்வ் வந்தது ?”
”சரியா தெரியலை.. இரண்டு நாள் என்று நினைக்கிறேன்... ”
அவர் கடுப்பாகி குடும்ப கட்டுப்பாடு மாதிரி முக்கோண பட்டனை அழுத்து மஞ்சள் விளக்கை எல்லா இடங்களிலும் கண்சிமிட்ட செய்து போக்குவரத்தை கட்டுப்பாடு செய்துவிட்டுச் சென்றார்.
மேலே Gravity on Inclined Planes என்று சொன்னேனே அந்த இடத்தில் தான் தொடை நடுங்கியது.
மழையா, காரின் ஏஸி குளிரா என்று தெரியாது ஆனால் உடம்பு முழுக்க ஒரு விதமான மன அழுத்தம் அதனால் உடம்பு ஸ்டெடியாக ஆனால் இரண்டு தொடைகளும் ஆட்டின் தாடி போல ஆடியது.
நம் உடம்பு மிகவும் சிக்கலான ‘fight-or-flight’ தருணத்தில் அட்ரினல் ஹார்மோன்களை அதிகரிக்கும் என்று மருத்துவரீதியாக விளக்கம் கொடுத்தாலும் நம்மாழ்வார் சொன்ன
”நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே” என்பதன் அர்த்தம் அன்று புரிந்தது.
போகிறவர்கள் எல்லாம் என்னைப் பார்த்துக்கொண்டு சென்றார்கள். திரௌபதி துகில் உறியப்பட்டபோது அனைவரும் வேடிக்கை பார்க்கும்போது எப்படி உணர்ந்தாலோ அதே போல உணர்ந்தேன்.
மழையில் பெட்ரோல் பங்க் தேடி, பாட்டிலில்.. .... வீடு வந்து சேர்ந்தேன் இல்லை என்றால் இன்னொரு தொடை நடுக்கும் சம்பவத்தை எழுதியிருக்க முடியாது - அதைப் பற்றித் தொடை நடுங்கி இரண்டாம் பாகம் !
- சுஜாதா தேசிகன்
உவமை உவமானம் மற்றும் நம்மாழ்வார் மேற்கோள் இவைதான் உங்கள் highlight.
ReplyDeleteஇரண்டு நாளாக எறிந்துகொண்டு இருக்கிறதே => "எரிந்து" கொண்டு
ReplyDelete