Skip to main content

தாதி லோபா

தாதி லோபா


எங்கள் அலுவலக லிப்ட் இயக்குபவரிடம்  ”உங்கள் பெயர் என்ன ?” என்று ஒரு முறை கேட்டேன். உடனே அவர் முகத்தில் மகிழ்ச்சி ரேகை தென்பட்டு, எப்போது என்னைப் பார்த்தாலும் இன்முகத்தோடு வரவேற்பார். 

இந்த  ’உத்தியை’ என் அப்பாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். மார்கெட்டில் காய்கறி விற்கும் எல்லோர் பெயரும் அவருக்குத் தெரியும். பூக்காரி, காய்கறி காரன் என்று நாம் அன்றாட உபயோகிக்கும் வார்த்தைகள். அவர்கள் பெயர்களைக் கேட்பதில்லை. 

திவ்ய தேச மூலவர், உற்சவர்களை ‘பெருமாள்’ என்று பொதுவாகச் சொன்னாலும் மூலவர், உற்சவருக்கு தனித்தனி பெயர்கள் இருக்கிறது. ஆண்டாள் திருப்பாவையில் ’செல்வச் சிறுமீர்’ என்று பல தோழிகளை அழைத்தாலும் அவர்களுக்கும் ’லலிதா’, ’விசாகா’ ...என்ற பெயர்கள் இருக்கிறது. 

நாம் பெயர் தெரியாதவர்களை ‘ஹே’ அல்லது ‘ஹலோ’ என்று அழைப்பதைப் போல மாடுகளை ‘ஹே’ என்று அழைக்கிறோம். ஆனால் கண்ணன் மாடு மேய்க்கும்போது எல்லா மாடுகளையும் பெயர் சொல்லித் தான் அழைப்பானாம்.  கண்ணனின் தோழிகள், தோழர்கள் மட்டும் இல்லை கண்ணனின் செல்லப் பிராணிகளான நாய் குரங்கு, மயில், காளை, கிளி, பசுமாடு, அன்னப் பறவை போன்றவற்றுக்கும் பெயர்கள் இருக்கிறது.  

சமீபத்தில் திருக்குறுங்குடிக்குச் சென்றபோது அங்கே மிக அழகான வெண்ணெய் திருடும் கண்ணன் சிற்பம் ஒன்றைக் கண்டேன். கண்ணன் வெண்ணெய் திருடும் அழகை என்னைப் போல  ஒரு குரங்கும் ரசித்துக்கொண்டு இருந்தது.  (அந்தச் சிற்பத்தைப் பார்த்தால் இடது ஓரத்தில் அந்தக் குரங்கு உங்களுக்குத் தெரியும்.)

திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் பாசுரத்தில் ஒரு பகுதி இது :

ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே
ஓராதவன் போல் கிடந்தானை கண்டு அவளும்
வாரா தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு
ஆர்ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே
தீரா வெகுளியளாய் சிக்கென ஆர்த்து அடிப்ப
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும்

மண் குடம் நிறைய ஃபிரஷான கடைந்த  வெண்ணெய் வைத்துக் கண்ணன் திருட வரும்போது அவனைக் கையும் களவுமாகப் பிடிக்க  யசோதை ஒளிந்துகொண்டு காத்திருக்கிறாள். 

ஏதோ சின்ன வேலை விஷயமாகச் சென்ற வெளியே சென்ற சமயம் பார்த்துக் கண்ணன் உள்ளே புகுந்து கடைந்த வெண்ணெய்யை தன் திருத்தோள்கள் தாழிகளினுள்ளே அடிவரை செல்லுமாறு தன் திருக்கரங்களை விட்டுத் துழாவி அதில் உள்ள வெண்ணெய்யை எடுத்து முடித்து,  எல்லா பானையும் காலி செய்து,  திருப்தி ஏற்படாமல் மேலும் தேட, ஒன்றும் அகப்படாமல், அருகே இருந்த மோர்க்குடத்தை உருட்டிவிட்டு ஏதுமறியாதவன் போலப் படுத்துக் கொண்டான்.

கண்ணன் வெண்ணெய்யை திருடிக்கொண்டு இருக்கும்போது,  யசோதை பார்த்துவிடுகிறாள். உடனே கையில் மத்தை எடுத்துக்கொண்டு துரத்துகிறாள். கண்ணன் ஓடுகிறான். யசோதை கொஞ்சம் உடல் பருத்தவள் அதனால் மூச்சு வாங்குகிறது, இருந்தாலும் துரத்துகிறாள். கண்ணன் நேராகப் பத்ரிக்கு ஓட அங்கேயும் யசோதை வர.... கண்ணன் கீழே இறங்கி சாளக்கிராமத்துக்குச் சென்று அங்கே கருப்பாகப் பல சாளக்கிராமத்தோடு தானும் ஒரு சாளகிராமாக ஒளிந்துகொள்ள யசோதை அங்கேயும் வந்து இருப்பதிலேயே கருப்பாக உள்ள கண்ணனை கண்டு பிடிக்கக் கண்ணன் தெற்கே திருக்கண்ணபுரத்துக்கு வருகிறான். இங்கேயும்  மாட்டிக்கொண்டு விடுவோம் என்று நேராக ஒன்றும் தெரியாகக் குழந்தைபோல ஸ்ரீரங்கத்துக்கு வந்து படுத்துக்கொள்கிறான். 

அங்கே வந்த யசோதை வெண்ணெய் நாற்றம் அடிக்கக் கண்டுபிடித்து “இவ்வளவு வெண்ணெய்யையும் நீயா சாப்பிட்டே ? என்று சந்தேகமாக அவன் கண்ணத்துக்குப் பக்கம் மூக்கை கொண்டு செல்ல வெண்ணெய் வாசனை! 

இத்தகைய திருட்டுச் செயலைச் செய்தது நீதானா ? என்று அங்கே ஊரார் எல்லாம் கூடிய இடத்தில் உரலுடன் ‘கண்ணி நுண்சிறுத் தாம்பினால்’ கட்டிப்போடுகிறாள். 

யசோதை போல வாசனையை வைத்துக் கண்டுபிடித்தவர்  திருப்பாணாழ்வார் ”கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவரந்தானை” என்கிறார்.  இன்றும் ஸ்ரீரங்கம் சென்றால் பெரிய பெருமாளை சேவிக்கும்போது இந்த வெண்ணெய் வாசனை வரும். 


இப்போது மீண்டும் கண்ணனுடன் இருக்கும் அந்தக் குரங்கு குட்டியிடம் வரலாம். கண்ணனுடன் இருக்கும் இந்தக் குரங்கின் பெயர் ‘தாதி லோபா’. சமீபத்தில் கேஷவ் அவர்களின் படத்தைப் ( முகப்பு படம் ) பார்த்தபோது இவை எல்லாம் ஞாபகம் வந்து, எழுதினேன்.  

தாதி லோபா - குரங்குபோல மற்ற கண்ணனின் மற்ற செல்லப் பிராணிகளின் பெயர்கள்.  

ப்ரம்மராகா - நாய் ; பத்மாகந்தா - காளை ; தக்‌ஷா - கிளி ; தாண்டவிகா -  மயில்; பிஸங்கி - பசு மாடு ;கலஸ்வனா - அன்னப் பறவை 

- சுஜாதா தேசிகன்
ஓவியங்கள் : நன்றி கேஷவ் 


Comments

  1. Those animals and birds had been divinely blessed to have had propinquity with Kutty Krishnan. No wonder Sri Krishna addressed them by their names. That is His Sowlabhyam and Sowseelyam !

    ReplyDelete
  2. arpudham. Dadhi paandavan is the person who helped Kannan to hide in a big pot correct?

    ReplyDelete

Post a Comment