ரோஜாவுடன் பார்த்தசாரதி பல வருடங்களுக்கு முன் புகுந்த வீட்டுக்குள் காலடி வைக்கும் புதுமணப்பெண் போல் முகநூலில் நுழைந்த சமயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பன்னீர் ரோஜாவுடன் பிரமாதமாகக் காட்சி அளித்தார். யாரோ ஓர் அன்பர் அந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தார். படத்தை ஆராய்ந்ததில் ஓரத்தில் ’Vishnumayam’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. படத்தை யார் எடுத்தார் என்று விசாரித்தேன். யார் என்று தெரியவில்லை. பிறகு சில வருடங்கள் கழித்து ’Vishnumayam’ முகநூல் பதிவரிடம் “உங்கள் படங்கள் அருமை” என்று மெசேஜ் அனுப்பினேன். பதிலுக்கு “மிக்க நன்றி. உங்கள் எழுத்தை நான் விரும்பிப் படிப்பேன் என்றார்” பிறகு அவர் பகிரும் படங்களை ரசித்து “படங்கள் அருமை” என்று இரண்டு வார்த்தைப் பாராட்டுவேன். ஒரு நாள் இருவரும் தொலைப்பேசியில் பேசினோம். அப்போது அவரிடம் அந்த ரோஜா பார்த்தசாரதி படங்களைக் குறித்துச் சொன்னேன். அதைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்து அறையில் மாட்டிக்கொள்ள ஆசை என்றேன். சந்தோஷமாகக் கேட்டுக்கொண்டார். பிறகு பல வருடங்கள் அவ்வப்போது அவர் படங்களை ’லைக்’ செய்து அவருடைய தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டேன். சென்ற வருட