28-இராமானுசன் அடிப் பூம்மன்னவே - அனந்தபுரம் திருவரங்கத்தில் மாலை சூரியன் அன்று வேகமாக கீழே இறங்கியது. ஆளவந்தார் உறக்கம் கலைந்து எழுந்துகொள்வது போலப் பரபரப்பாக காணப்பட்டார். காரணம் பெருமாள் புறப்பாட்டுக்கு நேரமாகிவிட்டது. “அடடா! காலட்சேபத்தில் நேரம் போனதே தெரியவில்லை நமக்காக அழகியமணவாளன் காத்துக்கொண்டு இருக்க மாட்டானே!” என்று ஆளவந்தார் அவசரமாக நடக்க தொடங்கினார். வீதியில் எதிர்கொண்டு வந்தவர் ஒருவர் அவரை சேவித்துவிட்டு “பெருமாள் வீதி புறப்பட்டை ஆரம்பித்துவிட்டார்!” என்று கூற நடை ஓட்டமாக மாறியது. சிலர் ”அழகியமணவாளன் சாத்துப்படி காண கண் கோடி வேண்டும்!” என்று அரங்கனை காண ஓடினார்கள். மாடமாளிகை வீதியில் வாசலில் பெண்கள் வெள்ளை அரிசி மாவில் கோலமிட்டு காத்துக்கொண்டு இருந்தார்கள். சிறுவர்கள் தத்தம் தந்தையின் தோள் மீது ஏறிக்கொண்டு நம்பெருமாளைத் தரிசிக்க ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தார்கள். வயதானவர்கள் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள். எல்லோர் வீட்டிலும் வெள்ளித் தட்டில் வெற்றிலையுடன், வாசனையான மல்லிகை, திருத்துழாயுடன், தோட்டத்துப் பழங்களை நம்பெருமாள...