Skip to main content

22. இராமானுசன் அடிப் பூமன்னவே - கிழிந்த ஓலை

 22. இராமானுசன் அடிப் பூமன்னவே - கிழிந்த ஓலை 

ஒப்பற்ற பெருமைப் பொருந்திய நாதமுனிகளின் திருக்குமாரரது புதல்வனைக் காணவேண்டும் என மணக்கால் நம்பி காட்டுமன்னார் கோயில்  நோக்கிப் புறப்பட்ட அதே சமயம் வீர நாராயணபுரம் ஏரிக்கரையில் அழகிய தோட்டத்துடன் அமைந்த ஒரு குடிசையின் திண்ணையில் இருந்த பீடத்தில் மஹாபாஷ்ய பட்டர்  விசேஷச் சாஸ்திரங்களை அவருடைய மாணவர்களுக்கு உபதேசிக்க, அவற்றை எல்லாம்  உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு இருந்த மாணவர்கள் குரு சொல்லுவதை வேகமாக எழுத்தாணிக் கொண்டு ஓலையில் எழுதிக்கொண்டு இருந்தார்கள். அதில் ஒரு மாணவன் எதையும் எழுதாமல் கேட்டுக்கொண்டு இருந்தான். அந்த மாணவன் வேறு யாரும் இல்லை நாதமுனிகளின் பேரனான யமுனைத்துறைவர் தான். 

குரு பாடம் சொல்லுவதை நிறுத்திவிட்டு ஒரு கேள்வி கேட்டார். மாணவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து விடை தெரியாமல் முழிக்க, யமுனைத்துறைவர் மின்னல் வேகத்தில் பதிலைக் கூறினார். 

மஹாபாஷ்ய பட்டர் உள்ளம் மகிழ்ந்து “யமுனைத் துறைவா! உன் பதில்களைக் கேட்டால் நீ ஒரு தனிப் பிரகிருதி என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறது! உம் பாட்டனாரும் உம் தந்தையும் இதைக் கேட்டிருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்” என்று பாராட்டை முடிப்பதற்கு முன் அரண்மனை சேவகன் ஒருவன் குதிரையில் வந்து இறங்கினான். ஒரு கையில் கூர்மையான ஈட்டியும் இடுப்பில் ஓர் ஓலையும் இருந்தது. 

அந்தச் சேவகன் பட்டரை வணங்கிவிட்டு “பண்டிதரே சோழ அரசனின் தூதுவனாக வந்துள்ளேன். அரசர் இந்த ஓலையை தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லியுள்ளார்!” என்று  ஓலையை அவரிடம் கொடுத்தான். 

ஓலையில் எழுதியிருந்ததைப் படித்த பட்டரின் முகத்தில் கவலை ரேகை குடிகொண்டது. குருவின் முகம் வாடியதைக்  கண்ட மாணவர்கள் ஓலையில் என்ன செய்தியோ என்று வருத்தத்துடன் பார்க்க,யமுனைத்துறைவர் குருவின் கையிலிருந்து ஓலையை வாங்கி படித்தார். அதில் 

“பூமி முழுவதும் தாங்கும் அரசனுக்கு குருவாக இருக்கும் என்னை வணங்கி உடனே கப்பம் செலுத்த வேண்டும். இது  உலகம் போற்றும் அரச குருவான ஆக்கியாழ்வான் ஆணை!” என்று அதில் எழுதியிருந்தது. 

“பண்டிதரே! கப்பப்பணத்தை தாங்களிடமிருந்து பெற்று வர வேண்டும் என்பது அரச ஆணை. உடனே  தர வேண்டுகிறேன்” என்றான் அந்தத் தூதுவன்.

இதைக் கேட்ட  மஹாபாஷ்ய பட்டர் மனம் வலிமை இழந்து அப்படியே பூமியில் சரிந்தார். தரையில் கிடந்த குருவைக் கண்ட யமுனைத்துறைவர் “குருவே! யார் இந்த ஆக்கியாழ்வான் ? தங்களுக்கு எதற்குக் கப்பம் கட்டும் ஓலை அனுப்பப்பட்டது ? தாங்கள் எதற்குக் கப்பம் கட்ட வேண்டும்?  அதற்கான காரணத்தை சொல்லுவீராக” என்று வினவினார். 

“யமுனைத் துறைவனே! அரச குருவான ஆக்கியாழ்வான் உலகில் உள்ள நூல்கள் அனைத்தையும் படித்து அறிந்துள்ளான். அதனால் அவனுக்கு அரசனிடம் மிகுந்த செல்வாக்கு. அச்செல்வாக்கினால், அவனுக்கு அடிபணிந்து மற்ற புலவர்களும், பண்டிதர்களும் அடங்கி ஒடுங்கி அவனை வணங்கி கப்பம் செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். அவனுக்கு என் போன்ற பலர் பல காலமாகக் கப்பம் கட்டி வருகிறோம். இன்றைக்கு வந்த ஓலைச் சீட்டும் அத்தகையது தான். இன்றைய உணவுக்குக் கூட அடியேன் குடிசையில் நெல் இல்லை! இப்படிக் கப்பம் கட்ட சொல்லி நெருக்குகிறான். என் செய்வேன்!” என்றார் சாஸ்திரங்கள் நன்கு அறிந்த மஹாபாஷ்ய பட்டர். 

குரு கூறியவற்றைக் கேட்ட யமுனைத்துறைவர் உள்ளம் தீக்காடு போன்று கொழுந்துவிட்டு எரிந்தது. மன உறுதியுடன் ஆக்கியாழ்வானது ஓலையைக் கிழித்தெறிந்துவிட்டு தன் இடிப்பில் இருந்த சிறு ஓலையில் ஒரு சுலோகத்தை எழுதி அந்தத் தூதுவனைப் பார்த்து “அப்பனே! இந்த ஓலை தான் கப்பம். நீர் இதை அரசவைப் புலவன் என்று சொல்லிக்கொள்ளும் ஆக்கியாழ்வானிடம் விரைவாகக் கொண்டு சேர்ப்பீராக” என்றார் புன்னகையுடன்.  

அரசத் தூதுவன் செய்வது அறியாமல் அந்த ஓலையை எடுத்துக்கொண்டு குதிரையில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். 

அந்த ஓலையில் எழுதியிருந்த சுலோகத்தின் கருத்து “புலவனே! நாங்கள் கவிஞர்கள் மாத்திரமல்ல, சாஸ்திரப் பாடங்களைக் கற்றவர் மட்டுமல்ல, உங்களைப் போல எதிர்வாதம் புரியும் மதம் மிக்க யானையை அதன் மத்தகத்தைப் பிளக்க வல்லமையுடைய சிங்கங்களாக இருக்கிறோம். இதை நீ உன் அறிவுக் கொண்டு அறிவாயாக. இப்படிக்கு மஹாபாஷ்ய பட்டரின் சீடன் யமுனைத்துறைவன்” என்று எழுதியிருந்தது. 

தூதுவனிடமிருந்து ஓலையை வாங்கிப் படித்த ஆக்கியாழ்வான் நடுக்கமுற்று “யார் இந்தப் பாலகன். இப்புவியில் இப்படிப்பட்ட ஒரு புலவன் இருக்கிறானா ?” என்று தன் மனக் கலக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அரசனிடம் நடந்தவற்றை முழுவதும் விவரித்தார். 

அரசனும் புதுமையான இந்தச் சம்பவத்தைக் கேட்டு ஆக்கியாழ்வானிடம் “ கணக்கற்ற கலைகளைக் கற்று அறிந்த அரச குருவே!  இனி இதற்கு யாது செய்ய உத்தேசம் ?” என்றான்.  

”அரசே, மதிப்புமிக்க என் ஓலையைக் கிழித்தெறிந்த அந்தப் பாலகன் தான் சாமானியனல்ல என்று நினைத்து என்னை இழிவு படுத்தியுள்ளான். அரச குருவை இழிவு படுத்தியவன் அரசனை இழிவுபடுத்தியதற்குச் சமம். அவனை உம் அரசவையில் கூப்பிட்டு மற்ற புலவர்கள் காணும்படி அவனைச் சொற்போருக்கு அழைத்து அவனை வென்றால், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்” என்றார். 

“நன்று சொன்னீர் அரச குருவே!” என்று அரசன் “பெருமைமிக்க யமுனைத்துறைவரே விரைவில் வருவீர்களாக” என்று ஒரு வாசக ஓலையைச் சேவகனிடம் கொடுத்து அனுப்பினான். 

தூதுவர் விரைந்து சென்று யமுனைத்துறைவரிடம் “சோழ அரசன் அனுப்பிய ஓலை இது! உடனே புறப்படுங்கள்” என்று அவரிடம் ஒப்படைத்தார். யமுனைத்துறைவர் அதை வாங்கிப் படித்துப் பார்த்து “நல்லது!” என்று அதனை நடுவில் இரண்டாகக் கிழித்து “இது தான் என் பதில் இதை அரசனிடத்திலே கொடுப்பீராக” என்றார். 

அத்தூதுவனும் மிகுந்த அதிர்ச்சியும் கோபமாக இதை எப்படி அரசனிடம் கூறப்போகிறோம் என்று குழம்பிய மனதுடன் கிழிந்த ஓலையை எடுத்துக்கொண்டு குதிரையில் புறப்பட்டுச் சென்று அரசனிடம் நடந்தவற்றைக் கூறினான். 

அரசன் மிகுந்த சினம் கொண்டவனாக முகம் சிவக்க அருகில் இருந்த அரசி “மன்னவரே! நீர் இந்தத் தேசத்துக்கே மேம்பட்டவனாக எப்போதும் தரையில் நடக்காமல் பல்லக்கில் செல்கிறாய். உம்மைப் போல இப்பாலகன் ஞானத்திலே எல்லோருக்கும் மேம்பட்டவனாக இருக்கிறான் அவன் எப்படித் தரையில் நடக்கச் சம்மதிப்பான் ?. இவனுடைய மன உறுதியைப் பார்த்தால் அவன் ஆக்கியாழ்வானின் தலையில் ஏறி மிதிக்க வல்லவனாக இருப்பான் என்று தோன்றுகிறது! அவனுக்கு ஓர் அழகிய பல்லக்கை நீர் கொடுத்தனுப்புங்கள்” என்றார் 

மன்னனும் அவ்வாறு கட்டளையிட, பல்லக்கு யமுனைத்துறைவருக்கு அனுப்பப்பட்டது. ராஜ சபையை வந்தடைந்த யமுனைத்துறைவர் பல்லக்கிலிருந்து இறங்காமல் ஓர் ஓலையைக் கொடுத்தனுப்பினார். 

ஓலையை வாங்கிய ஆக்கியாழ்வான் அதைப் படித்து கோபாவேசம் கொண்டு “இப்படி எழுதி அனுப்பிய இந்தப் பாலகனை நான் வாதப் போரில் வென்று அவன் தலை மீது ஏறிக் கிழித்தெறிய போகிறேன்” என்று அரசனிடம் அவ்வோலையைக் கொடுத்தார். 

அந்த ஓலையில் எழுதியிருப்பதை அரசன் சபையில் படித்தான். 

“மின்னல் போன்ற ஒளிவீசக் கூடிய மலையரசனின் மகளான பார்வதியின் தளிரடி பெற்றுச் சிறந்து விளங்கும் இமயமலை முதல், அன்னம் போன்ற நடையை உடைய சீதை பிராட்டி அரக்கனால் அபகரிக்கப்பட்டு அவளின் திருமுகம் மலர்வதற்குக் காரணமான சேது வரையிலும், சந்திர சூரியர் இருவரையும் தலை அலங்காரமாகக் கொண்ட உதயகிரிக்கும் அஸ்தமகிரிக்கும் நடுவில் எந்தச் சாஸ்திரத்திலும் என்னை ஒத்தவர்கள் ஒருவரைத் தேடுங்கள். தேடினாலும் கிடைக்க மாட்டான்!” என்று எழுதியிருந்தது. 

இதைப் படித்த அரசன் ”யமுனைத்துறைவரே! என் ராஜகுருவான ஆக்கியாழ்வானிடம் வாதம் புரிவீராக! வாருங்கள்” என்று அழைத்தான். 

பல்லக்கிலிருந்து வெளியே வந்த யமுனைத்துறைவர் “மன்னரே! வெற்றி தோல்வியை நன்கு உணரக்கூடிய ஆற்றல் படைத்த புலவர்கள் நடுநிலைமை வகித்துத் தீர்ப்பளிக்கப் பலரை அழைத்துவிடுவாயாக!” என்றார்

அரசனும் ”நல்லது அப்படியே ஆகட்டும்” என்று தேசத்தில் உள்ள புலவர்களும், பண்டிதர்களும் அரசக் கட்டளையை ஏற்று சபைக்கு வந்தார்கள்.  

அரசனும் அரசியும் ராஜ சபையில் பேரார்வத்துடன் வீற்றிருக்க “வாதப்போர் தொடங்கட்டும்!” என்று கூறி சைகை காட்டிய அரசன் ”ஆகியாழ்வானை வாதத்திலே வெல்லும் திறமை படைத்தவர்கள் இந்தப் பூலோகத்தில் இல்லை. அச்சிறுவன் அப்படி வென்றுவிட்டானாகில் அவனுக்கு நான் பாதி ராஜ்யத்தை தருகிறேன்!” என்று அரசியைப் பார்த்துக் கூறினான். அரசி புன்னகையுடன் “அரசே! யாமுனன் தோற்றானாகில் பட்டத்து அரசி என்ற என் பதவியைத் துறந்து உமக்கு நான் வேலை செய்யும் பணிப் பெண்ணாகிறேன் !” என்றாள். 

கோபத்துடன் கண்கள் சிவந்த ஆக்கியாழ்வானும், ஞான ஒளியுடன் கூடிய யமுனைத்துறைவரும் வாதிட தங்கள் இருக்கையில் அமர்ந்தார்கள். 

யமுனைத் துறைவர் ஆக்கியாழ்வானைப் பார்த்து “கல்வி அறிவு இல்லாமல், வாக்கு வன்மையைக் கொண்டு செருக்குடன் புதிய வரிகளை விதித்து என் குரு போன்ற சான்றோர்களை வதைத்து வயிறு வளர்க்கும் ஆக்கியாழ்வானே! நீ நன்கு ஆராய்ந்து என்னிடம் கேள்விகளைக் கேட்பாயாக நான் உமக்கு விடையளிப்பேன்!” என்றார் 

“பாலகனே! சாஸ்திரங்களிலும், கவிதைகளிலும், மற்றும் உள்ள கலைகளிலும் வல்லவன் நான். சிறுவனே நீ உண்டு என்று எதைச் சொன்னாலும் நான் இல்லை என்று சாதிக்கும் வல்லமை பெற்றவன். நீ இல்லை என்றால் நான் உண்டு என்று சொல்லும் ஆற்றல் பெற்றவன். வெற்றிக்கு அடையாளமாக வென்றவன் தோற்றவன் தலையில் ஏறிக்கொள்ள வேண்டும். உன் தலையில் ஏறி  உன்னை வாட்டி வதைப்பதற்குள் என் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுப் பிழைத்து ஓடிவிடு!” என்று மிகுந்த செருக்குடன் ஆக்கியாழ்வான் கூறினான். 

இந்த வார்த்தைகளைக் கேட்ட யமுனைத்துறைவர் பெரிதும் சிரித்து ”இவ்வுலகில் உன்னைப் பெற்றெடுத்த தாய் மலடி அல்ல; மிக்க பெருமையை உடைய நம் அரசன் தார்மிகன் ஆவார் ; அரசவையில் தாயாகிய  இருக்கும் அரசி குற்றமற்ற கற்புடைய பெண் ஆவாள். இந்த மூன்று வாக்கியங்களையும் மறுத்துச் சொல்லுவாயாக. பிறகு நாம் மேற்கொண்டு விவாதிக்கலாம்!” என்றார் 

சபையில் உள்ள ஆக்கியாழ்வான் வாய் மூடி மௌனமாக ‘என் தாய் மலடியே’ என்று மறுக்க வேண்டும் எப்படி மறுப்பது  என்று செய்வதறியாமல், அடுத்த வாக்கியமான ‘அரசன் தார்மிகன் இல்லை’ என்று மறுத்து அரசனுடைய சீற்றத்துக்கு இலக்காக வேண்டும் என்று  நடுங்கி, கடைசி வாக்கியத்தை ‘அரசி கற்புடையவள் இல்லை’ என்று கூறினால் தன் தலை துண்டிக்கப்படும்... எப்படி இவற்றை மறுக்க முடியும் என்று மனம் சோர்ந்து உட்கார்ந்தான். 

புலவர்கள் எல்லோரும் யமுனைத்துறைவர் வெற்றி பெற்றார் என்று அறிவித்து, வெற்றி சின்னமாக வென்றவன் தோற்றவன் தலையில் ஏறிக்கொள்வது என்று தீர்ப்பு வழங்கினார்கள். 

யமுனைத்துறைவர் “ராஜகுருவாகவும், உயர்குலத்தில் பிறந்த அந்தணராகவும் இருக்கும் உம் தலையில் ஏறுவது முறையாகாது. என் குரு எனக்கு உபதேசித்த பாடம் இது ஆக்கியாழ்வானே ! இனியாவது நீர் உமது செருக்கை உணர்வீராக!” என்றார். ஆக்கியாழ்வான் வெட்கி தலை குனிந்து யமுனைத்துறைவரை வணங்கி நின்றார். 

அரசன் “யமுனைத் துறவரே உம் புலமையை மெச்சினோம். நீ கூறிய வாக்கியங்களை உம்மால்  மறுத்துப் பேச இயலுமா?” என்று கேட்டார். 

யமுனைத் துறைவன் “முடியும் அரசே ! ஒரு மரமும் தோப்பல்ல ஒரு பிள்ளையும் பிள்ளையல்ல என்கிற உலகவழக்கின்படி முதல் வாக்கியத்தை மறுக்கலாம். குடிகள் செய்யும் பாபம் அரசனைச் சேரும். பரம தார்மிகனாக எந்த அரசனும் குடிகள் செய்யும் பாபத்திலே பங்கு பெறுகிறானாகில் அவன் எப்படித் தார்மிகனாக இருக்க முடியும் ?  நான் தோற்றுவிடுவேன் என்று நீங்கள் சொன்னதை அரசி மறுத்துப் பேசினாள். கணவனின் சொல்லை மறுத்துப் பேசுவது பத்தினி தர்மத்துக்குப் பங்கம் அல்லவா ?” என்றார். 

இதைக் கேட்ட அரசன் வியந்து நிற்க, அரசி அளவற்ற அன்போடு எழுந்து “என்னை இன்று ஆளவந்தீரோ!” என்று யமுனைத்துறைவரைத் தன் பிள்ளையைப் போல எடுத்து அணைத்துக்கொண்டாள். அரசனும் “இந்த ராஜ்யத்தில் பாதியை உமக்குத் தந்தோம்!” என்றான். 

புது அரசனை வரவேற்க ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. 

ஊருக்குள் வந்த மணக்கால் நம்பி ஊரோ அல்லோல கல்லோலபட்டுகொண்டு இருப்பதை கண்டார்.  இல்லங்கள் வாயிலில் கோலங்களும், வாழைத் தோரணங்களும் கட்டி அலங்கரித்துக்கொண்டிருந்தார்கள். வாசலில் தோரணம் கட்டிக்கொண்டிருந்தவரிடம்  “இன்று என்ன விசேஷம் ?” என்று புரியாமல் மணக்கால் நம்பி கேட்க ”சிறுபாலகன் ஆக்கியாழ்வானை தோற்கடித்து அரசனாகிவிட்டான். அவர் பெயர் ஆளவந்தார்!” என்றார். 

அச்சமயம் “ஆளவந்தார் வாழ்க!” என்று கோஷம் கேட்டது. எல்லோரும் பரபரப்பாகத் தெருவின் ஓரத்துக்கு நகர்ந்து வழிவிட்டார்கள். தூரத்தில் பட்டத்து யானையில் சகல மரியாதைகளுடன் மேலே ஒரு பாலகன் அமர்ந்து இருந்தார்.

“ஆளவந்தார் வாழ்க! வாழ்க!” என்று சிறப்புப் பெயரை மக்கள் துதிக்க ’ஆளவந்தார்’ என்ற கோஷம்  பேரொலியாக உருவெடுத்தது. 

ஆளவந்தார்  தம்முடைய மனைவி மக்களுடன் ஜெயம் கொண்ட சோழபுரத்து அரண்மனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அக்காட்சியை மரத்தடியில் நின்றுகொண்டு மணக்கால் நம்பி பார்த்தார். கருணை பொருந்திய முகத்துடன், மின்னுகின்ற பூணூலை அணிந்த மார்பினை உடைய அந்த அந்தணச் சிறுவன் தான் நாம் தேடிக்கொண்டு வந்த பெருமை பொருந்திய நாதமுனிகளின் பேரனான  யமுனைத்துறைவர் என்று புரிந்துகொள்ளச் சற்று நேரமானது. 

உய்யக்கொண்டார் தம்மிடம் கடைசியில் கூறிய வார்த்தைகள் அவர் நினைவிற்கு வந்தது.  தீர்மானமாக எதிர்த் திசையில் இருக்கும் வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வேகமாக நடக்க ஆரம்பித்தார் மணக்கால் நம்பி. 

பயணம் தொடரும்.... 
- சுஜாதா தேசிகன்
14-12-2020


Comments