Skip to main content

3. பாவை குறள் - உத்தமன்

3. பாவை குறள் - உத்தமன் 


ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்.

மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திரிவிக்கிரமனின் நாமத்தைப் பாடினால், நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும் (அதனால்), செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும். அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும்.பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று வள்ளல்களைப் போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்கக் குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும் என்கிறாள் ஆண்டாள். 

பெருமாளின் பத்து அவதாரங்களிலே  2-in-1 அவதாரம் வாமன, திரிவிக்கிரம அவதாரங்கள். வாமனன் என்றால் அழகியவன் என்று பொருள். அழகிய பிரம்மச்சாரி + நல்ல குணம் உள்ள ஒருவனைத் தான் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவாள். அப்படி ஒருவன் உண்டு என்றால் அது வாமனன் தான். 

ஆண்டாள் அழகியமணவாளனைக் கைப்பிடிக்கத் திருவரங்கம் வருகிறாள். காவிரிக் கரையைக் கடந்து திருவரங்கம் தெற்குவாசல் உள்ளே நுழைகிறாள். அங்கே இரண்டு திருக்கைகளுடன் அழகிய பிரம்மச்சாரி பெருமாளான திருக்குறளப்பனை நின்ற திருக்கோலத்தில் பார்த்தவுடன் 

பொல்லா குறள் உருவாய் பொன் கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாக_அணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே

என்கிறாள் - வாமனனாய் அழகிய கையாலே நீரை ஏற்று பிக்ஷை பெற்று எல்லா உலகங்களையும் அளந்த பெருமான் தான் நல்லார்கள் வாழ்கிற குளிர்ந்த திருவரங்கத்தில் ஆதிசேஷனைப்  படுக்கையாகக் கொண்ட நளிர் அரங்கர்! ஒன்றுமில்லாதவளான என்னைக் கொள்ளைகொள்வதைப்போலே இருக்கிறான் என்று அந்த அழகிய பிரம்மச்சாரி திருக்குறளப்பனையே திருவரங்கச்செல்வனாக நினைத்துப் பாடிய பாசுரம் இது.

உலகளந்த பெருமாளை ஆழ்வார்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். பத்தே பாசுரங்கள் பாடிய திருப்பாணாழ்வார் ‘உவந்த உள்ளத்தனாய் உலகமளந்த அண்டமுற’ என்று மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம் என்ற உவப்பிலேயே உயர்ந்தான் ! உலகளந்தான் ! என்கிறார். 

திருமழிசையாழ்வார்  திருச்சந்தவிருத்தத்தில் 

அறிந்தறிந்து வாமனன்
அடியினை வணங்கினால்
செறிந்தெழுந்த ஞானமோடு
செல்வமும் சிறந்திடும்
மறிந்தெழுந்த தெண்டிரையுள்
மன்னுமாலை வாழ்த்தினால்
பறிந்தெழுந்து தீவினைகள்
பற்றறுதல் பான்மையே

அதாவது நன்றாகப் புரிந்து கொண்டு தெளிவாகத் தெரிந்து கொண்டு திருகுறளப்பனான வாமனனை வணங்கினால் ஞானமும் செல்வமும் கிட்டும், தீவினைகள் நீங்கும் என்கிறார். 

திருக்குறள், திருகுறளப்பன் என்ற வார்த்தைகளில் ஒற்றுமை இருப்பதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். 

திருவள்ளுவமாலையில் ‘பரணர்’ என்ற புலவர் பாடிய பாடல் இது. 

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுவதும் நயந்தளத்தான் – வாலறிவின்
வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாமளந்தார் ஒர்ந்து.

திருமால் குறளாய் தோன்றி இரு பேரடியால் உலகனைத்தையும் அளந்தான்; திருவள்ளுவர் தம் குறளின் இரு சிற்றடியால் மக்களின் எண்ணங்கள் எல்லாவற்றையும் அளந்தார் என்கிறார் புலவர். 

பெருமாள் தன்னை அண்டியவர்களின் துயரத்தைப் பொறுப்பதில்லை. இந்திரனின் கண்ணீரைக் கண்டு வருந்தி, அவனுக்காக வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் கை நீட்டி பிச்சை எடுத்தார். வள்ளுவர் பிச்சை எடுப்பதை

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

அதாவது தாகத்தில் தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமெனக் கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை என்கிறார் வள்ளுவர். அப்படி இருக்க பெருமாள் பக்தனுக்காக யாசகம் கேட்டார் என்றால் அவனுடைய சீல குணத்தை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும் ? ’உத்தமசீலன்’ என்று நாம் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை இங்கிருந்து தான் வந்தது. திருவரங்கத்து அமுதனார் இராமானுச நூற்றந்தாதியில் ‘வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே’ என்று வாமனன் போன்ற சீல குணத்தை உடைய இராமானுசன் என்று கூறுகிறார். 

ஆண்டாள் முப்பது பாசுரத்தில் மூன்று இடங்களில் அன்று ஓங்கி உலகளந்த உத்தமனின் திருவடிகளைப் போற்றுகிறாள் ( ஓங்கி, அன்று, அம்பரமே ). 

உத்தமன் என்றால் என்ன ? மூன்று உலகங்களிலும் ஆத்மாவாக உள்ளிருந்து அவைகளைத் தாங்கி நியமனம் செய்து, எந்தக்  குறையுமில்லாமல் இருப்பவனே பரமாத்மா. அவனே உத்தமப் புருஷன் என்கிறது கீதை. 

இந்த உத்தமன் உலகை அளந்த பொழுது அவன் திருவடி படாத இடமே இல்லை. நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பாகுபாடே இல்லாமல் அனைத்து உயிர்களின் மேலும் தன் திருவடிகளை வேகமாக வைத்து அருள் புரிந்தான். 

இதைத் தான் வள்ளுவர்

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை இடைவிடாது சிந்திப்பவர்களுக்கு எந்தக் காலத்திலும் துன்பம் இல்லை என்று அந்த உத்தமனைத் தான் வள்ளுவரும் கூறுகிறார். 

ஆண்டாள் அந்த உத்தமனின் திருவடிகளைப் போற்றினால் அரசன் நல்லாட்சி செலுத்தினால் நாடு எப்படி வளம் பெறுமோ அது போல வளம் பெரும் என்கிறாள். வள்ளுவர்

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் சோம்பல் இல்லாத அரசன் அடைவான் என்கிறார். நல்லாட்சி செய்தால் அவனுக்கு மூவுலகங்களையும் அளந்த திருமால் போன்ற எல்லாம் கிடைக்கும்.  ஆனால் நல்லாட்சி புரியவில்லை என்றால் ? வள்ளுவர் இப்படி விவரிக்கிறார்

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவ மழை பொய்க்கும் என்று கூறிவிட்டு இன்னொரு குறளில் 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

என்கிறார். நாட்டைக் காக்கும் அரசன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் குறையும். அந்தணர்கள் அறநூலாகிய வேதங்களை மறந்துவிடுவார்கள் என்கிறார். 

ஆண்டாள் ஓங்கி உலகு அளந்த உத்தமன் திருவடியைப் போற்றினால் ‘தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து’  ’வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ பெற்று நீங்காத செல்வம் நிறையும் என்கிறாள். 

- சுஜாதா தேசிகன்
17-12-2020
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art 





Comments