Skip to main content

12. பாவை குறள் - பனி

 12. பாவை குறள் - பனி



கனைத்து இளங் கற்று-எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி,
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைக் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்;
இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்து — ஏலோர் எம்பாவாய்

எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும் இதனால் வீடு முழுவதும் சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே ! பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள் உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம். இராவணனைக் கொன்ற இராமனைப் புகழ் பாடுகிறோம் நீ வாய் திறவாமல் தூங்குவதை எல்லா வீட்டினரும் அறிந்து விட்டார்கள்.

மழை பெய்யும் போது சில சமயம் வேகமாக அடிக்கும் ‘பேய் மழை’ என்று நாம் ஒதுங்கிவிடுவோம். சில சமயம் மெதுவாக, இதமாக ஸ்பிரே செய்வது போல அதில் நனையலாம் என்ற ஆசை உண்டாகும்படி பெய்யும். அந்த மாதிரி ஒரு மழை தான் இந்தப் பாசுரத்தில் வருகிறது. 

திருப்பாவையில் ஆண்டாள் மூன்றாம் பாசுரத்தில் ‘தீங்கின்றி’ மழை வேண்டும் என்று உத்தமனிடம் பிராந்தனைச் செய்து,  ’ஆழி மழைக் கண்ணா’ என்ற நான்காம் பாசுரத்தில் வருணனிடம்  ‘வாழ உலகினில் பெய்திடாய்’ என்று ஆணையிட அந்த அந்த மழை பன்னிரண்டாம் பாசுரத்தில்( இந்தப் பாசுரத்தில் ) பெய்கிறது.  


இப்பாசுரத்தில் மழை எங்கே வருகிறது என்று யோசிக்கலாம். ‘பனித் தலை வீழ’ என்பது மார்கழி மாதம் காலைப் பனி இல்லை அது மழை. ஆண்டாள் வேண்டிக்கொண்டது போல் குளிர்ச்சியான மனதுக்கு இனிதான மழை. 

பொய்கை ஆழ்வார் ‘நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து பாயும் பனி மறுத்த பண்பாளா’ என்கிறார். அதனால் பனி என்பது மழை என்று புலப்படுகிறது. 

பனி என்பது ஆனந்தக் குளிர்ச்சியான மகிழ்வையும் குறிக்கும். வள்ளுவர் 

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்

காதலன் இல்லத்துக்கு இன்னும் வரவில்லை. காதலி சொல்லுகிறாள் -  குளிர்ச்சி(பனி) அரும்பி துன்பம் கொள்கின்ற மாலைப்பொழுதைக் கண்டால் காதலன் இல்லாமல் உயிர்  வாழ்வதில் வெறுப்பு வருகிறது. 

தொண்டரடிப்பொடி ஆழ்வார் ‘செவாய் கண்ணனை கண்ட கண்கள் பனி அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே’ - கொவ்வைக் கனி வாயையுடைய கண்ணனைக் கண்ட விழிகளில் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் கண்ணனை மறைத்து விடுகிறது. கண்ணனை கண்ணாரக்கண்டு களிக்கமுடியவில்லையே! என்று ஏங்குகிறார். 

ஆண்டாள் மழையே வா என்றால் எப்படி மழை வருகிறது ? 

வள்ளுவர் குறள் இது 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

வேறு தெய்வம் தொழாமல்,  தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுகிறவள் ‘பெய்’ என்று ஏவல் செய்ய மழை பெய்யும் என்கிறார். 

இராமாயணத்தில் அனுமார் வாலில் அரக்கர்கள் வைத்த தீ கொழுந்துவிட்டு எரிகிறது. அரக்கிகள் இதைச் சீதா பிராட்டியிடம் கூறுகிறார்கள். அதைக் கேட்ட பிராட்டி உள்ளம் துடித்து ‘கற்பு என்பது இருக்குமாயின் நீ அனுமானுக்குக் குளிர்ந்து இரு’ என்று தீயை ஏவினாள். தீயின் தர்மம் சுடுவது, ஆனால் ஸ்ரீராமர் ஒருவனையே தன் தெய்வம் என்று கொண்ட கற்பே வடிவமான சீதை தீயை ஏவியவுடன் அந்த அக்னி அனுமனிடம் பணிவுடன் நின்றது என்கிறார் வால்மீகி. 

’என் வாலின் நுனியில் நிலைகொண்ட தீ என் மேல் பனி பெய்தது போல் நிலை கொண்டது’ என்று அனுமன் வாக்காக வால்மீகி கூறுகிறார்ல் 

‘சிசிரம்’ பெய்தது என்பது அனுமார் மொழி. சிசிரம் என்னும் சொல்லுக்குப் பனி குளிர் சீதம் என்பது பொருள். சீதம் என்ற சொல் பனி என்னும் குளிர்ச்சி.

கம்பராமாயணத்தில் அனுமார் ஸ்ரீராமரிடம் சீதையைப் பற்றிக் கூறும் போது ‘கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக்கொண்டேன் என்று விவரிக்கிறார். சீதையைக் கற்பு என்றே அனுமார் கூறுகிறார். 

ஸ்ரீவேதாந்த தேசிகன் ’ஏகபத்நீ ஸமாக்யா’ என்கிறார் ( ’ஏகபத்நீ விரதன்’ என்கிறோம்)/  இந்தச் சொல் ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும் கற்பை குறிக்கும்.  இச்சொல் சீதை ஒருவளையே குறிக்கும் பெயர் என்று போற்றுகிறார் ஸ்வாமி தேசிகன். வள்ளுவரின் ‘கொழுநன் தொழுதெழுவாள்’ என்ற தமிழ்ச் சொல்லே ’ஏகபத்நீ ஸமாக்யா’

’குளிர்ந்து சுடுதீயே’ என்று  சீதைப்பிராட்டி ஏவலின் வலிமையால் சுடும் இயல்பை உடைய தீ அனுமனிடம் ’பெய்யெனப் பெய்யும் மழையாக’ குளிர்ச்சியாக பெய்தது. 

சீதை அசோகவனத்தில் ஸ்ரீராமரையே எப்போதும் தியானம் செய்தவண்ணம் கற்பே சீதையின் வடிவெடுத்து நின்றது என்கிறது இராமாயணத்தில். 

ஆண்டாள் கண்ணை ‘கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்’ என்று வணங்கினாள்.  பூமிப் பிராட்டியின் அம்சமான சீதை என்ற ஆண்டாள். 

வருணனே ‘பெய்திடாய்’ என்று ஏவினால், வருணன் கை கட்டிக்கொண்டு பனி தல வீழ மழை பொழிந்தான் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லையே!

அயர்வறும் அமரர்கள் அதிபதியான ’மனதுக்கு இனியானை’ துயரறு சுடரடி தொழுதால் நம் மேல் அவன் அருள் என்ற மனதுக்கு இனிமையான குளிர்ச்சி பனி விழும் !

- சுஜாதா தேசிகன்
27-12-2020

கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art



Comments