Skip to main content

14. பாவை குறள் - நாவுடையாய்

14. பாவை குறள் - நாவுடையாய் 


உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர்  வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்:
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்!  எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய்.

உங்கள் வீட்டு பின்புறக்குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து விட்டன அல்லி மலர்களின் வாய்கள் மூடிக்கொண்டு விட்டன காவி ஆடை அணிந்த வெண்மை பற்களுடைய துறவிகள் தங்கள் கோயில்களுக்கு சங்கூதப் போகிறார்கள் எங்களை முன்னதாக எழுப்புவதாக வீண் பெருமை பேசும் பெண்ணே வெட்கமில்லாதவளே, பேச்சு மட்டும் இனிமையாகப் பேசுபவளே ! சங்கு சக்கரம் தரித்த விசாலமான கையையுடைய கமலக்கண்ணனைப் பாட வேண்டும் எழுந்திரு என்கிறாள் ஆண்டாள். 

இதில் மிக அழகான மூன்று வரிகள் இருக்கிறது. 

செங்கழுநீர்  வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்:
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;

பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூலில் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் சில வரிகளை இங்கே தருகிறேன். 

…...பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட, வள மனைப்
பூந்தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயர...
துனைஇய மாலை துன்னுதல் 

இதன் பொருள் 

பல இடங்களில் இடையர்கள் ஆம்பல் என்னும் பண்ணினை இனிய குழலில் ஊதவும், ஆம்பல் மலர்களின் அழகிய இதழ்கள் கூம்பவும், செல்வமுடைய இல்லங்களில் உள்ள அழகிய வளையல்களை அணிந்த பெண்கள் விளக்கை ஏற்றவும், அந்தணர்கள் அந்திக் கடனை ஆற்றவும் …...விரைவாக மாலைப் பொழுது நெருங்கி வருதலுக்கு உள்ள அடையாளங்களைக் கூறுகிறது. 

ஆம்பல் மலர்கள் கூம்புவதும், அந்தணர்கள் அந்திக் கடனை ஆற்றச் செல்வதும் விரைவில் மாலைப் பொழுது நெருங்கி வருதலைக் காட்டுகிறது என்று திருப்பாவையிலும், குறிஞ்சிப் பாடலிலும் ஒன்றாக வருவதைப் பார்க்கலாம். 

ஆண்டாள் காலை செங்கழுநீர் பூத்துப் பல காலம் ஆகி மாலைப் பொழுதும் வருவதற்கான அடையாளமாக ஆம்பல் மலர்கள் கூம்பியிருக்கிறது, அந்தணர்கள் கூட தங்கள் அனுஷ்டானங்களை செய்யக் கிளம்பிவிட்டார்கள் இன்னுமா எழுந்திருக்கவில்லை என்று அழைப்பது போலவும் இதை எடுத்துக்கொள்ளலாம். 



குறிஞ்சிப் பாட்டில் இடையர்கள் மாலைப் பொழுதில் புல்லாங்குழல் இசைக்கிறார்கள் என்றும் வருகிறது. வள்ளுவர் 

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை

ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புபோல் வருத்தும் மாலைப் பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும் படையாக வருகின்றது என்று காதலி நொந்துக்கொண்டு சொல்லுவதாக அமைத்துள்ளது இக்குறள். 

அடுத்து இந்தப் பாசுரத்தில் நாவுடையாய் - நல்ல நாவன்மை படைத்த பெண்ணே எழுந்துகொள் என்று ஆண்டாள் கொஞ்சம் ’ஃபிரண்டிலியாக’ எழுப்புகிறாள். 

நாவன்மை பெற்றவர்களுக்குத் தகுந்த மரியாதை கொடுக்க வேண்டும் என்று ஆபஸ்தம்பர் கூறியிருக்கிறார். வள்ளுவர் 

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை

வில்லை ஏராக உடைய வீரருடன் பகை கொண்டாலும், சொல்லை ஏராக உடைய நாவன்மை பெற்ற அறிஞருடன் பகைகொள்ளக் கூடாது என்கிறார் 

நாவுடைய என்ற சொல் அனுமாருக்கே பொருந்தும் என்று நம் ஆசாரியர்கள் இந்தப் பாசுரத்தில் கூறியிருக்கிறார்கள். 

அனுமாரை முதலில் சந்திக்கும் ராமர், லக்ஷ்மணனிடம் அனுமாரின் சொல்வன்மையை பார்த்து “இவன்(அனுமர்) பேசும்போது கவனித்தாயா ? நம்மோடு பேசும் போது அவன் முகத்திலோ, கண்களிலோ, நெற்றியிலோ புருவங்களிலோ எந்தத் தோஷங்களும் இல்லை, அதாவது முகத்தைச் சுளித்தல், கண்களை மேலே உயர்த்துதல் கீழ் நோக்குதல், கைகளை ஆட்டுதல் முதலிய அசைவுகள் எதுவும் இல்லை. 

லக்ஷ்மணா ! இவனிடம் பூர்ணமான நற்குணங்கள் நிறைந்திருக்கிறது. எல்லாச் சாஸ்திரங்களையும் கற்ற அறிவு இவன் சொல்லில் தெரிகிறது. இவனைப் போல இந்த உலகில் இன்னொருவனைக் காண்பது அரிது. எனவே தம்பி லக்ஷ்மணா ! இவனை அவமதியாது உருவத்தைப் பார்த்து ஏளனம் செய்யாது மிக்க  கௌரவத்துடன் நீ பேசுவாயாக!” என்று அறிவுரை கூறுகிறார். 

வள்ளுவர் 

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது. ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று என்கிறார். இந்தச் செல்வம் அனுமாரிடம் இருந்தால் தான் அனுமாருக்குச் சொல்லின் செல்வர் என்ற திருநாமம். 

அன்மாரே இராமாயணத்தை நகர்த்திச் செல்லும் அச்சாணி போன்றவர். 

ராமர் ‘ எனவே தம்பி லக்ஷ்மணா இவனை அவமதியாது உருவத்தைப் பார்த்து ஏளனம் செய்யாது மிக்க  கௌரவத்துடன் நீ பேசுவாயாக!’ என்ற கருத்தை அப்படியே வள்ளுவர் இந்தக் குறளில் தருகிறார். 

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

உருளும் பெரிய தேர்க்கு அச்சிலிருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர். அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக் கூடாது என்கிறார். 

ஸ்ரீராம தூதன் என்ற பெயரும் அனுமாருக்கு உண்டு. ஒரு தூதுவன் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். 

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும் என்கிறார் வள்ளுவர் 

திருவள்ளுவர் சமணராக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சுஜாதா உட்படப் பலரின் கருத்து.  சமண நூல் என்று பார்க்கப்படும் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவையில் வரும் இந்தப் பாடல் படித்தால் இது இன்னொரு ஆழ்வார் பாடலோ என்று வியக்கும் வண்ணம் இருக்கிறது. 

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி என்ற பாடலில் 

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே

அறியாமை தங்கிய உள்ளத்தினையுடைய மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சச் செயல்களை வென்றவனும், நான்கு திக்குகளிலும் உள்ளோர் யாவரும் போற்றவும் தன் பின்னே தொடர்ந்து வந்து வேதங்கள் முழங்கவும், பாண்டவர் பொருட்டுத் துரியோதனாதியரிடம் தூதாக நடந்து சென்றோனும் ஆய கண்ணனை, ஏத்தாத நா என்ன நாவே ? நாராயணா என்று கூறப் பெறாத நா என்ன பயன் பெற்ற நாவாகும். நாராயணா என்று கூறாத நா ஒரு நாவே இல்லை என்கிறார் இளங்கோவடிகள். 

ஆண்டாள் மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று நாவுடையாய் இருக்க வேண்டும் என்கிறாள். 

- சுஜாதா தேசிகன்
29-12-2020
கட்டுரை ஓவியம் அமுதன் தேசிகன்
முகப்பு படம் நன்றி : Srishti - Tales of Teerthams & Kshetrams
கடைசிப் படம் : நன்றி: Upasana Govindarajan Art







Comments