21 - இராமானுசன் அடிப் பூமன்னவே - தாமரை
’பரமபதத்துப் படிக்கட்டுகள் தெரிகிறது’ என்று உய்யக்கொண்டார் கூறியதைக் கேட்ட மணக்கால் நம்பி மிகவும் விசனப்பட்டு எதுவும் செய்யமுடியாமல் தவித்தார். மற்ற சீடர்களும் மிகவும் வருந்திய சமயம் மணக்கால் நம்பி “எந்தையே! தேவரீர் திருநாட்டுக்கு எழுந்தருளி விட்டால் பின்பு உயர்ந்த நம் சம்பிரதாயத்தை ஊற்றத்துடன் நடத்த வல்லவர்கள் யார் ?” என்று வேதனை நெஞ்சத்தினைச் சுட மனமழிந்து அழுதுக்கொண்டு கேட்டார் மணக்கால் நம்பி.
உய்யக்கொண்டார் கருணை மிகுந்த பார்வையுடன் மணக்கால் நம்பியை நோக்கி “நம்பியே! ’பருத்தி பட்ட பன்னிரண்டு படல்’(1) என்பது போல, பருத்தி கொட்டை வாங்கி, பன்னி, சுருட்டி, நூலாக்கி, பாவோடி, நெய்து, மடித்து விற்றுப் பொகடும்படியும், தோய்த்து உலர்த்தி, உடுத்து, கிழித்து விடும்படியும் மனிதருக்கு உரியதாக்குவர். அப்பருத்தியைப் போல் நீர் எமக்குப் பன்னிரண்டு வருடங்கள் இடைவிடாது சகல ஆசாரிய தொண்டு புரிந்தீர். நீரே நம் சம்பிரதாயத்துக்கு தலைமை ஏற்று ஆசாரிய பீடத்தை அலங்கரிக்கக் கடவீர்! நம்மிடத்தில் வந்து சேர்ந்த சீடர்கள் எல்லோரையும் ஒற்றுமையாய் விளங்கச் செய்து வழி நடத்த என் ஆசிகள் உமக்கு என்றும் உண்டு” என்றார்.
உய்யக்கொண்டாரின் திருவடிகளில் விழுந்தார் நம்பி, அவரை தழுவிக்கொண்டு “நம்பியே செவி சாயும்” என்று காதில் மெதுவாக ஒரு விஷயத்தைக் கூறினார்.
மணக்கால் நம்பி ஆசாரியன் கூறியதைக் கேட்டு அவர்கள் இருந்த அறையின் கதவுகளைத் தாழிட்டுவிட்டு, உய்யக்கொண்டார் திருவடியில் வந்து அமர்ந்தார்.
”நம்பியே! ஒப்பற்ற சொட்டைக் குலத்தில் உள்ள நாதமுனிகளுக்கு மகனாய் ஞான ஒளிமிக்க ஈஸ்வர முனிகளுக்கு வீரநாரயண பெருமாள் திருவருளால் ஒப்பற்ற திருக்குமாரன் வந்து பிறப்பார். தன் பேரனுக்கு ‘யமுனைத் துறைவன்’ என்ற திருநாமத்தைச் சூட்ட வேண்டும் என்பது நாதமுனிகளின் விருப்பம். யமுனைத்துறைவருக்கு நம் சம்பிரதாயத்திலுள்ள சிறந்த பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சகலத்தையும் உபதேசிக்கும்படி நாதமுனிகள் தமது அந்திம காலத்தில் அடியேனுக்கு இட்ட கட்டளை. அக்கட்டளையை நிறைவேற்றும் பாக்கியம் எமக்குக் கிட்டவில்லை. அந்தப் பேறு உமக்கு கிட்டியுள்ளது” என்று கண்களை மூடி நாதமுனிகளைத் தியானித்து “நம்பியே! திருவாராதனப் பெருமாளுக்குக் கீழே இருக்கும் மரப் பெட்டியை எடுத்து வாரும்” என்றார்
நம்பிகள் ஓடிச் சென்று அப்பெட்டியை எடுத்து உய்யக்கொண்டார் திருக்கையில் கொடுத்தார். உய்யக்கொண்டார் அதிலிருந்து பவிஷ்யதாசாரியர் விக்ரகத்தை நம்பிகள் கையில் பிரசாதமாகக் கொடுத்து “நம்பியே அடியேனுடைய காலத்தில் நாதமுனிகளின் பேரனான யமுனைத் துறைவன் அவதரிக்கவில்லை. அவரை நீர் காணப் போகிறீர். அவருக்குச் சரியான வயது வந்த பிறகு எப்படியாவது நம் சிஷ்யராக்கி ரகசியங்களை உபதேசித்து, உங்கள் திருப்பாட்டானார் விரும்பி ஆராதித்த திருமேனி இது எனக் கூறி இந்த விக்ரகத்தையும் அவரிடம் ஒப்படையும். நாதமுனிகள் சொப்பனத்தில் கண்ட ரூபம் இது என்ற ரகசியத்தை அவரிடம் வெளியிடும்!” என்றார்
மணக்கால் நம்பிக் கையில் பவிஷ்யதாசாரியார் திருமேனியைக் கண்டு அன்று “நாதமுனிகள் கனவில் கண்டு அனுபவித்ததை நாம் அனுபவிக்க பவிஷ்யதாசார்யர் திருமேனி விக்ரகம் இருந்தால் இந்த உலகமே அதன் மீது விழுந்து உய்ய வழி இருக்குமே!” என்று அவர் அன்று நினைத்தது இன்று நிறைவேறியது எண்ணிப் பூரித்தார் ஆனால் அதே சமயம் மணக்கால் நம்பி தன் ஆசாரியன் தன்னை பிரிந்து பரமபதம் செல்ல இருக்கிறார் என்று எண்ணி வருந்தினார்.
உய்யக்கொண்டார் ”தண்ணீரில் இருக்கும் தாமரையைச் சூரியன் மலரச் செய்யும். தாமரை மலர்வதற்கு ஆசாரியன் என்ற நீரும், ஒளி பொருந்திய சூரியன் என்ற எம்பெருமானும் தேவை. ஒரு தாமரை மலர்ந்து வாடும் போழுது, அருகில் ஒரு மொட்டு மலர்வது இயற்கை. மொட்டாக இருக்கும் நீர் தாமரையாக மலரும் நேரம் வந்துவிட்டது. ராமர் விட்டுச் சென்ற சொத்தை பரதன் ஒன்பது மடங்கு பெருக்கியது போல, பவிஷ்தாசாரியார் நம் வைணவ குலத்தில் பல ஆசாரியர்கள் என்ற தாமரைகள் பூத்துக் குலுங்கும் குளமாகப் மாற்றப் போகிறார்” என்றார்.
இதைக் கேட்ட மணக்கால் நம்பி நெகிழ்ந்து தன் கையில் வீற்றிருந்த பவிஷ்யதாசாரியரின் திருமேனியைப் பார்த்துப்
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா
என்று திருமங்கை ஆழ்வார் பாசுரத்தைப் பாடி, கூம்பியிருக்கும் தாமரை மொட்டினை மலர்ச் செய்யும் செங்கதிர் போல இவர் பெரிய அருளுடையவர். இவரைக் கண்டு என் நெஞ்சம் மலர்கிறது. வணங்குகிறது. இவரைப் போல முன்பு கண்டதில்லை. இவருடைய திருக்கண்கள் அழகுமிகு தாமரையாக இருக்கிறது. திருக்கைகளும் தாமரை போல இருக்கிறது. திருமேனியோ விண்ணில் அழகுறப் பொலியும் நீல முகில் போன்றது. இவரது அழகு ஒப்பற்றது. ஐயோ! திருமேனி எப்படி செழிந்துள்ளது!
ஒரு சக்கரவர்த்தி உரிய நகரத்தை அமைக்கும் போது தாமரை வடிவமாய் அமைக்க வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. சிறு கிராமத்தில் வாழும் மக்கள் நற்பண்புகள் நிறைந்த பேரரசர் வாழும் பெரிய நகரம் வந்து சேர்ந்தால் அங்குள்ள அறிஞர்களோடு பழகி நல்லறிவைப் பெறுவார்கள். அது போல பவிஷ்யதாசாரியார் என்ற மகான் துறவியாக இருந்தாலும் முடிசூடிய சக்கரவர்த்தியாகத் திகழ்கிறார். அவருடைய திருவடித்தாமரையே பேரறிஞர் வாழும் ஓர் உயர்ந்த நகரம். அவர் திருவடித் தடத்தை அடைந்துவிட்டால் எம்பெருமானைப் பற்றிய விசேஷ அறிவைப் பெற்று நம் பாபங்கள் விலகும்” என்றார்(4).
மணக்கால் நம்பி கூறியதைக் கேட்ட உய்யக்கொண்டார் கண்களில் நீருடன் பத்மாசன நிலையில் பவிஷ்யதாசாரியர் திருவடிகளைப் பற்றி நாதமுனிகளின் திருவடிகளைத் தியானித்துக்கொண்டு பரமபதம் அடைந்தார்.
மணக்கால் நம்பி பெரும் துன்பக்கடலில் மூழ்கி அலற வெளியே கூட்டமாகக் கூடியுள்ள மற்ற சீடர்கள் எல்லோரும் அறையின் உள்ளே நுழைந்தார்கள். ஒப்பற்ற மணக்கால் நம்பி மணமிக்க தாமரை மணி மாலையை அணிந்தவரான உய்யக்கொண்டாரது திருமேனியை வேதமுறைப்படி திருப்பள்ளிப்படுத்திச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகள் எல்லாவற்றையும் செய்து, தன் சரீரத்தை வெறுத்து துறவறம் மேற்கொண்டார். (5)
நாதமுனிகள் ஏற்படுத்தி வைத்து, உய்யக்கொண்டாரின் கட்டளையின்படி திருவரங்கத்தில் தங்கி வைணவத்தைத் திருவரங்கன் கிருபையால் வளர்த்து வந்தார்.
சில காலம் கழித்தபின்னர் ஒருநாள் மணக்கால் நம்பி பெருமாள் திருமொழியை தன் சிஷ்யர்களுக்கு உபதேசித்துக்கொண்டு இருந்தார். அப்போது திருமகிழ் மாலை மார்பன்(6) என்ற அவருடைய சிஷ்யர் காலட்சேபத்தைக் கலைக்க வேண்டாம் என்று மடத்தின் வாசல் கதவு அருகில் நிற்க, உள்ளே மணக்கால் நம்பி குலசேகர ஆழ்வாரின் பெருமையை இப்படி விவரித்தார்
ஆரம் கெடப் பரன் அன்பர் கொள்ளார் என்று அவர்களுக்கே
வாரங் கொடு குடப் பாம்பில் கை இட்டவன் மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே(7)
”அரசரின் நவரத்ன மாலை ஒன்று கேட்டுப் போக, அதனை ஸ்ரீவைஷ்ணவர்கள் திருடியதாக மந்திரிகள் பழிசுமத்த, ’ஸ்ரீவைஷ்ணவ பாகவதர்கள் என்றும் களவு செய்ய மாட்டார்கள்” என்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு, நல்ல பாம்பு இருக்கும் குடத்தில் கைவிட்டு பாகவதர்களின் பெருமையை உணர்த்தினார்” என்று கூறிய பொழுது அவருடைய சிஷ்யர் மடத்தின் வாசலில் வந்து நிற்பதைக் கண்டு “திருமகிழ் மாலை மார்பனே உள்ளே வாரும்!” என்று அழைத்தார். உள்ளே வந்த சிஷ்யர் மணக்கால் நம்பியின் திருவடியில் விழுந்து
“ஆசாரியரே! ஓர் நற்செய்தி! ஆடிமாத உத்தராடத்திலே ஈஸ்வர முனிகளுக்கு உலகம் நல்வாழ்வு பெறும் வகையில் வைணவ அடியார்கள் செய்த பெரும் புண்ணியத்தால் ஒரு புதல்வன் அவதரித்தான்! வடமொழி வேதங்களைத் தமிழில் அருளிய நம்மாழ்வாரின் திருவடித் தாமரையை வணங்கி வாழ்வு பெற்றவரான நாதமுனிகளின் சொல்லியபடியே ஈஸ்வர முனிகள் தன் குழந்தைக்கு மனமகிழ்ந்து யமுனைத்துறைவர் என்று பெயர் சூட்டினார்.மறுபடியும் இந்த மண்ணுலகில் சரீரம் எடுத்து அவதரித்த நாதமுனிகள் போல அக்குழந்தையின் கண்களில் ஞான ஒளி தெரிந்தது” என்றார்
இதைக் கேட்ட மணக்கால் நம்பி ”நம் மானி(3) திருமகிழ் மாலை மார்பனே ! என்று அவரைத் தழுவிக்கொண்டார். இந்த நல்ல செய்தி வந்த வேளையில் மற்றொரு தீய செய்தியால் திருவரங்கம் பரபரப்பானது.
கலிங்கத் தேசத்து அரசன் ஒருவன் திருவரங்கத்தின் மீது படையெடுத்து வருகிறான் என்ற செய்தி தான் அது(2). இதை அறிந்த கோயில் ஸ்தலத்தார் அழகிய மணவாளனைத் திருவரங்கத்திலிருந்து திரு மாலிருஞ்சோலைக்கு இடம் மாற்ற ஆயத்தமானார்கள். நம்பெருமாள் உப நாச்சிமார்களுடன் அழகரைச் சந்திக்கப் புறப்பட்டார். நம்பெருமாள் புறப்பட்ட பின், திருவரங்கத்தில் வைணவர்கள் அல்லாதவர்கள் குடிபுக ஆரம்பித்தார்கள். நம்பெருமாளுக்குப் பாஞ்சராத்திர முறைப்படி ஆராதனம் செய்துவந்தவர்கள் அரசனின் கொடுமைகளுக்கு அஞ்சி திருவரங்கத்தை விட்டு வெளியேறியிருந்தார்கள்.
சுமார் ஓராண்டுக்குப் பிறகு நிலைமை சரியான பின் அழகியமணவாளன் திருவரங்கம் திரும்பிய பொழுது கோயிலில் திருமாலிருஞ்சோலையில் ஓராண்டுக்கு ஆராதனம் செய்து வந்த வைகானச நம்பிமார்கள் அழகியமணவாளனுடன் திருவரங்கத்துக்குத் திரும்பியபின் உரிய பாஞ்சராத்திரிகள் இல்லாத காரணத்தால் திருவாராதனக் கைங்கரியத்தை வைகானச முறைப்படி மேற்கொண்டார்கள்.
யமுனைத்துறைவர் குழந்தைப்பருவம் கழிந்தபிறகு, ஒப்பற்ற பாலகனாகிய யாமுனனுக்கு பிராமணர்கள் ஒன்று கூடி உபநயனம் பண்ணுவித்து, மஹாபாஷ்ய பட்டரிடம் சாஸ்திரங்களைப் பயிலும் போது தான் கற்று மற்றவர்களுக்கும் பாடம் எடுக்கும் வல்லமை பெற்றவராக, நல்ல ஞாபக சக்தியுடன் ஒரு நாள் கேட்ட மாத்திரத்தில் அவை அனைத்தும் மனதில் நிலைநிறுத்திக்கொண்டு இப்படி ஒரு மேதாவி வேறுயாருளர் ? என்று உலகத்தார் சொல்லி மனம் மகிழ்ந்தார்கள்.
மணக்கால் நம்பி தம்முடைய ஆசாரியரான உய்யக்கொண்டாரின் ஆணைப்படி யமுனைத் துறைவனைத் தகுந்த வயது வரும் போது உபதேசிக்க வேண்டும் என்று காத்துக்கொண்டு இருந்த சமயம், யமுனைத் துறைவர் வேதக் கல்வி பயின்று வருகையில் அவருடைய திருத்தகப்பனார் ஈஸ்வர முனிகள் பரமபதம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் விசனப்பட்டு காட்டுமன்னார் கோயில் நோக்கிப் புறப்பட்டார் மணக்கால் நம்பி
பயணம் தொடரும்...
- சுஜாதா தேசிகன்
06-12-2020
படம் : நன்றி Palani Nithiyan
-----------------------------------------------------------------------------
(1) பெரிய திருமொழி உரையில் வரும் வார்த்தை.
(2) சரியான வருடம் தெரியவில்லை.
(3) மானி - அபிமான சிஷ்யன் என்று பொருள்.
(4) யதிராஜ ஸப்ததியில் ஸ்ரீ வேதாந்த தேசிகன் எம்பெருமானார் மற்றி அருளிய பாசுரத்தின் விளக்கம்.
(5) மணக்கால் நம்பி அவருடைய அவதார ஸ்தலத்தில் திரிதண்டி சந்நியாசத்தில் இருக்கிறார். எப்போது துறவு மேற்கொண்டார் என்ற தகவல் இல்லை.
(6) திருமகிழ் மாலை மார்பன் - இவர் மணக்கால் நம்பியின் சிஷ்யர்.
(7) மணக்கால் நம்பி அருளிய பெருமாள் திருமொழி தனியன்
அருமை....
ReplyDelete