[%image(20071114-fountain_pen.jpg|91|81|null)%] தீபாவளிக்கு சென்னைக்குச் சென்ற போது பட்டாசுச் சத்தத்தின் மத்தியில் விசித்திரமான எண்ணம் வந்தது - அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது!. நல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி, பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன். "இங்க் பென் இருக்கா?" ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார். "சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க" "இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்" வேண்டாம் என்று சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன. இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ? *)