இந்த வருடம் தொகுத்த புத்தகம் இது. சுஜாதாவின் முன்னுரை மற்றும் என்னுடைய சிறு குறிப்பு.
சுஜாதா முன்னுரை
கடைசிப் பக்கங்களின் முதல் தொகுப்பு விசா பதிப்பகத்தினர் வெளியிட்டு மூன்று பதிப்புகள் கண்டது. அது முழுமையான தொகுப்பல்ல. கைவசம் இருந்த கணையாழி இதழ்களில் கிடைத்த 72 பக்கங்களின் தொகுப்பாக வந்தது. கணையாழியின் ஆரம்ப காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள்வரை நான் கடைசிப் பக்கங்களை ஓரிரு இதழ்கள் தவிர தொடர்ந்து எழுதி வந்திருந்தேன். நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் என்னால் தொகுத்திருக்க முடியாது. தேசிகன் இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். கணையாழி இதழ்கள் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, டோரதி கிருஷ்ணமூர்த்தி, வெ. சபா நாயகம், வெங்கடேஷ் போன்ற ஆர்வலர்களிடம் இருந்தன. ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் சில திரட்டுகள் வெளியிட்டார். யாரிடமும் கடைசிப் பக்கங்கள் முழுமையாக இல்லை. மேலும் கடைசிப் பக்கம் என்று சொல்லி முதல் பக்கம், நடுப் பக்கம், பத்தாம் பக்கம் என்று எங்கிலும் எழுதி வந்தேன். சிறுகதைகள் எழுதும்போது நிறுத்திவந்தேன். கோபித்துக்கொண்டால் சில மாதங்கள் விட்டுப்பிடிப்பேன். இதெல்லாம் கடைசிப் பக்கங்களை முழுவதும் தொகுப்பதை சிக்கலான ஒரு தனித்தேடலாக்கின. தேசிகன் அதை மேற்கொண்டார். நான் எழுதிய அத்தனை கடைசிப் பக்கங்களையும் தொகுத்து முடித்து விட்டார். பிரமிக்கத்தக்க சாதனை! எழுத்தாளன்பால் அளவிலாத வாத்சல்யமும் நிறையப் பொறுமை கொண்ட ஒரு வாசகனால் தான் சாத்தியம். என் இனிய நண்பர் தேசிகனுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். எனக்கே என் கதைகளைப் பற்றி எப்போது எழுதினேன், எந்த இதழில் எழுதினேன் என்று சந்தேகம் ஏற்படும்போது அவரைத்தான் கேட்பேன். அந்த அளவுக்கு நான் எழுதியது அனைத் தையும் ஆராய்ந்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார். அவருக்கு இதழ்களை கொடுத்துதவிய அன்பர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும். இந்த தொகுப்பை வெளியிட மனுஷ்ய புத்திரன் பிறந்து வரவேண்டி யிருந்திருக்கிறது. ஆம், மனுஷ்ய புத்திரன் பிறப்பதற்கு முன்பிருந்தே நான் கணையாழியில் எழுத ஆரம்பித்துவிட்டேன். இன்றும் மற்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
என் எழுத்துக்கு புது வாசகர்கள் அவ்வப்போது பிறந்து வருகிறார் கள். இந்த புதிய ஜன்மங்கள்தான் எனக்கு கிடைக்கும் பரிசுகள். இந்தப் பக்கங்கள் அனைத்தையும் பாரபட்சமின்றி முழுமையாக ஒரு வாசகனின் பார்வையிலிருந்து இப்போது என்னால் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்க்கும் எவருக்கும் என் மனமாற்றங்களும் குணமாற்றங்களும் வெளிப்படும். நாற்பது ஆண்டுகளில் ஒருவனுடைய கவலைகள் மாறுகின்றன; பிடிவாதங்கள் தளர்கின்றன; அழுத்தி சொல்லவேண்டிய விஷயங்கள் குறைந்துபோகின்றன. இல்லையேல் என்னை எப்பொழுதோ நிராகரித்திருப்பார்கள்.
கணையாழி தமிழ் இலக்கியப் பத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான முன்னோடி. அதன் வளர்ச்சிக் காலத்தில் கடைசிப் பக்கங்கள் மூலம் கஸ்தூரிரங்கனுக்கு உதவியதில் பெருமைப்படுகிறேன்.
சுஜாதா
சென்னை
டிசம்பர் 2006
முதல் பக்கம்
இது 1965ல் ஆரம்பிக்கப்பட்ட கணையாழி இதழிலிருந்து 1998 வரை உள்ள கணையாழியின் கடைசிப் பக்கங்களின் தொகுப்பு.
முதல் கணையாழி இதழ் 1965 ஜூலை மாதத்தில் புது டெல்லியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. அதே வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் சுஜாதா அவர்கள் ‘ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்’ என்ற பெயரில் கடைசிப் பக்கத்தில் எழுத ஆரம்பித்தார். நீர்க்குமிழிகள், பெட்டி, கடைசிப் பக்கம் என்று பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். ‘கடைசிப் பக்கம்’ நிலைத்துவிட்டது.
கணையாழி 40-பைசா இதழிலிருந்து தொகுக்கும்போது, கிடைத்த அனுபவம் சுவாரசியமானது. திரும்பவும் சுஜாதாவின் எழுத்துகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுஜாதாவின் எழுத்துகளை முழுவதும் படித்த எனக்கு அவர் எல்லை எது என்று தீர்மானிக்க முடிவதில்லை. கணையாழியில் ஹெவியான பல விஷயங்களை லைட்டாகச் சொல்லி யிருக்கிறார். நாட்டுப் பாடல், புதுக் கவிதை, ஹைக்கூ, விவாதங்கள், சங்கீதம், சினிமா, சமகால சமுதாயம், ஆன்மிகம், இலக்கிய விமர்சனம், விஞ்ஞானக் கதை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், என்று எந்த ஒரு எழுத்தாளரிடமும் இல்லாத 'broad spectrum’ இவரிடம் இருக்கிறது.
நான் பிறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் உள்ள இதழ்களிலிருந்து இந்தத் தொகுப்பை ஆரம்பிக்க வேண்டும் என்றபோது சிறிது அஞ்சினேன். பழைய புத்தகங்களின் வாசனை, உடையும் காகிதம், பைண்டிங்கில் ஊசியால் குத்தப்பட்ட உயிர் எழுத்துகள் என்று இந்தத் தொகுப்பை உருவாக்கிய அனுபவம் வித்தியாசமானது. இந்தத் தொகுப்பு முழுமை பெற உதவியவர்கள் இருவர்.
ஒருவர், புதுக்கோட்டை ‘ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி.’ வீட்டிற்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வீட்டையே நூலகமாக்கியுள்ளார் இவர். தன்னிடம் உள்ள கணையாழி இதழ்களைப் படியெடுத்து அனுப்பி வைத்து உதவினார்.
மற்றவர், ‘நேசமுடன்’ ஆர். வெங்கடேஷ். என்னை அவர் வீட்டுக்கு அழைத்து அவரிடம் உள்ள இதழ்களை எல்லாம் என்னிடம் கொடுத்துதவினார்.
இவர்களுக்கு என் நன்றிகள்.
அன்புடன்
தேசிகன்
இந்த வருடம் வரும் மற்ற சுஜாதா புத்தகங்கள்
[%popup(20070110-401 cover.JPG|440|679|401 காதல் கவிதைகள் - குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)%]
[%popup(20070110-silvia cover.JPG|428|653|சில்வியா )%]
[%popup(20070110-katavul cover.JPG|428|653|கடவுள் ( ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து, கடவுள் இருக்கிறாரா ?, வணக்கம் இறைவா தொகுப்பு, ஆ! என்ன ஆச்சரியம் ))%]
[%popup(20070110-innum sila cover.JPG|428|653|இன்னும் சில சிந்தனைகள் - அம்பலம் கட்டுரைகள்)%]
Comments
Post a Comment