மாறனேரியைத் தேடி… ஆறு வருடங்களுக்கு முன், ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையை ‘இராமானுசன் அடிப்பூ மன்னவே’ என்ற தலைப்பில் நாவல் வடிவில் எழுத வேண்டும் என்ற என் நீண்டநாள் கனவைத் தொடங்கினேன். முழுவதும் குருபரம்பரையைத் தழுவியிருந்தாலும், கதையோட்டத்துக்குத் தேவையான இடங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கற்பனையையும் கலந்து எழுதத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில், ஆளவந்தார் மாறனேரி நம்பியைச் சந்திக்கும் இடத்தை நெருங்கினேன். மாறனேரி நம்பி பாண்டிய தேசத்தில் புராந்தகம் என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார். இது எங்கே இருக்கிறது என்று தேடியபோது விடை கிடைக்கவில்லை. சில பெரியவர்களிடம் கேட்டபோது, அவர்களுக்கும் சரியாகத் தெரியவில்லை. கூகுள் மேப்பில் தேடத் தொடங்கியபோது, அது ‘பராந்தகம்’, ‘புராந்தகம்’ என்று என்னைக் குழப்பியது. கதையை அப்படியே நிறுத்தினேன். மாறனேரியைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவர் மாறனேரி நம்பி. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்பதைக் குருபரம்பரை போன்ற நூல்கள் விவரிக்கின்றன. ‘தலித்’ என்று இன்று குறிப்பிடப்படும் குலத்தில் பிறந்தவர் மாறனேரி. அவருடைய தொழில் உழவு. ஒரு நாள் உழுதுகொண்...