சென்னை, கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் மையத்தின் நவீன சவுண்ட் ஸ்டுடியோவில், சுற்றிலும் இதமான ஒலிப்பின்னல்கள் சூழ, இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் ஆரட்டோரியோ பகுதியைக் கேட்டு மகிழ்ந்தேன். உடனே, அவருக்கு போன் செய்து பாராட்டினேன். ''வீட்டுக்கு வாங்க, சாவகாசமா பேசலாம்!'' என்றார். சென்றேன். முதலில், திருவாசகம் சிம்பொனி அனுபவம். இதை சிம்பொனி என்று அழைப்பது சரியில்லை என்கிறார். ஆரட்டோரியோஎன்கிற வகையில் தான் சேரும். ஆரட்டோரியோ என்பது musical work for orchestra and voices on a sacred theme. வாத்தியங்களுக்கும் குரல்களுக்கும் ஆக்கப் பட்ட புனிதமான கருத் துள்ள இசைப் படைப்பு. ''சிம்பொனி என்பது குறைந்தபட்சம் நான்கு அசைவுகள் கொண்ட விஸ்தாரமான இசைக்கோலம். சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் வாசித்ததால் மட்டும் இதை சிம்பொனி என்று சொல்ல முடியாது. கூடாது'' என்றார். இருந்தும், சிம்பொனி என்ற பதம் நிலைத்துவிட்டது. தென்னாடுடைய சிவன் என்னாட்டுக்கும் இறைவன் விதித்தது அது. மாணிக்கவாசகரின் தமிழ் இளையராஜாவின் பரிவு மிக்க குரலில், முதலில் ஒலிக்கிறது. 'பூவார் சென்னி மன்னன் என் புயங்க