சுஜாதாவின் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள முடியாதவர்களுக்கு ஒரு வானொலி பேட்டி ;-)
அன்புடன்,
தேசிகன்.
* - * - *
ரேடியோவின் பயனை நாம் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம். ரேடியோதான் எந்தவித கவனக் கலைப்பும் இன்றி - நகம் வெட்டுதல், முகம் தேய்த்தல் போன்ற மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டே, அவ்வப்போது தேவைப்பட்டதைக் கேட்டுக் கொள்ளும் வசதிபடைத்த ஊடகம். டிவி என்றால், ஒரு இடத்தில் உட்கார்ந்து கண்ணும் காதும் உற்று கேட்க, பார்க்க வேண்டும். சினிமா இன்னும் மோசம். இருட்டில் உட்கார்ந்து கொண்டு பார்க்க வேண்டும்.
ரேடியோ அப்படியில்லை. காரில், வீட்டில், சமையலறையில் ஏன் பாத்ரூமில் கூட கேட்கலாம். அதுவும் இப்போது எஃப்எம் வசதி வந்ததும், நிறைய நிலையங்கள் உருவாகி நாள் முழுதும் சினிமா பாடல்கள் கேட்கக் கூடிய பாக்கியங்கள்¢ முதலில் தோன்றியிருக்கின்றன. மெல்ல மெல்ல இது அலுத்துப்போய், நாள்¢ முழுவதும் இலக்கியம், நாள் முழுவதும் கர்நாடக சங்கீதம், நாள் முழுவதும் காமெடி, நாள் முழுவதும் அறிவியல் என்று சானல்கள் அமெரிக்காவில் போல வரலாம். இப்போது இவையனைத்தையும் பேல்பூரி போல் கலந்து கொடுக்கும் அரசு சார்ந்த ஆல் இண்டியா ரேடியோ நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். மைய அரசு, திறந்த வெளி கல்விக்கு ஒரு முக்கிய சாதனமாக ரேடியோவை மதிக்கிறது.
இவ்வகையில் கல்வி ரேடியோ நிலையத்தினர் கோவையிலிருந்து என்னை பேட்டி கண்டார்கள். அண்மையில் நான்¢ கொடுத்த உருப்படியான பேட்டிகளில் அது ஒன்று. அதன் சிடியை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இப்போது தனியார் கல்வி நிலையங்களில் கூட ட்ரான்ஸ்மிட்டர்கள் அனுமதிக்கப்பட்டு, மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளைக் காட்ட அவகாசம் அளிக்கப்பட்டிக்கிறார்கள்.
இளைஞர்களின் இலக்கிய, நாடக ஆசை, திறமைகளுக்கு மற்றொரு வடிகால் கிடைத்துள்ளது. ரேடியோ, மிர்ச்சி, சூரியன் எஃப்எம் செய்யும் அட்டகாசங்கள் தமிழர்களுக்கு ஒருவாறு பழகிவிட்டது. இவர்களுக்கென்றே ஓர் ஆங்கிலம் கலந்த தமிழ், தனிப்பட்ட எரிச்சல் தரும் உச்சரிப்பு, கொச்சை இதெல்லாம் வடிவமைந்து கொண்டிருக்கிறது. இதேபோல தற்கால மாணவர்கள் பேசவும் துவங்கிவிட்டார்கள். ரேடியோவால் தமிழின் பேச்சு நடையை மாற்ற முடியும் என்பதற்கு உதாரணங்கள் இவை.
யாராவது தமிழ் விரும்பிகள் மறியல் செய்யும் வரை இந்த மணிப்ரவாகத் தமிழ் செழிக்கும். ரேடியோவின் உண்மையான அடையாளங்கள் நமக்கு மெல்லத்தான் புலப்படும்.
( நன்றி அம்பலம் )
வானொலி பேட்டி கீழே.
Comments
Post a Comment