Skip to main content

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்-0 1

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்


இந்த பதிவு கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு முறை சாவி உட்லேண்ட்ஸ் டிரைவினில் சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார். அதன் பிறகு போன சனிக்கிழமை(28/5/2005) அன்று ஒரு கலந்துரையாடல் நடந்தது. இதில் ஹரன்பிரசன்னா, ராம்கி, சுரேஷ் கண்ணன், ஐகாரஸ் பிரகாஷ், ராஜ்குமார், உஷா, சங்கர், கிருபா ஷங்கர் கலந்துக்கொண்டார்கள். இந்த பதிவு இதில் கலந்துக்கொண்டவர்கள் எழுதியது. அவியல் போல் எல்லாம் இருந்தாலும் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.


சிறுகதை, கவிதை, கணேஷ் வசந்த், கல்விமுறை, மீடியா டீரிம்ஸ், சங்கர், பாய்ஸ், சினிமா அனுபவம், அந்நியன், கமல், மும்பை எக்ஸ்பிரஸ், நாவல், எஸ்.ஏ.பி, வலைப்பதிவு என்று பல தலைப்புகள் போண்டா காப்பியுடன் பேசப்பட்டது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் எனக்கு எழுதியனுப்பிய அதே வரிசையில் இங்கு தந்துள்ளேன். எல்லோருக்கும் என் நன்றிகள். படங்கள் தந்து உதவிய ராம்கிக்கு ஸ்பெஷல் நன்றிகள்.



* - * - *
பிரதீப்-ஃஸ்பாட் வேர் என்ஜினியர், வயது 26 - வலைப்பதிவு முகவரி - http://espradeep.blogspot.com/


சனிக்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்தேன். அம்மா கேட்டாள், என்ன? சுஜாதாவை பார்த்தியா? என்ன சொன்னார்? நான் சொன்னேன்: வாப்பா பிரதீப், எங்கே நீ வராம போயிடுவியோன்னு பயந்துட்டேன். உன்னை பாக்கனும்னு எத்தனை நாளா காத்துண்ட்ருக்கேன்னார். என்னை
பார்த்ததும் தான் அவருக்கு ஒரு தனி தெம்பே வந்தது. தமிழ் இலக்கியத்தையே தூக்கி நிறுத்தப் போறவன் நீ தானேப்பான்னார். அம்மா அப்பாவியாய் நெஜம்மாவா என்றாள்? சரி, எதற்கு இத்தனை அழிச்சாட்டியம்? ஆமாம் போனவார சனிக்கிழமை சுஜாதாவைப் பார்த்தேன். போனவார சனிக்கிழமை தனிப்பெருமை கொண்டது என்னைப் பொருத்தவரை! உட்லேண்ட்ஸ் ட்ரைவின்னில் ஒரு சின்ன கூட்டம். ஏஸி ரூமில் இருக்கோம், வா என்று தேசிகன் சொன்னவுடன் வெளியே இருந்த எனக்கு குளிரத் தொடங்கியது. உள்ளே நுழைந்ததும் எதிரில் அமர்ந்து எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். நெஞ்சிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வயிற்றுக்குள் சென்றதைப் போன்ற உணர்வு. தேசிகன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.


கதை, கவிதை, சினிமா, என்று பல்வேறு கோணங்களில் பல்வேறு முகம் கொண்டவரிடம் பேசினோம். அங்கு வந்திருந்தவர்களில் சுஜாதாவை ரொம்ப கம்மியாய் படித்தவன் நான் தான் என்று நினைக்கிறேன். தமிழில் மனப்பாடப் போட்டிக்கு செய்யுளை ஒப்பிப்பது போல் எல்லோரும் அவருடைய கதைகளையும் கட்டுரைகளையும் ஒப்பித்துக் கொண்டிருந்தனர். நான் ஆ என்று வாய் திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக போண்டா வந்ததால், அதை என் வாயில் போட்டு அடைத்துக் கொண்டேன். என் வாய் போண்டா சாப்பிட என் கண்கள் அவரை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. என் வாழ்நாளில் என்னை இப்படி யாராவது ஒரு நாளாவது பார்ப்பார்களா?


எழுதனும்னா நிறைய படிக்கனும்..அது தான் ரொம்ப முக்கியம் கவிதை - unwritten lines இருக்கனும் deadline இல்லைன்னா என்னால எழுதி இருக்கவே முடியாது அந்நியன் நல்லா வந்திருக்கு எழுத்தாளரின் மனைவியாய் இருப்பது கஷ்ட ஜீவனம் அவர் பேசியதில் கொஞ்சம்..


நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு எங்களை மாதிரி போண்டா, இல்லை காப்பி சாப்பிட வந்தவர் இவர் சுஜாதா தானே என்று எங்களிடம் அனுமதி கேட்டு அவரை இன்னும் கொஞ்சம் படுத்தினார். நீங்கள் 50 வயதுக்குப் பிறகுன்னு சமீபத்துல எழுதுன கட்டுரை அருமை என்றார். நாங்கள் எல்லோரும் கொதித்துப் போய் அது 70 வயதுக்கு மேல் என்றோம். என் பேரை ஞாபகம் வச்சுக்குங்க சார், இது கொஞ்சம் uncommon name என்று சகாயமோ, ஏதோ ஒன்றை சொன்னார். சுஜாதா i will remember என்றார். பிரபலம் என்றாலே ப்ராப்ளம் தான் போலும். பாவமாய் இருந்தது.


இப்படி ஒரு அற்புதமான மாலைப் பொழுதை வழங்கிய தேசிகனுக்கு பெங்களூரில் அவர் ஆபிஸ் போகும் வழியெல்லாம் ட்ரா·பிக் குறையட்டும்.


 


* - * - * - *
Poet ராஜ்குமார் - வயது 32 இருக்கலாம். NIIT-இல் வேலை பார்க்கிறார். மார்க்கெட்டிங் மானேஜர். வலைப்பதிவு முகவரி -http://poetraj.blogspot.com


எழுத்தாளர் சுஜாதாவுடன் இரண்டு மணிநேரம் -
பல ஆண்டுகளாக நிறைவேறாத ஒரு கனவு- தேசிகனின் உபயத்தில் நிறைவேறியது. மூன்று முறை நேரில் பார்த்தும் மலைப்பின் மிகுதியில் பேச தைரியம் வராத ஒரு நபரை, இரண்டு மணி நேரம் பார்த்து உரையாட வழிவகை செய்த தேசிகனுக்கு மனமார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட எட்டு வலைப்பதிவாளர்கள், அனைவரும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள். வித்தியாசமான சிந்தனையோட்டம் உடையவர்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவான அம்சமாக இருந்தது -எழுத்தாளர் சுஜாதாவின் மீதுள்ள அபிமானம் மட்டுமே.


கிட்டத்தட்ட அனைவருமே சுஜாதா என்ற படைப்பாளியுடன் விவாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் இல்லாமல், ஒரு தெய்வத்தை/அல்லது சக்தி பொருந்திய ஆன்மீகப் பெரியவரை சந்திக்கும் பக்த மனோநிலையுடன் வந்தது போலத்தான் தோன்றியது. என்னுடைய மனநிலையும் அதேதான்.இவரைப் போல் அனுபவித்து வாழ்க்கை வாழ யாரால் முடியும்? அப்படியே வாழ்ந்தாலும் தலைமுறைகளும் கடந்து ரசிக்கும் மாதிரி எழுத யாரால் இயலும் என்ற வியப்பே இதயத்தில் மேலோங்கி இருந்தது.


மிக இயல்பாக உரையாடலை துவக்கி வளரச் செய்ததில், முக்கியபங்கு சுஜாதா சாரையே சேரும். பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியின் இன்றைய நிலையைப் பற்றி உரையாடல் துவங்கியது. பொறியியல் மற்றும் மருத்துவம் படித்தால்தான் வாழ்க்கை என்ற உணர்வை மாற்றி பிற துறைகளையும் பயில மாணவர்கள் முன் வர வேண்டும் என்பதை சுஜாதா விரும்புகிறார். இணைய நண்பர் உக்ஷ¡வின் மகள் தேசிய சட்டக் கல்லூரியில் படிக்க விரும்பி, குஜராத் கல்லூரியில் இடம் பெற்றிருப்பதைஆச்சரியத்துடன் பாராட்டினார்.


அனவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையை யாசிக்கும் இத்தருணத்தில் மற்ற பொறியியல் துறைகளின் ( எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) இன்றைய அவசியமும் தேவையும் என்ன ? என்று வினவியபோது, கல்வியின் தேவையையே நாம் மறுபரீசலனை செய்ய வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டார். அறிவை விருத்தி செய்ய கல்வி என்பதலிருந்து தடம் புரண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


அன்னியன் இந்தியன் பார்ட் 2 - மல்டி பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் குறித்த கதை என்றார். மும்பை எக்ஸ்பிரஸ்ஸை சற்று தாமதமாக பார்க்க நேரிட்டதாகவும், சற்று முன்னதாக பார்த்திருந்தால் கமலுக்கு சில ஆலோசனைகள் வழங்கியிருக்கலாம் என்றும் கூறினார். இக்கதையின் பிரதானமாக குழந்தையை கடத்துவதும் அதில் ஆள்மாறாட்டம் நிகழ்வதும் அமைந்திருக்க வேண்டும், ஆனால் கமல் 30 அடி உயர கிரேனில் நடப்பதும், குரங்கு அதை இயக்குவதும் பிரதானப்படுத்தப்பட்டுவிட்டது என்றார். கதையை பசுபதி, வையாபுரி ஆகியோர் கடத்தல் குறித்து திட்டமிடுவதிலிருந்து துவக்காமல் எடுத்தவுடனே கடத்தலை காண்பித்திருந்தால் சுவையாக இருக்கும் என்றார். ரோஜா, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களின் ஒரு சம்பவத்தை முன்னிலைப் படுத்திய ஆரம்பத்தைப் பார்க்கும் போது உண்மைதான் என்றுதான் தோன்றுகிறது.


ஆரம்பகால பட அனுபவங்களை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். உங்களுடைய படமாக்கப் பட்ட கதைகளில் நினைத்தாலே இனிக்கும் மட்டும் கதை வடிவில் பத்திரிக்கைகளில் வந்ததில்லை. மற்ற கதைகளை எவ்வாறு சிதைத்தார்கள் என்பது வாசகர்களுக்கு தெரியும். நினைத்தாலே இனிக்கும் படத்தை படமாக்கியது குறித்த உங்களது கருத்து என்ன? என்று கேட்டோம். ஒரு படம் எவ்வாறு உருவாக்கக் கூடாது என்பதற்கு நினைத்தாலே இனிக்கும் படம் ஒரு உதாரணம் என பதிலளித்தார். திட்டமிடாமல் படம் பிடிக்க சிங்கப்பூர் சென்று கால விரயமும், நடிகர்களின் கால்க்ஷ£ட் விரயமும் செய்து, பின்பு சென்னை வந்து கதையை மாற்றச் சொன்னதாக குறிப்பிட்டார். போதாக்குறைக்கு பாலச்சந்தர் அக்காலக் கட்டத்தில் இந்தியா வந்த அபா குழுவினால் கவரப்பட்டு நிறைய பாடல்களை படத்தில் சேர்த்துவிட்டார் என்றும், தாம் எழுதிய ஸ்கிரிப்ட் சிங்கப்பூரில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறும் ஸ்கிரிப்ட் என்றும் கூறினார். அதை ஒரு கதையாக தற்போது வெளியிடலாமே? என்று கேட்டோம். ஸ்கிரிப்ட் அனந்துவிடம் கொடுத்தது திருப்பி வாங்கவில்லை என்று கூறினார்.


நீங்கள் நிறைய எழுதும் காலக்கட்டத்தில் உங்களுக்கு ஆதரவு அளிக்க சாவி போன்ற ஆசிரியர்கள் இருந்தார்கள். தற்போது அது போன்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறீர்களா? அவ்வாறில்லாதபோது உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளதா? என்று கேட்டோம். அதற்கு அக்காலத்தில் சாவியும், மணியனும் பத்திரிக்கைகளின் சர்குலேசன் உயர்த்த ஒரு டார்கெட் வைத்திருந்தாகவும், அதனால் தான் எழுதிய படைப்புகளை கண்ணைமூடிக் கொண்டு பிரசுரித்தாகவும் குறிப்பிட்டார். இதனை எந்தவித நெகடிவ் கனோடேசனுடனும் குறிப்பிடவில்லை. மேற்கொண்ட ஆசிரியர்கள் அளித்த எழுத்துச் சுதந்திரத்தைதான் சுஜாதா அவரது பாணியில் குறிப்பிட்டார் என நினைக்கிறேன்.


காலக் கெடு வைத்து படைப்புகள் படைப்பதில் தனக்கும் சங்கடம் உண்டு என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனாலும் அனைத்துப் பத்திரிக்கைகளும் தன் படைப்புக்களை வேண்டி நின்ற அக்காலக்கட்டத்தில், சில பரிசோதனை முயற்சிகளையும் செய்ய முயன்றது எனக் கூறினார். தான் எழுதியதிலே, தனக்குப் பிடித்த படைப்பாக "ஒரே ஒரு துரோகம்" கதையை குறிப்பிட்டார். "கறுப்பு சிவப்பு வெளுப்பு' கதை குமுதத்தில் ஒரு சமூகத்தாரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டதும் , அதே கதையைத்தான் தலைப்பை மாற்றி " ரத்தம் ஒரே நிறம்" என்று எழுதியதாக தெரிவித்தார்.


எண்பதுகளில் பலநடுத்தரக் குடும்பங்களுக்கு தொழில்நுட்பம், கல்வி குறித்த விழிப்புணர்வையும், ஆசைகளையும் உங்கள் படைப்புக்கள் ஏற்படுத்தின. என்னுடைய கல்லூரி புரபசர் "பிரிவோம் சந்திப்போம்" படித்து எம்.பி.ஏ. படித்தாராம் .இத்தகைய தாக்கங்களை உங்களது படைப்புக்கள் ஏற்படுத்தின என்று கூறினேன். சுஜாதா புன்னகையுடன் ஆமோதித்தார். தற்போது காலக்கட்டங்கள் மாறிவிட்டன. மீடியாவின் தாக்கம் அதிகரித்து விட்டது என்று கூறினார்.


தாங்கள் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கலாமே என்று கேட்டதற்கு பத்திரிக்கை ஆரம்பிப்பது சினிமா எடுப்பது போல என்று கூறி புன்னகைத்தார். ஜெயாகாந்தனைப் பற்றி கேட்டதற்கு அவர் முன்பிருந்தே இவ்வாறுதான் பேசி வருகிறார். தற்போது வியப்படைய ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டார்.


நல்ல கவிதை என்பதற்கான வரையறை என்ன? என்று கேட்டதற்கு கவிதையில் எழுதாத வரிகள் ( unwriiten lines) வாசகன் உணரும் வண்ணம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சில கவிதைகள் எனக்கு புரியவில்லையே என்று சக நண்பர் வினவியபோது, அப்படியென்றால் அது உங்களைப் பொறுத்தவரை நல்ல கவிதையல்ல என்ற குறிப்பிட்டார். நல்ல கவிதை என்பது தனிமனிதன் சார்ந்த ரசனை/வாசிப்பனுபவம் என்ற சுஜாதாவின் கருத்து நியாயமாகப் படுகிறது.


இனிமேல் கணேக்ஷ் வசந்த கதைகள் கிடையாது என்று தலையாட்டி விட்டார். பிரசன்னா சந்தோசப்பட்டார். நான் வருத்தப்பட்டேன். இகாரஸ் காந்தளூர் வசந்தகுமாரன் கதை இரண்டாம் பாகம் எழுதச் சொன்னார். இறுதியாக "கடவுள் வந்திருந்தார்" நாடக விழாவிற்காக மஸ்கட் போவதாக சொன்னார். அப்போதுதான் நாடகம் குறித்து கேட்கவில்லையே என்று தோன்றியது. சுஜாதா என்னும் படைப்பாளி மிகப் பெரிய கடல். இரண்டு மணி நேரத்தில் இதனை நீந்திக் கடக்க முடியுமா? கடலில் என்ன இருக்கிறது எனப் பார்க்க முடியுமா? மடத் தனமாக் கேட்டு சுனாமியாக சுருட்டிப் போட்டுவிடுவாரா என்ற பயம் என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது.இதே போல் பயம் சுரேச்கண்ணனிடமும் இருந்ததாக சொன்னார்.


ஆனால் வாழ்நாளில் மறக்க இயலா இரண்டு மணிநேரங்கள். இவருடன் பேசியது இரண்டு மணிநேரம் என்றாலும் பேசியதை இரண்டு நாட்களாக பலருடனும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் இதை கேட்டாயா? அதைக் கேட்டாயா? என ஆளுக்காள் இன்னும் பல கேள்விகளை முன் வைக்கிறார்கள். அவற்றிலிருந்து இக்கலைஞன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பிரமிக்கவைக்கிறது. இன்னும் நிறைய பேரிடம் சுஜாதா சாரை பார்த்து விட்டேன் என்று சொல்ல வேண்டும். அவர்களது வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்ள வேண்டும்.


கோடானு கோடி நன்றிகள் தேசிகன்.வாழ்க வளமுடன்.

Comments