"சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்". இது புத்தகத்தின் பெயர். இந்த புத்தகத்தை எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நான் சமிபத்தில் படித்த ஒரு நல்ல சிறுகதை தொகுப்பு இது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு சில பள்ளிகளில் துணைப்பாடமாக இருக்கிறது.
இதில் பத்து சிறு கதைகள் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. அவை -
பாம்புப்பட்டிக்கு என்ன ஆச்சு - சாய் விடேகர்
மாறிய விளக்குகள் - போய்லி சென்குப்தா
சுரங்கப்பாதை - ஷமா ஃபியூட்டேஹல்லி
சிங்கத்துக்கு புத்துயிர் - கிதா ஹரிஹரன்
வெல்லும் அணி - சாவித்திரி நாராயணன்
பாட்டுக்கெல்லாம் ஒரு பாட்டு - ஸ்வப்னா தத்தா
சாரி, பெஸ்ட் ஃபிரண்ட் ஹேமாங்கினி ராணடே
ரிஷபனின் ராமன் - கீதா ஹரிஹரன்
பொம்மை - சாவன் தத்தா
மாங்கா மடையர்களும் தேங்கா மடையர்களும் - ஷமா ஃபட்டேஹல்லி
இக்கதைகளை கீதா ஹரிஹரன் மற்றும் ஷாமா ஃபியூட்டேஹல்லி தொகுத்துள்ளார்கள். தமிழில் அழகாக மொழிபெயர்த்தவர் அ.குமரேசன். ஓவியங்கள் ரஞ்சன் தே. பாரதி புத்தகாலயம். 80 பக்கங்கள், விலை 25/= ( சரவணபவன் ஒரு மசால் தோசை + மினி காப்பியின் விலை )
ஒவ்வொரு கதையின் ஆரம்பமும் நம்மை கதைக்குள் இழுத்துச்செல்கிறது. (உத)
["நீங்க இந்த கதையை நம்பமாட்டீங்க. ஆனால் இது நிஜமா நடந்த கதைன்னு என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். ஏன்னா, நான் பாம்புபட்டிக்கு போயிருக்கிறேன். ... " - பாம்புப்பட்டிக்கு என்ன ஆச்சு]
["ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து ஐந்தாம் ஆண்டில் அலிபாக் நகரின் வயல்வெளிகளில் நீங்கள் நடந்து சென்றிருந்தால் ஒரு விநோதமான காட்சியைக் கண்டிருப்பீர்கள். ஒல்லியான உருவம் ஒன்று வெள்ளைக் குறுந்தாடியுடன் கண்ணாடி அணிந்துகொண்டு அந்த வயல்களில் நடைபோடுவதை பார்த்திருப்பீர்கள்...." - மாங்கா மடையர்களும் தேங்கா மடையர்களும் ]
இந்த தொகுப்பில் உள்ள கதைகள், குழந்தைகள் வாழ்க்கையின் அடிப்படை விதியை புரிந்து கொள்ளவும் அதனுடன் இணைந்து வாழவும் அதனை அனுபவித்து மகிழவும் செய்கிற ஒரு முயற்சி. இந்தியாவில் குழந்தைகளுக்காக வெளியிடப்படுகிற பல புத்தகங்களுக்கு தற்போது இந்த புத்தகம் பாப்புலராக இருக்கிறது.
அத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையை இங்கு தந்துள்ளேன். படித்துப்பாருங்களேன்.
மாறிய விளக்குகள் - போய்லி சென்குப்தா
முதலில் அதை நான் விளையாடாகத்தான் எடுத்துக்கொண்டேன். தில்லி நகரின் ஜன்பாத் சாலைச் சந்திப்பில் தினமும் பத்திரிக்கை விற்கிற ஒரு பறட்டைத்தலை பையனோடு விளையாடுவதாகத்தான் எடுத்துக்கொண்டேன். அந்த வழியாக நான் சைக்கிளில் போகிறபோதெல்லாம் அவன் என் பின்னால் ஓடி வருவான். கையில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையை எடுத்து நீட்டிக் கொண்டு ஆங்கிலமும் இந்தியும் கலந்த வார்த்தைகளில் அன்றைய மாலைப் பொழுதின் செய்தித் தலைப்புகளைக் கூவுவான். இந்த தடவை நான் சைக்கிளை நடைபாதை அருகில் நிறுத்திவிட்டுஅவனிடம் ஹிந்திப் பேப்பரைக் கொடுக்குமாறு கேட்டேன்.
அவன் வாயைத் திறந்தபடி என்னையே பார்த்தான். "அண்ணா, உங்களுக்கு ஹிந்தி தெரியுமாண்ணா" என்று கேட்டான்.
பத்திரிக்கைக்கான காசை அவனிடம் கொடுத்துக்கொண்டே "தெரியுமே. ஏன் நீ என்ன நினைச்ச" என்று கேட்டேன்.
அவன் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான். அப்புறம் "உங்களப் பார்த்தா வெள்ளைக்காரரு மாதிரி இருக்கீங்க, அதான் கேட்டேன்" என்றான். " உங்களுக்கு ஹிந்தி படிக்க கூட தெரியுமாண்ணா?"
"நல்லாத் தெரியும்" என்று நான் பதில் சொன்னபோது கொஞ்ம் பொறுமை இழந்திருந்தேன்" என்னால் ஹிந்தி பேச முடியும், படிக்க முடியும், எழுதவும் முடியும். நான் பள்ளிக் கூடத்தில் படிக்கிறபாடங்கள் ஹிந்தி ஒரு சப்ஜெக்ட்" என்றேன்.
"சப்ஜெக்டா, அப்படீன்னா," என்று அவன் கேட்டான். பள்ளிக்கூடத்துக்கே போகாத ஒருவனிடம் சப்ஜெக்ட் என்றால் என்னவென்று எப்படி புரிய வைப்பேன்?" அது வந்து.." என்று நான் சொல்ல ஆரம்பித்தபோது சிக்னல் விளக்கு மாறியது. பச்சை விளக்கு எரிந்ததும் என் பின்னால் இருந்த வண்டிகளின் ஆரன் ஒலி நூறுமடங்காக அதிகரித்தது மற்ற வாகனங்களின் போக்குவரத்துடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
மறுநாள் அதே இடத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு ஹிந்திப் பத்திரிக்கையை வைத்துக்கொண் என்னைப் பார்த்து புன்னைகைத்தான் "பய்யா, ஆப்கா அக்பார்..அப் பதாயியே யஹ் சப்ஜெக்ட் க்யா சீஸ்ஹை?" அவனுடைய உச்சரிப்பில் அந்த ஆங்கில வார்த்தை வித்தியாசமாக ஒலித்தது. அதற்கு ஆங்கிலத்தில் இன்னொரு பொருள் உண்டல்லவா, மற்றவரால் அடக்கி ஆளப்படுபவர் என்று அந்த பொருளைத் தருவதுபோல் அவன் உச்சரித்தான்.
"அதுவா, படிக்கிறதுக்கான பாடம்னு அர்த்தம்" என்று நான் சொன்னேன். அப்போது சிக்னலில் சிவப்பு விளக்கு வந்துவிட்டதால் தொடர்ந்து நான் அவனுடன் பேசினேன். "நீ எப்பவாவது ஸ்கூலுக்கு போய்யிருக்கியா?"
"இல்லீங்கண்ணா" , என்றான் அவன். அதற்கப்புறம் பெருமிதத்துடன், "நான் இவ்வளவு உசரம் இருக்கப்பவே வேலை செய்ய ஆரம்பிச்சிட்டேன்" என்று கூறியவன், என் சைக்கிள் ஸீட் உயர அளவைக் காட்டினான்" ஆரம்பத்திலேயேல்லாம் என் கூட அம்மா வருவாங்க இப்ப நானே தனியா வேலை செய்ய முடியும்"
"உன்னோட அம்மா இப்ப எங்க இருக்காங்க" என்று கேட்ட போது சிக்னல் பச்சை விளக்குக்கு மாறிவிட்டது. நானும் கிளம்பிவிட்டேன். ஆனாலும் அவன் எனக்கு பின்னால் எங்கேயோ இருந்தபடி"அவங்க இப்போ மீரட்டுலே இருக்காங்க, யார் கூட இருக்காங்க தெரியுமா.." என்று சொல்லிய மீதி வார்த்தைகள் காற்றில் கரைந்துவிட்டன.
அதற்கடுத்த நாள் அவன் "பய்யா என் பேர் சமீர்", என்றான் அப்புறம் மிகவும் வெட்கப்பட்டுக்கொண்டு உங்க பேர் என்ன" எனக் கேட்டான்.
அவன் சொன்னது வியப்பை எற்படுத்தியது. என் சைக்கிள் கூட சற்று ஆடிவிட்டது. "என் பேரும் சமீர்தான்" என்றேன். "அப்படியா!" அவன் கண்களில் மின்னல்
"ஆமா" என்று அவனைப் பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தேன். "சமீருங்கிறது அனுமாருக்கு இன்னொரு பெயர் தெரியுமா?"
"அப்ப நீங்க ஓண்ணாவது சமீர், நான் ரெண்டாவது சமீர்" என்று அவன் ஒரு வெற்றிக் களிப்புடன் சொன்னான்.
"அப்படியே வெச்சிக்கலாம்" என்று கூறிய நான் என் கையை நீட்டினேன். "கைகொடு ரெண்டாம் சமீர்!"
அவனுடையகை என் கைக்குள் ஒரு சின்னப் பறவைபோல அமர்ந்து கொண்டது. அப்புறம் நான் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போது கூட அவனுடைய கையின் வெப்பத்தை என்கைக்குள் உணர்ந்து கொண்டேதான் இருந்தேன்.
அதற்கு அடுத்த நாள் அவனுடைய முகத்தில் வழக்கமாக என்னைப் பார்த்துக் புன்னகைகப்பானே அந்த புன்னகையைக் காணோம். "பய்யா, மீரட்டுல கலவரமாம் பய்யா. அங்கே நிறைய முஸ்லீம்களைக் கொன்னுட்டாங்களாம்"
அவன் கையில் இருந்த பத்திரிகையின் தலைப்புச் செய்தியைப் பார்த்தேன். "மதக் கலவரம்" என்று சுட்டெரித்தது அந்த செய்தி.
"ஆனா சமீர்.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தேன்.
"நான் ஒரு முஸ்லீம் சமீர் பய்யா எங்க சொந்தக்காரங்க எல்லாம் மீரட்டுலதான் இருக்காங்க" அவன் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. அவன் தோளை நான் தொட்ட போது அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.
அடுத்த நாள் அவனை அந்த சாலைச் சந்திப்பில் காணவில்லை. அதற்கடுத்த நாளும் காணவில்லை. அதற்கப்புறம் ஒரு நாள் கூட அவனைக் காணவில்லை. எந்த பத்திரிகையாலும், இங்கிலீஷ் பத்திரிகையோ, ஹிந்திப் பத்திரிகையோ எதனாலும் என்னுடைய இரண்டாம் சமீர் எங்கே போனான் என்று சொல்ல முடியவில்லை.
[ பாரதி புத்தகாலயம்2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதை, சென்னை-600 015. போன்: 24332424 இணையத்தளம்: www.tamizhbooks.com மின்னஞ்சல்: info@tamizhbooks.com ]
Old Comments from my previous Blog
சிறுகதையின் ஒரு தொகுப்பு தாங்கள் தந்தது மிகவும் நன்றாக இருந்தது.
-ஸ்ரீனிவாசன்
By ஸ்ரீனிவாசன், at Wed Jun 01, 10:09:33 AM IST
Sorry, Best Story!
mitra
By மித்ரா, at Wed Jun 01, 10:40:05 AM IST
சாரி, பெஸ்ட் ஃபிரண்ட் கதையை படித்திருக்கிறேன். மற்ற கதைகளையும் படிக்க வேண்டும்...
நன்றி தேசிகன்
ரவியா
By Anonymous, at Wed Jun 01, 02:37:51 PM IST
தேசிகன், ஆசிரியர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் கொடுத்தால் வசதியாக இருக்கும்.
ரவியா
By Anonymous, at Wed Jun 01, 02:41:35 PM IST
கதையின் முடிவு என் இதயத்தை கலங்க வைத்து விட்டன. நன்றி தேசிகன்.
By Sivakumar, at Wed Jun 01, 03:23:54 PM IST
thanks for the story.rommbhha touchingaa errundadhu.i will try to find this book.
By Viji, at Wed Jun 01, 05:49:10 PM IST
Comments
Post a Comment