கல்லூரி நாட்களில் நடந்த அந்தச் சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் செந்தில் வேலனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லித்தானாக வேண்டும். செந்தில் வேலன் என் காலேஜ் ; என் வகுப்பு. காலேஜுக்கு ஜீப்பில் தான் வருவான் - மேல்கூரை இல்லாத 'ஓபன்' ஜீப். அவன் அப்பா ஏதோ ஒரு திராவிடக் கட்சியில் மாவட்டத் தலைவரோ செயலாளரோ, சரியாகத் தெரியவில்லை. ஆனால் சென்னையிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் அவன் வீட்டில் தான் தங்கி பிரியாணி சாப்பிடுவார்கள். சமிபத்தில்தினத்தந்தியில் அவன் அப்பா படம் முதல் பக்கத்தில் ஏதோ ஒரு விழாவிற்குத் தலைமை தாங்கினார் என்று வந்திருந்தது. அப்பாவின் செல்வாக்கினால்தான் அவனுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள். தினமும் கல்லூரிக்கு வருவான்; வந்தவுடன் நேராக கேண்டினுக்குப் போய் டீ, சமோசா, சிகரேட் முடித்துவிட்டு காலேஜ் மணி அடித்தவுடன் கல்லூரியை விட்டுப் போய்விடுவான். ஒரு காதில் வளையம் போட்டிருப்பான். ரஜினி படம் ரிலீஸ் அன்றைக்கு எல்லோருக்கும் சாக்லேட் தருவான். கல்லூரி வாசலில் இருக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கெல்லாம் இவன் 'அண்ணா' தான். அன்று வெள்ளி