"ஐயோ!. இது என்ன சத்தம் ?"
ஏதோ உடைந்தது போல்... கடவுளே... மழையா ? வெள்ளமா? சுனாமியா ? இவ்வளவு வேகமான நீரோட்டமாக இருக்கிறதே.. வானிலை அறிக்கையில் கூட ஒன்றும் சொல்லவில்லையே...? எங்கு பார்த்தாலும் தண்ணீர். இந்த சின்ன இடத்தில்... மாட்டிக்கொண்டுவிட்டேனே...முழுகிவிடுவேனா ? கடல் அலை போல் மேலும் கீழுமாக... 'பளக்' ...'பளக்'... வாய்க்குள் தண்ணீர்... இந்த சத்தம்... இவ்வளவு நாள் வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம் என்று அமைதியாக சிக்கிகொண்ட உணர்வே இல்லாமல்.... இன்று ஏன் எனக்கு இந்த சோதனை ? இப்படி குலுக்கிபோடுகிறதே..இந்த சுவற்றில் இடித்து இடித்து தூள் தூளாகிவிடுவேனா ? கடவுளே... அட என்னது இது ஒரு சின்ன சுரங்க பாதையா ? கடவுள் அதற்குள் என் பிராத்தனைக்கு கண்ணை திறந்துவிட்டாரா ? ஆச்சரியமாக இருக்கிறதே!
இந்த தண்ணீர் தான் இதை திறந்திருக்க வேண்டும். இவ்வளவு நாள் எனக்கு இது கண்ணில் படவில்லையே...ஏதோ ஒன்று வெளியே போனால் போதும். இவ்வளவு சின்ன வழியில் போகமுடியுமா? இதன் வழியாக வெளியே வந்தால் உயிருடன் இருப்பேனா ?எனக்கு இதை தவிற வேறு வழியில்லை. கூனிக்குறுகி ஒரு சரியான நிலையில் போனால் முடியும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.
முதலில் தலையை நுழைக்கவேண்டும், பின் தோள்கள், அப்புறம் ஈஸியா வெளியே வரலாம் என்று நினைக்கிறேன். டிரை பண்ணுகிறேன். முதலில் தலை.. இன்ச், இன்சாக வெளியே போகவேண்டும். வெளியே என்ன இருக்கும் என்று தெரியாது...பயமாக இருக்கிறது. என்னதான் ஆகிறது என்று பார்க்கலாம். "Always there is light at the end of the tunnel" என்று சொல்கிறார்களே, இருக்கிறதா என்று பார்க்கலாம். "Dead End"டாக இருக்குமோ? சே சே அப்படியெல்லாம் யோசிக்காதே. நம்பிக்கைதான் வாழ்க்கை. இப்போ யோசிச்சு ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. இந்த குறுகலான பாதையில் திரும்பிக்கூட போக முடியாது. கவலைப்படாமல் முன்னே செல்ல வேண்டும். கடவுள் தான் என்னை காப்பாத்த வேண்டும். அட்லீஸ்ட் தண்ணீர் வெள்ளம் குறைந்துவிட்டது. சுரங்க பாதை வழியாக கசிந்துவிட்டதா? அப்பா, முழுகிவிடுவேன் என்று பயப்பட தேவையில்லை.
சுரங்க பாதையில் யாரோ என்னை பின் பக்கமாக தள்ளுகிறார்கள் யாரது ? திரும்பிக் கூட பார்க்க முடியாவில்லை. ஒத்தையடிப் பாதை போல் இருக்கிறது. சைடில் இடமிருந்தால் அவனை முன்னே போகச் சொல்லாம். ரொம்ப தள்ளுகிறான். அவன் அவசரம் அவனுக்கு. சுயநலம் என்பது எல்லோருக்கும் இருப்பது தானே!. பின்னாலிருந்து அவன் தள்ளிக்கொண்டிருக்கிறான். நான் மெதுவாக முன்னே போய்க்கொண்டிருக்கிறேன். ஒரே இருட்டாக இருக்கிறது.
எதாவது எசகுபிசகாக நடந்தால்?... அவ்வளவு தான். "எங்கே செல்லும் இந்த பாதை.. ? " என்று பாடிக்கொண்டே முன்னே போக வேண்டியது தானா ?
பாதை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தலையை அசைக்க கூட முடியவில்லை. கரும்பு ஜூஸ் மிஷினில் சிக்கிகொண்டது போல் இருக்கிறது. ஆழமாக செல்ல செல்ல... எனக்கு கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிற வேறு வழியில்லை. எப்போ சுரங்கத்தின் மறு முனையை அடைவேன் ? மறுமுனை என்று ஒன்று இருக்கிறதா ?
"அட!, என்னது அது ? நான் காண்பது கனவா ? இருக்காது. கொஞ்சம் மங்கலாக வெளிச்சம் தெரிகிறதே!. பாதையும் கொஞ்சம் அகலமாக இருக்கிறதே. சீக்கிரம் வெளியே போக வேண்டும். என்னிடம் இருக்கும் எல்லா சக்தியையும் உபயோகிக்க வேண்டும். முன்னே செல்! எதை பற்றியும் கவலைபடாதே!. ம்..ம்..ம்.. இன்னும் கொஞ்ச தூரம் தான். பின்னாடி இருப்பவன் தள்ளுகிறான். தள்ளு தள்ளு இன்னும் வேகமாக தள்ளு. ஆ.. வந்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தான், என் முழு உடலும் வெளியே வர வேண்டும். ம்...ம்...ம் வந்துவிட்டேனா ? இல்லை. இன்னும் கொஞ்சம் ம்...ம்... ஆ வந்துவிட்டேன். என்ன ஒரு போராட்டம்.. கடைசியில் விடுதலை.. அப்பாடா வெளிச்சம் தெரிகிறது. இவ்வளவு நேரம் இருட்டில் இருந்ததால் கண் கூசுகிறது. என்ன ஒரு அவஸ்தை. எனக்கு பின்னால் வந்தவனும் தப்பித்துவிட்டான்.
கூச்சல்.. சத்தம்.. பேச்சு குரல்கள்...
"கங்கராட்ஸ்!, உங்களுக்கு டுவின்ஸ் பிறந்திருக்கு!"
[Based on an English story, of an unknown author]
Comments
Post a Comment