Skip to main content

ஐஸூக்கு வந்த மவுஸ்!

ஐஸூக்கு வந்த மவுஸ்! - எஸ்.வி. ராமகிருஷ்ணன்

 



[%image(20051103-ice_svr1.jpg|226|150|Ice)%]

1944. ஐரோப்பாவில் மட்டுமல்லாது இந்தியாவில் இம்பால் முனையிலும் (மணிப்பூர் சமஸ்தானம் - இந்திய பர்மா எல்லை) உலக யுத்தம் உக்கிரமாக நடந்த காலம். தாராபுரத்தில் பார்க் ரோட்டில் எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாறு காம்பவுண்டுகள் தள்ளி இருந்த ஒரு பங்களாவை (காம்பவுண்டு வைத்த தனி வீடுகளை அப்படித்தான் சொன்னார்கள். தனி வீடு என்று தனியாகச் சொல்ல வேண்டியதுகூட இல்லை. ஏனெனில் திறீணீt என்ற கூடுகளை, பம்பாய் போய் வந்தவர்களைத் தவிர யாரும் பார்த்ததுகூட இல்லை) ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு இருந்தனர். அங்கே எப்போதும் சீருடை அணிந்த துருப்புகள் ஜீப்பிலும் மிலிட்டரி லாரியிலும் வருவதும் போவதுமாக இருக்கும். அவர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் தொடர்பே இருக்கவில்லை. அது ஒரு தனி உலகம்.



ஒரு நாள் பார்க் ரோட்டில் ஒரு பரபரப்பு. ராணுவத்தினரின் உபயோகத்துக்காக வந்த ஐஸ் கட்டிகள் உபரியாக இருந் திருக்க வேண்டும். பாறை போன்ற ஒரு பெரிய ஐஸ் கட்டியை அவர்கள் வீட்டுக்கு வெளியே சாலையில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். எல்லோரும் காணாதது கண்ட மாதிரி அதை வெட்டி எடுத்துக் கட்டிகளை வீட்டுக்குக் கொண்டுசென்றனர். எங்கள் வீட்டு சமையற்காரர் அப்பா துரையும் தன் பங்குக்கு ஒரு கட்டியைக் கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் ஐஸ் சர்பத் பண்ணிக் கொடுத்தார். ஆம். அன்று ஐஸ் என்பது ஒரு அபூர்வமான பொருள். ஃபிரிட்ஜ் என்பது (முனிசிபல் நகரமான) தாராபுரத்தில் யார் வீட்டிலும் இல்லாத காலம். வியாபார ரீதியில் பனிக்கட்டிகள் விற்கப்பட வில்லை. வெள்ளைக்காரர்களுக்கு ஐஸ் ஒரு அத்தியாவசிய மான பொருள். ஆதி நாட்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் பாளம் பாளமாக இறக்குமதி செய்து ஐஸ் ஹவுஸில் (இன்றைய விவேகானந்தா ஹவுஸ்) வைத்திருப்பார்களாம். அங்கிருந்து உஷ்ணம் ஏறாமல் பாதுகாப்பாக மரத்தூள் சுற்றி பல ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும். ரயில்வேயிலேயே முதல் வகுப்புகளில் (அன்றைய முதல் வகுப்பு ஒரு ‘சூப்பர் கிளாஸ்’ என்று சொல்லலாம். ஆங்கிலேயர் போன பின்னர் பிரயாணிகளே  இல்லை என்று நீக்கப்பட்டது) உபயோகத்துக் காகவும் ஜில்லாத் தலைநகரங்களில் இருந்த இங்கிலீஷ் கிளப்புகளில் துரைகளின் குடி உபயோகத்துக்காகவும் சென்றது.
நான் சொல்லும் காலத்தில் இறக்குமதிக்கெல்லாம் அவசி யம் இருக்கவில்லை. ஐஸ் உற்பத்தி செய்யும் ரெப்ரெஜிரேஷன் சாதனம் வந்துவிட்டது. ஆனால் மக்களின் பரவலான உபயோகத்துக்கு ஏற்ற மாதிரியல்ல. கடைவீதியில் போய் ஐஸ் கட்டி வாங்க முடியாது. அதனால் ஐஸ் என்றால் சிறுவர்களுக்கு அத்தனை ‘எக்சைட்மெண்ட்.’ ஒரு கட்டி கிடைத்தால் ஆசையோடு கடித்துச் சாப்பிடுவார்கள். “பல் போயிடுண்டா” என்று கூடவே பெரியவர்கள் கத்திக்கொண்டிருப்பது அவர்களின் காதிலேயே ஏறாது.
அவர்களின் ஆசை நிறைவேறும் காலமும் சீக்கிரமே வந்தது. 1945 ஆகஸ்டில் உலக யுத்தம் முடிந்துபோயிற்று. அடுத்த ஒரு வருடத்தில் ராணுவ உபயோகத்துக்காக வர வழைத்து வைத்திருந்த சாதனங்கள் பொது உபயோகத்துக்காக வியாபாரத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆக, சுதந்திரம் வருவதற்குச் சற்று முன்பே எங்கள் பள்ளிக்கூட வாசலில் ‘குச்சி ஐஸ்’ என்ற புதிய வஸ்து தோன்றியது. அதுவரை மிட்டாய், சாக்லேட், பர்பி, கொய்யாப் பழம், இலந்தை, வடாம் முதலியவைதான் பள்ளிச் சிறுவர்களின் வேட்டை. இப்போது போட்டியாகக் குச்சி ஐஸ் முளைத்தது. மதிய உணவு இடை வேளையில் இந்தப் புதுமையைச் சுற்றி நாங்கள் கூட்டம் போடுவோம். ஆளுக்கு அரையணா வாங்கிக்கொண்டு (அதாவது முதலில் ஆர்டர்கள் எடுத்துக்கொண்ட பின்னர்) ஐஸ்காரன் ராஜா தன் அதிசய வஸ்துவை உண்டுபண்ணுவான். ஈரத் துணியில் சுற்றி வைத்திருந்த ஒரு பெரிய ஐஸ் கட்டியை எடுத்து தேங்காய், மாங்காய் மாதிரி துருவுவான். ஒரு கைப்பிடி அளவு துருவலை ஒரு குச்சியைச் சுற்றி பைத்துணியால் பிடித்து இறுக்குவான். ஐஸ் துருவல் எப்படியோ குச்சியைச் சுற்றி ஒட்டிக்கொண்டுவிடும். அந்த அற்புதத்தை நாங்கள் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.
அடுத்தது தித்திப்பான சர்பத் எஸென்ஸை அதன் மேல் ஊற்றி எங்களுக்கு கொடுப்பான். நாங்கள் அதைச் சுவைக்கச் சுவைக்க அது உருகி எங்கள் சட்டையில் வழிந்துகொண்டே இருக்கும். இப்போதெல்லாம் ஐஸ் எந்தத் தண்ணியில் உண்டாக் கப்பட்டது, அமீபா இருக்குமா, சேர்க்கப்பட்டிருக்கும் கலர்கள் அங்கீகரிக்கப்பட்டவையா என்றெல்லாம் பெரியவர்கள் மட்டு மல்லாது சிறுவர்கள்கூட கவலைப்படக்கூடும். அன்று அதைப் பற்றியெல்லாம் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஊரில் காலரா, டைபாய்டு போன்ற விஷ ஜுரங்கள் பரவியிருந்தால் மட்டுமே எங்களை எச்சரித்தார்கள்.
குரங்காக ஆரம்பித்து மனிதனாக வளர்ச்சி பெற்றது போலவே, குச்சி ஐஸின் அடுத்த பரிமாணத் தோற்றம் தொடர்ந்தது. இதன் பெயர் ஐஸ்புரூட். இப்போது ராஜாவுக்கு பதில் ஒரு கூஜா வந்து சேர்ந்தான் (அவனுடைய பெயர் தெரிய வில்லை). ஒரு வினோதமான பெட்டி அவனிடம் இருக்கும். அதில் நிறையக் குழிகள் உண்டு. ஒவ்வொன்றிலும் எஸென்ஸ் கலந்த ஸிரப்பை ஊற்றி அதற்கு நடுவில் ஒரு குச்சியையும் செருகிவிட்டு அந்தப் பெட்டியை லொடலொடவென்று ஆட்டு வான். பெட்டிக்குள் பனிக்கட்டியையும், உப்பையும் கலந்து போட்டிருப்பான் என்று கேள்விப்பட்டேன் (அது அதிகக் குளிர்மையை விளைவிக்குமாம்). காசையும் கொடுத்துவிட்டுக் கொதிக்கும் வெய்யிலில் நாங்கள் பொறுமையாக  (சில சமயங் களில் பொறுமை இல்லாமலும்) காத்துக்கொண்டிருப்போம். கடைசியில் கோயில் கதவு திறக்கிறாப் போல, ‘ரெடி’ என்று சொல்லி ஆளுக்கு ஒன்றாக எங்களிடம் ஒன்று கொடுப்பான். நாங்கள் அனைவரும் ‘ஏழாவது சொர்க்கத்துக்கு’ போவோம்.
இன்னும் இரண்டு வருடங்களில் மெஷினில் பண்ணிய ‘ரெடிமேட்’ ஐஸ்புரூட்டுகள் வரலாயின. இவை இன்னும் கெட்டியாக அமைந்திருக்கும். அளவில் பெரியது. அதற்குத் தகுந்தாற்போல விலையும் ஓரணா. தரத்தில் இது (கையால் எங்கள் முன்னிலையில் செய்த) பழைய ஐஸ்புரூட்டை விட உயர்ந்ததுதான்.
ஆனாலும் காத்துக்கொண்டிருந்து வாங்கிச் சாப்பிட்ட (அம்மா சுடச்சுடப் பண்ணி ஒவ்வொன்றாக நம் இலையில் போடும் தோசையைப் போன்ற) ‘த்ரில்’லும் திருப்தியும் இதில் இருக்கவில்லை.


நன்றி: உயிர்மை ( நவம்பர் 2005)

Comments

Post a Comment