தமிழ் பாட புத்தகத்தில் இன்றும் ‘அ-அம்மா, ஆ-ஆடு, இ-இலை’ என்று இருப்பதை பார்க்கலாம். அந்தப் புத்தகத்தில் இருக்கும் அம்மா எப்போதும் கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பார். ஆடு, புல்லைத் தின்று கொண்டு இருக்கும். இப்படிப் படித்ததால் பிற்பாடு அம்மா, ஆடு என்றால் இந்தப் பிம்பம் நம் மனத்தில் “வாமா மின்னலு” என்பது மாதிரி வந்துவிட்டுப் போகும். இந்து மதத்தில் உருவ வழிபாடு கூட இதுமாதிரி தான். விஷ்ணு, சிவன், பிரம்மா என்றால் உங்களுக்கு உடனே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் மனக்கண்ணில் வந்துவிட்டுப் போகும். அவரவர் வயதுக்குத் தகுந்தார் போல், விஷ்ணு என்.டி.ஆர் மாதிரியோ, சிவன் சிவாஜி அல்லது கமல் மாதிரியோ, அம்மன் கேஆர்.விஜயா அல்லது மீனா மாதிரியோ (ராகவேந்திரராக ரஜினி மட்டுமே) வருவார்கள். ஆனால் பிரம்மா? இன்றும் அவருக்கு பொருத்தமான நடிகர்கள் கிடையாது. இத்தனைக்கும் அவர் தலை கொஞ்சம் வெயிட்டானது. கோயில்களில் பார்க்கும் பெருமாள் சிலைகள் எல்லாம் அர்ச்சாவதாரம் என்று சொல்லுவார்கள். நிச்சயம் பெருமாள் இப்படித்தான் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. முருகன் என்றால் எப்போதும் சின்ன பையனாகதான் காட்சி தரு