Skip to main content

நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்

நான் திருவல்லிக்கேணியில் இருந்த போது, “எல்லா பஸ்ஸும் பூந்தமல்லிக்கு போறது; அங்கதான் திருக்கச்சி நம்பிகள் பிறந்த இடம், ஒரு தரம் சேவிச்சுட்டு வந்துடு” என்று அப்பா சொல்லி பல வருஷங்கள் ஆகிவிட்டன. இந்தப் புத்தாண்டுக்கு அடுத்த நாள்தான் போகமுடிந்தது.

யார் இந்தத் திருக்கச்சி நம்பி? ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் நாதமுனிகளுக்கு(1) தனி இடமுண்டு. அவருடைய பேரன் ஆளவந்தார். ஆளவந்தாரின் ஒரு சீடர்தான் நம் திருக்கச்சி நம்பிகள். கிபி 1009 ஆண்டு தோன்றிய திருக்கச்சி நம்பிகள் 55 ஆண்டுகள் வாழ்ந்ததாக குருபரம்பரையில் குறிப்புகள் இருக்கின்றன. அதாவது 2009ஆம் ஆண்டு 1000 வருடம் ஆகிவிட்டது.

இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரின் பன்முக ஆளுமை (MULTI FACETED PERSONALITY) வெளிப்படும். நிர்வாகத் திறமை, தயாளு குணம், கருணை, பக்தி… என்று பல ஆசிரியர்களின் குணங்களை அவர் ஒருங்கே பெற்றிருந்தார் என்பதற்கு பல சான்றுகளை நாம் பார்க்கலாம். அவருடைய கருணை குணத்திற்கு திருக்கச்சி நம்பிகள் தான் அவருக்கு முன்மாதிரி(role model) என்றும் சொல்லலாம். பல சமயங்களில் இராமானுஜருக்கு குருவாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல நம்பிக்கைக்குரிய அறிவுரையாளராக (Mentor) ஆக விளங்கியிருக்கிறார். இராமானுஜருடைய வாழ்க்கையின் முற்பகுதியில் நடந்த சம்பவங்களைப் படிக்கும் போது பின்னால் இராமானுஜரைச் ச‌ரியான வடிவாக வார்த்தவரும் இவரே என்பது புலப்படும். இராமானுஜருக்கு பல ஆசாரியர்கள் இருந்தாலும், திருக்கச்சி நம்பிகள்தான் இராமானுஜருடைய அபிமான ஆசாரியர். ராமானுஜருக்கு 8 வயது மூத்தவர். குருபரம்பரை வைபவம் திருக்கச்சி நம்பியைப் பற்றி பல கதைகளும் பல சம்பவங்களையும் சொல்லுகிறது. சிலவற்றைப் பார்க்கலாம். (2)

சென்னையிலிருந்து திருமழிசைக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கிறது பூவிருந்தவல்லி. பூந்தமல்லி அல்லது பூனமல்லி என்று சொன்னால் தற்பொழுது எல்லோருக்கும் புரியும். முன்பு இந்த ஊருக்கு தர்மபுரி என்ற பெயரும் இருந்திருக்கிறது. பூந்தண்மலி (தண் - குளிர்ந்த, பூ - மலர்கள், மலி - நிறைந்த இடம்) என்ற பெயர்தான் பிற்காலத்தில் இப்படி மாறியிருக்கிறது என்கிறார்கள். இங்கே வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள், நந்தவனம் அமைத்து காஞ்சி வரதனுக்கு தினமும் மலர்களைக் கொண்டுபோய் தொண்டு செய்ததால் ‘புஷ்பமங்கலம்’ என்றும் பெயர் இருந்தாகத் தெரிகிறது. இங்கே இருக்கும் தாயார் பெயர் புஷ்பவல்லித் தாயார். தற்பொழுது, இரண்டு பக்கமும் ரோட்டை அடைத்துக்கொண்டு கடைகளும், பாதி தோண்டி விட்டுவிட்ட சாக்கடைகளும், பல பேருந்துகள் முண்டி அடைத்துக்கொண்டு நிற்கும் இடமாகவும் மாறியிருக்கிறது.

முதல் பராந்தகன் (கிபி 907-954) கல்வெட்டில் ‘புலியூர்கோட்டத்துப் பூந்தண்மலி’ என்ற சொற்றொடர் இந்த ஊரைத்தான் குறிக்கிறது என்கிறார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் நான்கு இந்தக் கோயிலில் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளில் செம்பாக்கததைச் சேர்ந்த ஒருவர் விளக்கு எரிய ஒரு பசுவை வழங்கினார் என்றும், சேரன் இரவிவர்மன் (கிபி 1275-1290) மானியம் வழங்கினார் என்றும் இருக்கிறது. தற்பொழுது கோயிலுக்குள் இருக்கும் டியூப் லைட்டில் “உபயம்: … ” என்று ஏதோ பெயர் இருக்கிறது.

[திருக்கச்சி புகைப்படத்தொகுப்பு: புகைப்படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க அவற்றின் மீது க்ளிக் செய்யவும்.

திருக்கச்சி உற்சவர்.

திருக்கச்சி நம்பிகள் 1000 ஆண்டுகளுக்கு முன் சௌம்ய வருஷம் மாசித் திங்கள் (ஆங்கில மாதம் பிப்ரவரி) மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் வைசிய குலத்தில் (செட்டியார்) பிறந்தார். தந்தை பெயர் வீரராகவச் செட்டியார், தாயார் கமலையார். இவர்களுக்கு திருக்கச்சி நம்பிகள் நான்காவது குழந்தை.(3) ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

திருக்கச்சி நம்பிகள் பெயர் என்ன என்று சரியாகத் தெரியவில்லை. கஜேந்த்ரதாஸர் என்று காஞ்சிப் பெருமாள் இவருக்கு கொடுத்த பெயர் என்று கதைகள் சொல்லுகிறது. பார்கவ ப்ரியர் என்று சிலர் சொல்லுகிறார்கள்.(வேறு சில பெயர்களும் இருக்கிறது) காஞ்சி பெருமாளின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக திருக்கச்சி என்று அவருக்குப் பெயர் சூட்டினார்கள் என்றும் சொல்லுகிறார்கள்.

திருக்கச்சி கோயில் உட்புறத் தோற்றம்.

வீரராகவச் செட்டியார் தன் நான்கு பிள்ளைகளில் கடைசியான திருக்கச்சி நம்பிகள், செல்வம் ஈட்டுவதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாதவராக இருந்தார் என்றும், பக்தியும், பெருமாள் தொண்டில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டவராகவும் இருந்தார் என்பதற்கு கதைகள் இருக்கின்றன.

தன் அப்பா இவருக்குக் கொடுத்த பணத்தில், பூவிருந்தவல்லியில் தன் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு நிலத்தை வாங்கி அதில் நந்தவனம் அமைத்து தினமும் மாலைகள் தொடுத்து காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜப் பெருமாளுக்கு நடந்துசென்று சாத்துவதும், (அர்ப்பணம்) ஆலவட்ட கைங்கரியத்திலும் (பெருமாளுக்கு விசிறி வீசும் பணியில்) ஈடுபட்டார்.(4) இன்று பூவிருந்தவல்லியிலிருந்து காஞ்சிபுரத்துக்கு காரில் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. ஏசி காரில் செல்வதற்கே நமக்கு கால் இழுத்துக்கொள்கிறது.

தன் தூய பக்தியினால், அச்சாவதாரப் (சிலை உருவம்) பெருமாளிடம் தினமும் சகஜமாகப் பேசும் பாக்கியம் பெற்றிருந்தார் திருக்கச்சி நம்பி. பக்தர்களின் கதைகளில் தெய்வத்தின் குரலைக் கேட்டதாகப் பேசும் பகுதிகள் வருவதுண்டு. சாக்ரடீஸ் என்ற கிரேக்க நாட்டுப் பேரறிஞர் தாம் தெய்வத்தின் குரலைக் கேட்டதாக கூறியுள்ளார். சுவாமி விவேகானந்தா, ஏன் மகாத்மா காந்தியும் கூறியிருக்கிறார்.
திருக்கச்சி கோயிலின் இன்னொரு தோற்றம்

திருக்கச்சி நம்பிகள் தினமும் நீராடிவிட்டு வரும் போது அவருடைய திருவடிகள் பட்ட மண்ணை ஒரு திருக்குலத்தை சேர்ந்தவர் (கீழ் சாதி) தன் தலையிலும், உடம்பிலும் பூசி வந்தார். ஒரு நாள் இதைக் கண்ட நம்பிகள் அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க, அதற்கு, “நீங்கள் பெருமாளிடம் தினமும் பேசுகிறீர்கள் உங்கள் திருவடி பட்ட மண்ணை நான் பூசிக்கொள்வதால் எனக்கு மோட்சம் கிடைக்கும்” என்றாராம். திருக்கச்சி நம்பிகள் வரதராஜப் பெருமாளிடம் இதைப் பற்றிக் கேட்க, வரதராஜப் பெருமாளும், “அவனுக்கு நிச்சயம் மோட்சம் உண்டு” என்று கூறியிருக்கிறார்.

தினமும் தான் பெருமாளிடமே பேசுகிறோமே, நிச்சயம் தனக்கும் மோட்சம் உண்டு என்று நம்பிய நம்பி, “எனக்கு உண்டா?” என்று கேட்க அதற்குப் பெருமாள், “நீர் விசிறி வீசினீர்; நான் பேசினேன், இரண்டும் சரியாயிற்று” என்று பதில் சொல்லியிருக்கிறார். “சரி மோட்சம் அடைய என்ன வழி?” என்று கேட்க அதற்குப் பெருமாள் ஆசார்ய கைங்கரியம் (தொண்டு) செய்ய வேண்டும் என்று சொல்ல, நம்பிகள் திருக்கோட்டியூர் நம்பியிடம் அவர் மடத்து மாடுகளை மேய்க்கும் கைங்கர்யத்தை மாறுவேடமிட்டுச் செய்கிறார். ஒரு நாள் இதைக் கண்டுபிடித்த திருக்கோட்டியூர் நம்பி(5)இவரை ‘நம் பையல்’ என்று தழுவிக்கொண்டார் என்று கதை. இன்றும் திருக்கச்சி நம்பிகள் மூலவர் கீழே சில மாடுகள் இருப்பதைக் காணலாம்.

திருக்கச்சி நம்பிகள் நற்குணங்களைப் பார்த்துவிட்டு இராமானுஜர் அவரைத் தன் குருவாக ஏற்க வேண்டும் என்று கேட்க அதற்கு திருக்கச்சி நம்பிகள் வர்ணாசரம தர்மத்துக்கு அது ஒத்து வராது என்று மறுத்துள்ளார். எப்படியாவது திருக்கச்சி நம்பிகளின் ஆசி தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்த இராமானுஜருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. தனது ஆசார்யராக நினைத்த திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மிச்சத்தை, தான் சாப்பிடுகிற வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் பாக்கியம் என்று நினைத்தார்;(6) எப்படி பெருமாளுக்கு நாம் நைவேத்தியம் செய்யும் உணவை பிரசாதம் என்று சொல்லுகிறோமோ அதே போல. அதற்காக திருக்கச்சி நம்பிகளைத் தன் வீட்டிற்கு சாப்பிட அழைக்க, அவரும் சம்மதித்தார். இராமானுஜர் தன் மனைவியிடம் உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு காத்துக்கொண்டு இருந்தார். நேரம் ஆகவே அவர் திருக்கச்சி நம்பிகளைத் தேடிக்கொண்டு போக, வேறு வழியாக திருக்கச்சி நம்பிகள் இராமானுஜரின் வீட்டை அடைந்தார். இராமானுஜர் வீட்டில் இல்லாவிட்டால் பரவாயில்லை, தனக்கு கோயில் வேலை இருப்பதால் சீக்கிரம் போக வேண்டும் என்றுசொல்லி அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்.


ஓவியம் : காரேய் கருணை இராமனுசன் புத்தகம்
ஓவியம் : காரேய் கருணை இராமனுசன் புத்தகம்

அவர் சென்றபின் இராமானுஜரின் மனைவி அவர் சாப்பிட்ட இலையை ஒரு குச்சியால் தள்ளிவிட்டு, அவர் சாப்பிட்ட இடத்தை சாணத்தால் மெழுகிவிட்டு, தானும் குளித்துவிடுகிறாள். திரும்பி வந்த இராமானுஜர், தனது மனைவி செய்த செயலைக் கண்டு வருந்துகிறார் “அவர் சாப்பிட்டு விட்டு மீதியாக வீட்டு சென்ற ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்க அதற்கு அவர் மனைவி “கீழ் ஜாதியைச் சேர்ந்தவர் சாப்பிட்ட மிச்சத்தை இங்கே யார் சாப்பிடுவது, பிச்சைக்காரர்களுக்குப் போட்டுவிட்டேன்,” என்று பதில் சொல்லுகிறார்.

ஒரு நல்ல பாகவதரான திருக்கச்சி நம்பி சாப்பிட்ட மீதியைச் சாப்பிடுகிற பாக்கியம் தனக்குப் போய்விட்டதே என்று மனம் வருந்துகிறார் இராமானுஜர். அதனால் இன்றும் ஸ்ரீரங்கம் கோயியில் இராமானுஜர் காலத்தில் அவருக்கு ஏற்பட்ட இந்தக் குறையைப் போக்க உற்சவத்தின் போது நம்பெருமாள் (ஸ்ரீரங்கம் பெருமாள்) அமுது செய்தருளியபின் (படைத்த பின்) ஆழ்வார்கள், ஆசார்யர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். அப்போது திருக்கச்சி நம்பிகளுக்கு நைவேத்தியம் பண்ணிய அமுது பிறகு இராமானுஜருக்கு சமர்ப்பிக்கப்படும் வழக்கம் இருக்கிறது. (7)

அதே போல நம்பிகள் ராமானுஜருக்கு அவர் சந்தேகங்களைப் பெருமாளிடம் கேட்டு தீர்த்துவைத்த கதையும் பிரசித்தம். அப்போது பெருமாள் திருக்கச்சி வாயிலாகச் சொன்ன அந்த ஆறு வார்த்தைகள் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்துக்கு மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. (கட்டுரையின் அளவு காரணமாக அதை இங்கே தரவில்லை. )

பல கதைகள், சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கை கொண்ட திருக்கச்சி நம்பிகள், தம் 55ஆம் வயதில் ஆசாரியன் திருவடியை அடைந்தார்.

திருக்கச்சி நம்பிகள் திருமழிசையாழ்வார் அருளிச்செய்த திருச்சந்த விருத்தத்துக்கு தனியன்கள் இயற்றியுள்ளார். இதைத் தவிர காஞ்சிப் பெருமாள் மீது தேவராஜாஷ்டகம் என்ற நூலையும் இயற்றியுள்ளார்.

இன்றும் பூவிருந்தவல்லி பேருந்து நிறுத்தத்தின் அருகிலேயே திருக்கச்சி நம்பிகள் கோயில் இருக்கிறது. வெளியே திருக்கச்சி நம்பிகள் கோயில் என்று எழுதியிருக்கிறார்கள். வெளியே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டியிருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் கோயிலுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக வாடகை தராமல் இருக்கிறார்கள் என்று போட்டிருக்கிறார்கள்.
கோயில் அர்ச்சகரிடம், திருக்கச்சி நம்பிகள் வாழ்ந்த வீடு இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன்.

“இங்கே தான் எங்கேயாவது இருக்கணும்… இப்ப கடை எல்லாம் வந்து அந்த இடமே எங்கே என்று தெரியாமல் போய்விட்டது” என்று பட்டும் படாமலும் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து “எனக்கு அவர் வசித்த இடத்தைக் காண்பிக்க முடியுமா?” என்று மீண்டும் கேட்டேன். “இப்படியே நேராகப் போய் வலது பக்கம் திரும்பினால் நம்பி தெரு வரும்; அங்கே ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு அது தான் நம்பி இருந்த வீடு…இப்ப அவருடைய 1000 வருஷத்துல அதை மீட்க நடவடிக்கை எடுக்க போறதா சொல்றா” என்றார்.

நம்பி தெருவில் ஒருவரிடம் பிள்ளையார் கோயில் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். “எந்தப் பிள்ளையார் கோயில்? இங்க மூணு பிள்ளையார் கோயில் இருக்கு” என்றார். அப்போதுதான் எனக்கு அங்கே போகும் குறுக்கு சந்தில் எல்லாம் பிள்ளையார் இருக்கிறார் என்று தெரிந்தது.

“நம்பி தெரு பிள்ளையார்” என்று நம்பிக்கையாகக் கேட்டேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு நேராகப் போக சொன்னார். அதற்குள் வேறு ஒருவர் “சார் உங்களுக்கு யாரை பார்க்கணும்?” என்றார்.

“நம்பி வீடு”

“இது நம்பி தெரு, நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேள்வியை மாற்றிக் கேட்டார்.

“நம்பி தெருவில் இருக்கும் நம்பியின் வீட்டை,” என்றேன் திரும்ப.

அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.


திருக்கச்சி நம்பி திருமாளிகை
திருக்கச்சி நம்பி திருமாளிகை

நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார்.

“உரமா ?”

“ஆமங்க வியசாயத்துக்கு”

அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.

அங்கிருந்து தமிழ்நாடு அறநிலையத் துறை அதிகாரி ஒருவருக்கு தொலைபேசியில் பேசியபோது அவர், “ஆமாங்க அந்த கோடவுன் தான் திருக்கச்சி நம்பிகள் இல்லம், அது இப்ப பாழடைஞ்சு இருக்கு” என்றார்.

“அத உர கோடவுனா யூஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களாமே ?”

“ஆமாங்க அதை கோயிலோட சேர்க்க நடவடிக்கை எடுத்துகிட்டிருக்கோம்”

திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.

———————————————————————————————————————–



(1) நாதமுனி திருநாராயணபுரத்தில், காட்டுமன்னார் கோயில், தென்னாற்காடு மாவட்டத்தில் பிறந்தவர். “ஆரா அமுதே” [3310] என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைக் கேட்டு மறைந்து போன நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தேடிக் கண்டு பிடித்து தொகுத்து வழங்கியவர்.



(2) திருக்கச்சி நம்பிகள் குறித்த நிகழ்வுகள், பெருமைகள், கதைகள் அநேகம் இருக்கின்றன. எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் அடக்கமுடியாது என்பதால் மிகச் சிலவற்றை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.



(3) இவருக்கு முன் பிறந்தவர்களின் பெயர்கள் - திருவேங்கடவர், அருள்கூரப்பன், மலைகுனிய நின்றார் என்று மூன்று அண்ணன்கள். இவர்களின் பெயர்கள் பல புத்தகங்களில் இருக்காது. அப்பா எனக்கு விட்டு சென்ற ஏதோ பழைய குருபரம்பரை புத்தகத்தில் இந்த பெயர்கள் இருக்கிறது.



(4) இன்றும் திருக்கச்சி நம்பிகள் உற்சவ மூர்த்தியின் கையில் ஆலவட்டம் இருப்பதை பார்க்கலாம் (பார்க்க படம்)



(5) திருக்கோட்டியூர் நம்பி ராமானுஜரின் இன்னொரு ஆச்சாரியர். அவரது திருமாளிகைக்கும் ( வீடு ) இந்த முறை போக முடிந்தது. அதை பற்றி பிறகு எழுதலாம் என்று இருக்கிறேன்.



(6) வானுளார் அறியலாகா வானவா என்பராகில்

தேனுலாம் துளப மாலைச் சென்னியா என்பர் ஆகில்

ஊனம் ஆயினகள் செய்யும் ஊன காரகர்களேனும்

போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே.(41)

– தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமாலை.

[தாழ்ந்த செயல்களைச் செய்பவர் ஆயினும் செய்விப்பவர்களாயினும் "நாராயணா" என்ற பகவானுடைய நாமத்தைத் துதிக்கும் அடியார்களாக இருந்தால் அவர்கள் அமுது செய்தபின் மீதமானது புனிதமே ஆகும்.]



(7) ஸ்ரீரங்கத்தில் திருக்கச்சி நம்பிகள் சன்னதி ஆலிநாடன் திருச்சுற்றில் கருட மண்டபத்திற்குக் கிழக்கே உள்ளது.

பாகம் - 2 ( 25.2.2017 பதிவு இங்கே ) 

Comments

  1. திரு தேசிகன் - தங்களது 'திருக்கச்சிநம்பிகள்' பதிவு பலமுறை படித்துள்ளேன். [சுஜாதாவை நான் மிக நேசித்தவன் அதனாலே என்பதல்லால் உங்களது எழுத்துக்களையும் ரசிக்கிறேன்].

    இந்த நேர்த்தியான பதிவில், நம் ஆச்சார்யரின் வாழ்க்கை வரலாற்றி அழகாக எழுதி - அவரது அவதார ஸ்தலத்தை பற்றி வருத்தப்பட்டு : 'திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.' - என எழுதி இருந்தீர்கள்.

    நீங்கள் தேங்காய் உடைக்க வேண்டும். யார் முயற்சி; எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதெல்லாம் அறியேன். இன்று எனது நண்பர் திரு மாதவன் ராஜகோபாலனின் முகநூல் பதிவில் - இந்த வருட உத்சவ படங்களை பதிவு செய்துள்ளார். அதில் மிளிரும் அவதார மண்டபத்திற்கு ஆசார்யர் திருக்கச்சி நம்பிகள் எழுந்து அருளும் படமும் உள்ளது. மகிழ்சியாக உள்ளது.

    அடியேன் - திருவல்லிக்கேணி சம்பத்குமார்

    ReplyDelete
  2. திரு தேசிகன் - தங்களது 'திருக்கச்சிநம்பிகள்' பதிவு பலமுறை படித்துள்ளேன். [சுஜாதாவை நான் மிக நேசித்தவன் அதனாலே என்பதல்லால் உங்களது எழுத்துக்களையும் ரசிக்கிறேன்].

    இந்த நேர்த்தியான பதிவில், நம் ஆச்சார்யரின் வாழ்க்கை வரலாற்றி அழகாக எழுதி - அவரது அவதார ஸ்தலத்தை பற்றி வருத்தப்பட்டு : 'திருக்கச்சி நம்பிகள் திருமாளிகையை நம்பிக்கே விட்டுக்கொடுத்தால் நம்பி தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டேன். நம்பிக்கை தான்.' - என எழுதி இருந்தீர்கள்.

    நீங்கள் தேங்காய் உடைக்க வேண்டும். யார் முயற்சி; எவ்வளவு சிரமப்பட்டார்கள் என்பதெல்லாம் அறியேன். இன்று எனது நண்பர் திரு மாதவன் ராஜகோபாலனின் முகநூல் பதிவில் - இந்த வருட உத்சவ படங்களை பதிவு செய்துள்ளார். அதில் மிளிரும் அவதார மண்டபத்திற்கு ஆசார்யர் திருக்கச்சி நம்பிகள் எழுந்து அருளும் படமும் உள்ளது. மகிழ்சியாக உள்ளது.

    அடியேன் - திருவல்லிக்கேணி சம்பத்குமார்

    ReplyDelete

Post a Comment