காந்தாரா சாப்டர் 1 பள்ளியில் படித்தபோது, மலையாளப் படங்கள் ‘பிட்’டாகவும், தெலுங்குப் படங்கள் வெறும் மசாலாவாகவும் மட்டுமே பார்க்கப்பட்டன. கன்னடப் படங்கள் திரைப்படங்களே இல்லை என்று ஒதுக்கப்பட்டன. அவை தமிழ்நாட்டுக்குள் வந்ததில்லை. மற்ற திராவிடப் பிரதேசங்களில் தமிழ்ப் படங்கள் ’வேற லெவல்’ என்று கோலோச்சிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். சேட்டன்களின் கதைக்களம் எல்லாம் யோசிக்கக்கூட முடியாதவையாக, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதையும் கதைச் சொல்லும் விதத்தையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்கள். தெலுங்குப் படம் ‘பாகுபலி’ வந்த பிறகு ஒரு தனி அந்தஸ்து கிடைத்துவிட்டது. எந்த அந்தஸ்து கிடைத்தாலும், படம் ஆரம்பிக்கும் முன் மங்களகரமான மஞ்சள் எழுத்தில் திருவேங்கடமுடையானுடன் பக்தியுடன் ஆரம்பிக்கிறார்கள். கன்னடப் படங்கள் மெதுவாகத் தவழ்ந்து ‘யூ டர்ன்’ என்ற படம் வந்த போது ‘அட’ என்று சொல்ல வைத்து, ‘காந்தாரா’ வந்த பிறகு ‘அடடா’ என்று சொல்லவைத்தார்கள். இன்று காந்தாராவின் அடுத்த பாகமாக வந்திருக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ பாகுபலிக்கே போட்டி என்று பெயர் வாங்கியிருக...