Skip to main content

சிவாஜி – சில உண்மைத் தகவல்கள்


'சிவாஜி' திரைப்படத்தைப் பற்றிய ஆரவாரமான மிகையான செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஓர் 'இன்சைடர்' என்ற தகுதியில் இதன் மிகை தவிர்த்த உண்மைகளை அம்பலம் வாசகர்களுடன் பங்கிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அடிக்கடி இதைப் புதுப்பிக்கவும் செய்கிறேன்.

சிவாஜி படத்தை ஏ.வி.எம் தயாரிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிக்க ஷங்கர் இயக்க, ஏ,ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதன் கதையின் முதல் வரைவு முடிந்துள்ளது. பாடல்களை கம்போஸ் செய்ய ஷங்கர், ரஹ்மானுடன் ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர்கள் யார் யார் என்பதெல்லாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. ஸ்க்ரிப்டை முடித்ததும் தான் இதெல்லாம் தீர்மானிக்கப்படும். இதனிடையே படம் எத்தனையோ கோடிக்கு வியாபாரமாகிவிட்டது என்னும் வதந்திகள் எல்லாம் தவறானவை. ஏ.வி.எம். போன்ற அனுபவமிக்க நிறுவனங்கள் அவ்வளவு அவசரப்படத் தேவையில்லை. படத்தின் கதையைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளும் தவறானவை. கதை மெல்ல மெல்ல இப்போதுதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஷங்கர் எந்தப் படம் எடுத்தாலும் நிதானமாக கதையை அணுஅணுவாக யோசித்துச் செய்வார். கதையை ரஜினிகாந்துக்காக எழுதாமல் அவர் நடிக்காமலிருந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கும்படித்தான் பண்ணுவார். 'முதல்வன்' கூட ரஜினிகாந்த்தான் நடிப்பதாக இருந்தது. அவர் அதில் நடிக்கத் தயங்கியபோது அர்ஜுனை வைத்து எடுத்து அது வெற்றிபெற்றதற்கு காரணம் கதை வலுவாக இருந்ததே.

'சிவாஜி' தமிழ்த் திரை உலகில் ஒரு முக்கியத் திருப்பம் என்றெல்லாம் இப்போதே இதை உசுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தன் கதை சொல்லும் திறமை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் அவர்பாட்டுக்கு பூர்வாங்க வேலைகளை ஓசைப்படாமல் செய்து கொண்டிருக்கிறார். படம் என் கணிப்பில் அடுத்த ஆண்டுதான் வெளிவரும். காத்திருப்போம். ஒரு நல்ல படம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

- சுஜாதா

நன்றி: அம்பலம்

!++2++!

Comments