Skip to main content

சோழர்

வரலாற்றுப் பாடம் இன்றும் பள்ளிகளில் கொஞ்சம் போரான பாடம் தான். அதற்கு காரணம், நம் பள்ளிகளில் அதை நடத்தும் விதம்.
(சில பள்ளிகள் இதற்கு விதிவிலக்கு). இன்று பள்ளிகளில் வரலாற்று பாடம் இந்த கட்டுரை மாதிரி இருந்தால் நிச்சியம் மாணவர்கள் விரும்பி படிப்பார்கள். முதல் முயற்சியாக சோழர் ( குறிப்பாக ராஜராஜ சோழன் ) பற்றி இந்த கட்டுரை. (கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இருக்கும்.)


தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று ஆராயத்தக்கது. உலக்கை - ஒலக்கையாக மாறலாம் என்றால் 'சூழ' - 'சோழ' வாக மாறியதில் வியப்பில்லை. 
தமிழ் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு முக்கியம் என்று இப்போது தெரிந்திருக்கும். சமிஸ்கிரதித்தில் 'திருடன்' என்றும் சொல்லுவதுண்டு.சோழர்க்குறிய பெயர்களில் 'கிள்ளி வளவன்'  பிரபலமானது. ஆராய்ந்தால் "கிள், தோண்டு, வெட்டு" என்னும் பல பொருள்களைக் குறித்து "நிலத்தை தோண்டி வளம் செய்பவன்" என்பது கிள்ளி வளவன் என்று வந்திருக்கலாம்.


காடே இல்லாத சோழ நாட்டில் சோழர்களின் சின்னம் புலி. புலிக்கொடி, புலி இலச்சினை. ஏதோ ஒரு சோழரின் கொள்ளுத்தாத்தா ஒரு புலியை கொன்ற பெருஞ் செயலை மதித்து அதையே தங்களது சின்னமாக கொண்டிருக்கலாம். பொடா சட்டம் இல்லாத அந்த காலத்தில் கூட.  சோழர்கள் ஏன் 'புலி' சின்னத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்ற குறிப்பு சங்க நூல்களில் இல்லை, இடைக்காலத்துல் தெலுங்கு நாட்டில் ஒரு பகுதியை ஆண்ட சோழர் சிங்க இலச்சினையை பெற்றிருந்தனர்.(1) . சோழ நாட்டில் புளிய மரம் நிறைய உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.


சோழர் காலத்தில் முத்தமிழ் வளர்ச்சியடைந்தது. புலவர்கள் ஐஸ் வைத்து பாடல் இயற்றியதால் இயற்றமிழ் வளர்ந்தது; பாணர்கள் பாடியதால் இசைத்தமிழ் வளர்ந்தது, அதற்கு மங்கைகள் ஆடியதால் நாடகத்தமிழ் வளர்ந்தது. போர் இல்லாத காலத்தில் அரசர்களுடைய பொழுது போக்கு இரண்டு - ஒன்று அந்தபுரம் மற்றொன்று புலவரிகளின் ஜால்ராவை கேட்டுக்கொண்டிருப்பது.


ராஜராஜ சோழனுக்கு பரந்த மனசு, நிறைய மனைவியர். ஆனால் கல்வெட்டில் 15 பேர் பெயர்தான் இருக்கிறது.பெரிய கோயிலை கட்டுவதற்கு நிறைய கற்கள் தேவைப்பட்டதால் மற்ற பெயர்களை எழுதாமல் விட்டிருக்கலாம். 


தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன்மா தேவியார்! . மனைவியின் சொல்லை யார் தான் தட்ட முடியும்? . பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் ராஜராஜசோழன்!


வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் -  இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை ஆர்க்கிடெக்ட்ஒடுகள்!


[%image(20050927-d_peryakovil.gif|296|432|periya kovil)%]

கி.பி. 6-ம் நூற்றாண்டில் இருந்து பல்லவர்கள் ஆட்சியின்கீழ் இருந்தது தஞ்சை. அப்போது முதலாம் மகேந்திர வர்மன் கட்டிய பல கோயில்களை ரசித்த அருள்மொழிவர்மனின் மனதுக்குள் விஸ்வரூப மெடுத்ததுதான் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்! அடிப்படையில் பல்லவர் கோயில்களின் வடிவம்தான் அது! கிபி 1003'ல் துவங்கி ஆறே ஆண்டுகளில் கட்டிமுடித்த ஆச்சரியம் தஞ்சை பெரிய கோயில்.
இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம். பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது. பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று பேர் பெற்றது. ( பிரகதீஸ்வரர் என்பது சமிஸ்கிருதப் பெயர் ). இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம்.
( பெரிய கோவில் கோட்டோவியம் 1995 நான் வரைந்தது )


கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே! இவ்வளவு பெரிய கோயிலுக்கு நந்தி சற்றுச் சிறியதாக இருக்கிறதே! என்று கருதிய நாயக்க மன்னர்கள், ராஜராஜசோழன் வைத்த நந்தியை அப்புறப்படுத்திப் புதிய நந்தியை வைத்தார்கள். முந்தைய நந்தி, பிராகாரத் துக்குள் தெற்குப் பக்கம் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருப் பதை இன்றும் நாம் காண முடியும்.


பெரியகோயில் கட்டப்பட்டவுடன், அதன் வானுயர்ந்த கோபுரத்தைப் பார்த்துப் பிரமித்த தஞ்சை மக்கள் கவலையுடன் "கோபுரம் விழாமல் இருக்குமா? என்று கேட்டதற்குத் தலைமை ஸ்தபதி தமாஷாக "பயப்படாதீர்கள்! அதன் நிழல்கூடக் கீழே விழாது!" என்றாராம். அதை நிஜம் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்! கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .வெயில் இருந்தால்.


கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, கோணலாகப் புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்!


ஐப்பசி மாதத்தில், சதய நட்சத்திரத்தில் பிறந்தார் ராஜராஜன். அதாவது, அக்டோபர் - நவம்பர் மாதத்தில். ராஜராஜ சோழன் இறந்த பின் புதைக்கப் பட்ட இடத்தில் தற்போது எந்த அளவுக்குத் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்தது என்று தெரியவில்லை தமிழகத்தை ஒரு வல்லரசாக உருவாக்கிய அந்த மாமன்னர் புதைக்கப்பட்ட இடம் கேட்பாரற்று ஒரு மணல்மேடாகக் கிடப்பது வருத்தமான விஷயம். குறைந்தபட்சம் அங்கே புலிச் சின்னத்தோடு (குதுப்மினார் ஸ்டைலில்) ஒரு ஸ்தூபியாவது யாராவது கட்டியிருக்கலாம்.


ராஜராஜன் இறப்பதற்கு இரண்டு ஆண்டு களுக்குமுன் ராஜேந்திரசோழன் இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டார். அவர் ஆட்சிக்கு வந்து 23-வது ஆண்டில் (48-வது வயதில்) அப்போது சோழர்களின் தலைநகரமாக இருந்த கங்கைகொண்ட சோழபுரத்தில், பிரகதீஸ்வரர் கோயில் வடிவிலேயே, கி.பி.1035-ல் ஒரு கோயில் கட்டினார். ஆனால் ஏனோ அது பெரிய கோயில் போல் பிரபலம் அடையவில்லை.


பெரியகோயிலின் கோபுரத்தில் முதல் மாடியில் நாலாபுறமும் நாட்டிய சாஸ்திரத்தில் பரதமுனி குறிப்பிட்ட பரதநாட்டிய முத்திரைகளை சிவபெருமா&ன ஆடிக் காண்பிப்பது போன்ற சிற்பங்கள் ராஜராஜசோழன் காலத்தில் செதுக்கப் பட்டன. மொத்தம் 108 சிற்பங்கள். அவற்றில் 81 சிற்பங்களை மட்டுமே சிற்பிகள் முடித்து, மிச்சத்தை அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். என்ன நடந்திருக்கும்? சிற்பிகளின் கண்களை கோயில் கட்டி முடித்த கண்களை ராஜராஜன் குருடாக்கி விட்டார் என்று இன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


தஞ்சை பெரியகோயில் கட்டியபோது பணியாற்றிய இருபத்தைந்து வயது நிரம்பிய சிற்பிகளுக்குக் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டப்பட்டபோது ஐம்பது வயது தான் ஆகியிருக்கும்.


பல சிற்பிகள் இரு கோயில் வேலைகளிலும் பங்கேற்றிருக்க வேண்டும். ஆகவே, சிற்பிகளின் பார்வையை ராஜராஜசோழன் பறித்திருக்க வாய்ப்பே இல்லை. தன் மகன் ராஜேந்திரன் அவர்களைப் பயன்படுத்தி வேறு கோயிலே கட்டக்கூடாது என்று தந்தை நினைப்பாரா? நல்ல தமாஷ்!.


[%image(20050927-gangaikonda_panview.jpg|640|112|gangai konda)%]

 


ஒருவேளை, ராஜேந்திரசோழனின் கங்கை கொண்ட சோழபுர வேலைகள் துவங்கியிருக்கவேண்டும். 'எல்லா சிற்பிகளும் அங்கே செல்ல வேண்டும்' என்று பொதுவாக மன்னர் ஆணையிட்டிருக்கலாம். ராஜேந்திரனிடம் 'நாட்டிய முத்திரை சிற்பங்கள் முடிக்கப்படவில்லை' என்று யாரேனும் எடுத்துச்சொல்லியிருந்தால், நிச்சயம் சில சிற்பிகளைப் பெரியகோயிலில் ராஜேந்திரன் விட்டுவிட்டுப் போயிருப்பார். மந்திரி பிரதானிகள் 'அரசரின் ஆணை' என்று பரபரப்போடு சொல்லி, எல்லா சிற்பிகளையும் அலாக்காகத் தூக்கிக் கொண்டுபோய் விட்டிருக்கவேண்டும்! பல சிற்பிகள் 'வேலையை முடிக்கவில்லையே..!' என்று ஏக்கத்தோடு திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே கங்கை கொண்ட சோழபுரத்துக்குச் சென்றிருக்க வேண்டும்!


1835-36ல் A.Cotton என்னும் ஆங்கிலேயர் என்ஜினியர் கீழ் அணைக்கட்டு கட்டுவதற்காக சிற்ப வேலைப்பாடு மிகுந்த கற்கள், மற்றும் மதில் சுவற்றை அக்காகப் பிரித்தெடுத்து அதை அணைக்கட்ட  உபயோகப்படுத்தினார். அங்கு உள்ள கிராம மக்கள் எவ்வளவு முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. பிறகு ஒரு மதில் சுவர் எழுப்பித் தர வாக்களிக்கப்பட்டது அது இன்று வரை நிறைவேற்றபடவில்லை.


திருச்சியிலிருந்து 100 கீமீ, சென்னையிலிருந்து 250 கீமி, கும்பகோணத்திலிருந்து 75 கீமி தூரத்தில் உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். போக முடியாதவர்கள், டிவியில் சங்கமம் திரைப்படம் சன் டிவியில் போட்டால் அதில் பார்க்கலாம்.


[%image(20050927-rajarajan.jpg|87|307|rajarajan)%]

ராஜராஜசோழன் மறைந்த பிறகு, அவருடைய வெண்கலச்சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டது. அதை, பிரகதீஸ்வரர் வீதி உலா செல்லும்போது முன்னால் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் ராஜேந்திர சோழர்.


பயபக்தியோடு, கைகூப்பியவாறு இருக்கும் அந்தச் சிலை தற்போது வடக்கே சாராபாய் மியூஸியத்தில் இருக்கிறது. அந்தச் சிலையை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு மீண்டும் தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து, தஞ்சை கோயிலில் வைக்கவேண்டாமா?


ஏற்கெனவே, தஞ்சை பெரியகோயிலில் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இன்றைய தலைவர்களுக்கு, அதன்பின் ஏதேனும் பிரச்னை ஏற்படுகிறது என்று ஒரு பேச்சு நிலவுகிறது. ஒருவேளை, ராஜராஜசோழன் சிலையைக் கோயிலிலிருந்து பிரித்து, எங்கோ வடக்கே கொண்டுபோய் வைத்ததுதான் இதற்குக் காரணமாக இருக்குமோ? யார்கண்டது.


மழைநீர்சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்குச் சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள்.


மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் நம்ம ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார்.


அதற்காகத் தரைக்கடியில் பெரிய குழாய்கள் போடப் பட்டன (இன்றும் அவற்றை நாம் காணலாம்). தவிர, தஞ்சாவூரிலுள்ள சேவப் பன்னவாரி என்னும் ஏரி மழைக்காலத்தில் நிரம்பிய பிறகு, அந்த நீர் வீணாகாமல் குழாய்கள் மூலம் சிவகங்கை குளத்துக்கு வாய்க்கால் மூலம் கொண்டுசெல்லப் பட்டு, வடிகட்டப்பட்ட பிறகு, அங்கிருந்து எல்லாத் தெருக்களுக்கும் Terracota குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.


பிகு:
ராஜராஜ சோழன், மற்றும் தஞ்சை பெரிய கோயில் பற்றிய செய்திகள் 'ஹாய் மதன்' பகுதியில் ( ஆ.வி டிசம்பர் 2004) வந்தவை. அதை அப்படியே ( சில மாற்றங்களுடன்) இங்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
கங்கை கொண்ட சோழபுரம், மற்றும் சோழர்கள் பற்றிய குறிப்புக்களுக்கு ஆதாரம் K.A.Nilakanta Sastri புத்தகம். Madras University.
கங்கை கொண்ட சோழபுரம் படம் உதவி: (  http://www.kumbakonam.info/  )  நிறைய அழகான படங்கள் இருக்கிறது. ஒரு முறை போய் பாருங்கள்.


( சுட்டிக்காட்டிய வித்யாவிற்கு என் நன்றிகள். இதன் தொடர்பாக வந்த பின்னூட்டங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது. )

Comments