அபலையின் அஞ்ஞானம் “வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க…” என்று ஸ்ரீ வேதாந்த தேசிகனும், “இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்…” என்று ஸ்ரீ மணவாள மாமுனிகளும் “திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே!...” என்று வாழி திரு நாமத்திலும் திருவாடிப் பூரத்தை கொண்டாடுகிறார்கள். இன்றைய திருவாடிப்பூரத்தில் ஆண்டாளின் துணையுடன் ‘தினம் ஒரு பாசுரத்தில்’ நாச்சியார் திருமொழியை அனுபவிக்கலாம். நாச்சியார் திருமொழியை அனுபவிப்பதற்கு முன் சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிக அவசியம். எம்பெருமான் ஒருவனே புருஷன் - ‘புருஷோத்தமன்’. மற்ற எல்லா ஜீவாத்மாக்கள் அவனுக்கு நாயகியே என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படை சித்தாந்தம். ஸ்ரீமத் ராமாயணத்தில் புலன்களை அடக்கிய ரிஷிகளும், முனிவர்களுமே ஸ்ரீராமர் மீதும் காதல் கொண்டார்கள். வால்மீகி ஸ்ரீராமர் அழகில் மோகித்து பேச முடியாமல் தவித்தார். ஸ்ரீராமருக்கே இப்படி என்றால் கண்ணன் பற்றிக் கேட்கவே வேண்டாம். மேகம், ஆறு,செடி, கொடி. மரங்கள் கூட கண்ணன...