இளையராஜா பிறந்த நாள் பதிவு ஒன்றில் இந்த வீடியோ துண்டு கிடைத்தது. எல்லோருக்கும் தெரிந்த பாடல் “பூவே செம்பூவே…” நடுவில் வயலின் மழை நிற்கும் முன்பே ஜேசுதாஸ் சரணத்தை எடுத்துவிடுகிறார். கடைசியில் அவர் தான் தப்பாகப் பாடியதை நினைத்து “நான் செய்த பாவம் என்னோடு போகும்” என்று பாடும் இடமும் பாடலும் இனிமை. சந்தேகம் இல்லை. இது பாவம் என்பதற்குப் பெரிய அகராதியே இருக்கிறது. சென்ற வருடம் திருப்புல்லாணி திவ்யதேசம் சென்று சேது சமுத்திரத்தில் குளித்த போது அங்கே மிதக்கும் அழுக்கு துணிகளை பார்த்த போது, இவ்வளவு பாவமா ? என்று மலைத்துப் போனேன். நம்மாழ்வார் ”கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” என்கிறார். ”ஒருவன் கோயிலை சுத்தம் செய்தால் அவனுடைய பாவங்கள் கழிந்துவிடும்” என்பது தான் அது. ஓர் யாத்திரையில் திருவனந்தபுரம் சென்ற போது அங்கே “நானும் ஒரு தொழிலாளி” என்பது போல கோயிலைச் சுத்தம் செய்யும் பணியாளர்களிடமிருந்து தற்காலிகமாகத் துடைப்பத்தை வாங்கி சுத்தமாக இருந்த தரையை சுத்தம் செய்தோம். பாவம் போகும் என்ற நம்பிக்கையில்.