மழையில் அனுமான் சாலீசா சிறுவயதில் காலெண்டர் பின்புறம் வெள்ளையாக இருந்தால் உடனே அதில் ஏதாவது வரைய ஆரம்பித்துவிடுவேன். ஏதோ ஒரு மாசக் கடைசியில் காலெண்டர் ஷீட் கிடைக்க அதில் ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் அனுமார் படம் வரைய ஆரம்பித்தேன். ஏ.பி.டி அனுமாரின் விஷேசம் பச்சை கலர். பச்சை தசைகள், பச்சை விரல்கள், பச்சை வால்… ஏன் அனுமாருக்கு உடம்பு முழுவதும் இருக்கும் ரோமங்கள் கூட பச்சைதான். இடுப்பில் இருக்கும் சிறிய பட்டுத் துண்டு மட்டுமே பிங்க் கலர். அந்தப் பச்சை என்னை ஈர்த்தது! அவர் சஞ்சீவி மலையைத் தூக்குவதைவிட உடம்பு முழுவதும் பச்சையாக வரைவது எனக்கு ஒரு சவாலாக இருந்தது. வரைந்தேன். “அனுமார் மாதிரி இருக்கு பெருமாள் சந்நிதியில் வெச்சுடு,” என்று பாட்டி அங்கீகரித்தாள் அனுமார் படத்துக்கு பார்டர் எல்லாம் போட்டுக் கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் சந்நிதியில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலை கோத்துச் சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணெய்யை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆ...