ராமாயணத்தில் ரகசியங்கள் - ஒரு உபன்யாச அனுபவம்.
ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் ‘ராமாயணத்தில் ரகசியங்கள்’ (Secrets of Ramayana) என்று தொடர் சொற்பொழிவை பெங்களூருவில் பல பகுதிகளில் ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். நேற்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் அன்று கடைசி சொற்பொழிவைக் கேட்கச் சென்றிருந்தேன். ராமாயணத்தில் சரணாகதி என்ற தலைப்பில் சரணாகதிகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு சென்ற போது பத்துக்கு மேல் எண்ணுவதை விட்டுவிட்டு கடைசியில் விபீஷண சரணாகதியில் முடித்தார்.
வைணவத்தில் முதுகலை (எம்.ஏ) படிப்பு உள்ளது. அதைப் படிப்பவர்கள் பெரும்பாலும் ரிடையர் ஆன/ஆகப் போகிறவர்கள். இன்றைய 'பைத்தான்’ இளைஞர்கள், பரமாத்மா பக்கம் வருவார்களா என்ற சந்தேகம் (கலந்த கவலை ) என்னைப் போலவே உங்களுக்கும் இருக்கலாம். ஆனால் நேற்று துஷ்யந்த அவர்களின் உபயனாசத்தை கேட்ட போது அவரை சுற்றி கல்லூரி படிக்கும் இளைஞர் பட்டாளம் கையில் பேப்பரும் பேனாவுமாக அவரை சுற்றிக் குழுமியிருந்தது, உற்சாகமாக ரசித்துக் கேட்டு நோட்ஸ் எடுத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் சோர்வில்லாமல் அனுபவித்தார்கள். நிச்சயம் நம் இளைய சமுதாயம் வருவார்கள் என்று நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியது, எனக்குச் சரணாகதியைவிடச் சந்தோஷத்தைக் கொடுத்தது.
துஷ்யந்த் ஸ்ரீதர் உபன்யாசத்தில் ஒரு தனித்தன்மையைப் பார்க்கிறேன். முக்கியமான மையக்கரு ( crux ), சாராம்சத்தை(gist) சாண்ட்விச்சில் மசாலா போல உள்ளே வைத்து ஊட்டுகிறார். அப்படியே சனாதனத்தின் மீது, வெறுப்பை உமிழ்கிறவர்களைப் போகிற போக்கில் இடது கையால் தலையில் தட்டிவிட்டுச் செல்கிறார்.
நேற்றைய இவர் உபன்யாசத்தில் ”அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன். நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்” என்று கீதையில் பரமாத்மா கூறிய விஷயத்தை உப்புமா கொண்டு விவரித்த விதம் சிரித்துக்கொண்டு ரசித்தாலும், அதன் கருப் பொருள் சட்டென்று மனதின் ஆழத்தில் ஒட்டிக்கொண்டு விடும். இருவடை பேச்சில் என் பள்ளி, கல்லூரி விரிவுரையாளர்கள் பலர் என் நினைவுக்கு வந்தார்கள். அவர்கள் சொல்லிய பாடங்கள் இன்னும் என் நினைவில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் சொல்லிக்கொடுத்த விதம்.
துஷ்யந்த எல்லோருக்கும் புரியும் ஆங்கிலத்தில், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று கலந்து கட்டி பேசும் போது, அட எல்லாம் புரிகிறதே என்று கூட தோன்றுகிறது. இன்னொரு தனித்துவமான விஷயம், தியாகராஜர், அருணகிரிநாதர், பெரியவாச்சான் பிள்ளை, ஸ்வாமி தேசிகன் என்று ராம பக்தி செய்த எல்லோரையும் தன் துணைக்கு அழைத்துக்கொள்வதால் நாமம் போட்ட, போடாத ராம பக்தர்கள் எல்லோரும் இவருடைய உபன்யாசத்துக்கு வருகிறார்கள். தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரத்தை விவரித்து விதத்தில் கன்னடத் தேசத்தில் எல்லோரும் கைத்தட்டை பூரித்தார்கள். ராம பக்திக்கு மொழி கிடையாது.
ராமாயணத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் துஷ்யந்த் ஸ்ரீதரை, நாம் பாராட்டுவதோடு, பாதுகாத்துக் கொண்டாட வேண்டும்.
-சுஜாதா தேசிகன்
6.7.2025
நல்ல டீஸர்.ஏனைய பைதான்களையும் படிக்க தூண்டும்
ReplyDelete