Sri Maran’s Dog Swami மற்றும் ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸர் ஸ்வாமி
இந்தத் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும்.
(1) சுமார் 20 வருடங்களுக்கு முன் கிட்டத்தட்ட ஸ்ரீ வைஷ்ணவக் கிரந்தங்கள் முழுவதும் ஒரு மகானுபாவர் டிஜிட்டல் முறையில் பதிவேற்றி ஒரு புரட்சியைச் செய்தார். தான் நம்மாழ்வார் என்ற மாறனின் அடிபணிந்த நாய் என்று பெயருடன் உலாவி வந்தார். மொத்த ஸ்ரீ வைஷ்ணவக் கிரந்தங்களையும் ஸ்ரீரங்கத்திலோ வேறு எங்கோ விலைக்கு வாங்கி கப்பலில் அனுப்பி, இரவு பகல் பாராது ஸ்கேன் செய்து காபிரைட் பற்றி எல்லாம் கவலைப் படாமல் அதைப் பதிவேற்றிக்கொண்டு இருந்தார். அவர் ஸ்கேன் செய்த புத்தகத்தில் ”Released by Maran’s Dog ,Toronto, Canada” என்று இருக்கும் அதனால் அவர் கனடா நாட்டிலிருந்து செயல்பட்டார் என்று தெரிந்தது. அவர் யார் என்ன செய்கிறார் அவருடைய உண்மையான பெயர் என்று எதுவும் தெரியாது. சில காலம் கழித்து அவர் நடத்திய maransdog.com மறைந்து போனது. அவர் எங்கே என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். பிறகு மறந்து போனோம். சுஜாதா ஒருமுறை டிஜிட்டல் புத்தகங்களுக்குத் தீர்க்காயுசு என்று எழுதினார். இன்று ஸ்ரீ வைஷ்ணவப் புத்தகங்கள் பல உயிருடன் இருக்கிறது என்றால் அதற்கு இந்த மாறனின் ‘நாய்’ ஸ்வாமியே காரணம் என்பது என் எண்ணம்.
(2) ஆழ்வார்கள் அமுத நிலையம் என்ற ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் புரியும் வண்ணம் சிறு புத்தகங்களாகப் பதிப்பித்தவர் ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாஸர். பல ஸ்ரீ வைஷ்ணவச் சான்றோர்களை அணுகி அவர்களிடம் திவ்ய பிரபந்தங்களுக்கு உரைகள், ஸ்ரீ வைஷ்ணவக் கட்டுரைகள் போன்றவற்றைப் பெற்று 8/-, 10/- ரூபாய்க்குப் புத்தகங்களைப் பிரசுரித்து ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்க்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் அதைப் பரப்பியவர்.
இந்தப் பாகவதர் வெளியிட்டுள்ள புத்தகங்களில் பகவத் பரகவத கைங்கர்யபரர்கட்கு வேண்டுகோள் என்று ஆரம்பித்து வாசகங்கள் இப்படி இருக்கும்...
//நாடெங்கும் கலி இருள் சூழ்ந்து, ஆன்பிக உணர்வு கள் குறைந்து, ஆஸ் 9ம் நமித்தும், நாஸ்திக மலிந்து, பாஷண்டவாதிகள் பெருகி வரும் இச்சமபத்கில், மக்களிடையே பகவத் பாகவத பக்தி குன்றி, வறுமையும் அறியாமையும் தோன்றியுள்ள இன்றைய சூழ் நிலையில், ஆன்மிக ஒளியும் பக்தி உணர்வும் பரப்பும் அரிய ஸ்ரீவைஷ்ணவ நரல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ளோம்.. ….
…. அன்புள்ளங் கொண்ட பகவத் பாகவக புண்ணிய சீலர்கள் அடியோம் மேற்கொண்டுள்ள இச்சீரிய பணியில் பங்கு கொண்டு நால்களை வாங்கி ஆதரிப்பதுடன், தங்கள் நண்பர் உறவினர்களுக்கும் பெருவாரியாக இந்நால்களை வாங்கி உதவி நாடெங்கும் ஆன்மிகம் பரவப் பணியாற்று மாறு ப்ரார்த்திக்கின்றாம். நமஸ்காரம், :
அடியேன் தாஸாநு தாஸன்
ஸ்ரீலக்ஷ்மீநாராயண ராமாநுஜ தாசன்//
திவ்ய தேசங்களில் உற்சவத்தின் போது இப்புத்தகங்களை மூட்டையாகச் சுமந்துகொண்டு கீழே பரப்பி அதை விற்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு முறை அவர் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சமயம் கோயிலுக்குள் ஏதோ ஒரு மூலையில் விற்ற போது அவரை காவலர்கள் அடித்து துரத்தியுள்ளார்கள். பிறகு மதுரை பேராசிரியர் அரங்கராஜன் போன்றவர்கள் தலையிட்டு அவரை குறித்து எடுத்துக்கூறினார்கள் (இதை ஒரு முறை அரங்கராஜன் ஸ்வாமிகளே என்னிடம் கூறியுள்ளார்.) இவருடைய புத்தகங்களை வாங்க வேண்டும் என்று ’சௌத் கூவம் ரோடு’க்கு சென்றேன். அது சைபுல் முல்க் தெரு என்று மாறியிருந்தது. ஒரு வீட்டைக் கண்டுபிடித்து விசாரித்தேன். மாடியிலிருந்து வயதானவர் ஒருவர் இறங்கி வந்தார். என்னிடம் இருந்த ஒரு பழைய புத்தகத்தைக் காண்பித்து இதை பதிப்பித்தவரைப் சந்திக்க முடியுமா என்று கேட்டேன். அவர் என் அப்பா என்று சுவற்றில் ஒரு படத்தைக் காண்பித்தார். சட்டம் போட்ட படத்தில் அந்த பாகவதர் திருமண் தரித்து இருந்தார். இப்போது புத்தகம் எல்லாம் பதிப்பதில்லை. அவருடைய புத்தகங்கள் சில இருக்கிறது, வேண்டும் என்றால் பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று அட்டைப் பெட்டியை காண்பித்தார். எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். உங்களால் எவ்வளவு முடியுமோ அதைத் தந்துவிட்டுச் செல்லுங்கள் என்றார். புத்தகங்களை உடையாமல் அள்ளிக்கொண்டு வந்தேன்.
இன்றைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் பலர் உள்ளாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
-சுஜாதா தேசிகன்
22.7.2025
நீரும் கலியுக நடுவில் உவே சாமிநாத ஐயர் மாதிரி மூல நூல்களை தேடி தேடி அலுக்காமல் ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ணுகிறீர்.
ReplyDeleteதொண்டுக்கு பலன் நிச்சயம் உண்டு
நாம் நம் ஸ்வரூபத்தை இழந்துவிட்டோம்
ReplyDelete