குல்லக் ஓர் இயல்பான குடும்பத் தொடர்
பொதுவாக வெப் சீரீஸ் வகையராக்களில் அளவுக்கு அதிகமான வன்முறை, கெட்ட வார்த்தை, கெட்ட காட்சிகள் மலிந்து கிடக்கும். சமீபத்தில் ’சோனி லிவ்’ல் குல்லக் ( உண்டியல் ) என்ற தொடரைப் பார்க்க நேரிட்டது. இதற்கு முன் இப்படி ஒரு நல்ல தொடரைப் பார்த்த நினைவில்லை.
கதை என்று எதுவும் இல்லை. அது தான் இதன் USP. வெற்றி.
ஓர் உண்டியலில் எப்படி சிறுகச் சிறுக சேமிப்போமோ அது போல அன்றாடம் நடக்கும் சிறு சந்தோஷமோ, பிரச்சனையோ, வருத்தமோ அதைச் சேமிக்கிறது இந்தத் தொடர். ஒரு சராசரி இந்திய மத்தியமர் குடும்பத்தின் அன்றாட வாழ்வை மிக யதார்த்தமாகவும், மனதை நக்காமல் ஜெஸ்ட் தொட்டு விட்டுப் போகும் காட்சிகளைக் கொண்ட தொடர்.
ஓர் அப்பா, அம்மா, அண்ணன் தம்பி என்று நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட மிஷ்ரா குடும்பத்தில் நாமும் இணைந்துவிடுகிறோம். இந்தக் குடும்பத்தில் நிகழும் உரையாடல்கள், சண்டைகள், கேலிகள் என அனைத்தும் நம் வீடுகளில் நடப்பதைப் போலவே இருப்பதால், ஒரு புன்னகையுடன் கூடிய நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது ஹிந்தியில் வந்திருந்தாலும், தமிழ் டப்பிங்கில் பார்த்தேன். டப்பிங் என்று தெரியாத வண்ணம் மிக இயல்பாகச் செய்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டமில்லாத கதை, நடிப்பு, இசை என்று எல்லாமே இயல்பாக இருப்பது என்பது எப்படி என்று புரியவில்லை.
80-90கிட்ஸ் தங்கள் குடும்பத்தினருடன் கழித்த தருணங்கள், எதிர்கொண்ட சவால்கள் என அனைத்தையும் இந்தத் தொடர் நினைவூட்டி, நம்முடைய கடந்த காலத்தின் ஒரு பகுதியை எங்காவது தொட்டு விட்டுச் செல்கிறது. பரபரப்பான வாழ்க்கையில் சற்று நேரம் நிம்மதியான இடைவெளியை விரும்பினால் இதைப் பார்க்கலாம்.
- சுஜாதா தேசிகன்
1.7.2025
Comments
Post a Comment