1. வீரநாராயணபுரம்
அமுதமிகு, உத்தமமான, மாபெரும் காவிரிக்கு 'பொன்னி' எனும் அழகிய பெயரும் உண்டு. மழைத்துளிகளையே உணவாகக் கொண்டு முகிலைப் பாடும் வானம்பாடிப் பறவை வருந்துமாறு மழை பொய்த்துவிட்டாலும், பொன்னி நதி ஒருபோதும் பொய்க்காது[1]. அவள் பாயும் இடமெல்லாம் பொன்னைப் பொழிவது போல, நிறைந்த விளைச்சலை வாரி வழங்கி, மக்களைச் செல்வச் செழிப்பில் ஆழ்த்துவதால் அப்பெயர் பெற்றாள் என்பர். இப் பூவுலகில் வாழும் பல்லுயிர்களை நாள்தோறும் வளர்த்து, அவை உய்யும் வண்ணம் தன் அருளமுதை ஒரு தாயைப் போல ஊட்டுகிறாள். ஆதலால், அவளைக் காவிரித் தாய் என்றும் அன்புடன் அழைப்பர்.
குடகுமலையின் சாரலில் உள்ள பிரம்மகிரிப் பருவதத்திலிருந்து தலைக்காவிரியாய் உருண்டு, நீர்வீழ்ச்சிகளில் விழுந்து, புரண்டு, வேகமாகச் செல்லும் தன் போக்கில் ஆழமான வழியை அறுத்துக்கொண்டு விரைந்தோடிவரும் காவிரி, தன் அகன்ற ஆசைகளையெல்லாம் கொள்ள இடமில்லாமல், வட திருக்காவிரி, தென் திருக்காவிரி என இரண்டாகப் பிரிகிறாள். பின் தன் ஓட்டத்தில் நிதானம் கொண்டு, எப்போதும் தென் திசையில் இருக்கும் கோதையைத் தன் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கும் அரங்கனுக்கு மாலையாகி, அவன் பாதங்களை மெல்ல வருடி, அப்பாத தீர்த்தத்தை அள்ளிக்கொள்கிறாள். வட திருக்காவிரி என வழங்கும் கொள்ளிடத்திலிருந்து பல கிளைகளாகப் பிரிந்து, மேடு பள்ளங்கள் கடந்து வீரநாராயண ஏரியில் பாய்கிறாள். அவ்வழகிய ஏரியைக் காண்போர், "இது கடலோ?" என்று வியக்காமல் இருக்க மாட்டார்கள்.
ஆடி மாதத்தில், காவிரியில் புது வெள்ளம் ஆடிக் காற்றோடு அடித்துக்கொண்டு வரும் சமயம், ஏரியின் நீர் ததும்பி, படித்துறைகளில் வேகமாக மோதும். ஏரியைச் சுற்றியுள்ள மரங்களில் பறவைகள் எழுப்பும் ஆரவாரம் அவ்விடம் முழுவதும் பரவி நிற்கும்.
மலைமலையாய் தேன்கூடுகள் நிறைந்த குடகு மலையின் உச்சியிலிருந்து, வற்றாத அமுதமாய்ப் பெருகும் காவிரியைப் போல, இன்றைக்கு சற்றேறக்குறைய ஆயிரத்து இருநூறாண்டுகளுக்கு முன், அதே காவிரி தொடங்கும் மேலை நாட்டிலிருந்து சில யாத்திரிகர்கள் ஆராத அமுதமான பக்தாம்ருதத்தைக்[2] கொண்டு வந்தார்கள்.
ஒரு காலை, கதிரவன் வானில் உதிக்கத் தொடங்கிய அவ்வேளையில், ‘கீசுகீசு’ என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசும் பேச்சுக்கள், வழக்கத்திற்கு மாறாக உரக்க ஆரவாரித்தது. அச்சமயம் மூவர் ஏரியை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு பாலகன் மட்டும் சற்று வேகமாக அடியெடுத்து வைத்தான். அவர்கள் தோளில் இருந்த கம்பும், அதில் கட்டப்பட்ட மூட்டையும் அவர்களை யாத்திரிகர்கள் எனக் காட்டின. அணிந்திருந்த வெண்மை நிற ஆடை அவர்கள் அந்தணர்கள் என்பதையும் உணர்த்தியது.
அவர்கள் வந்த வழியெங்கும் செந்நெல் பயிர்கள் காற்றில் அசைந்தாட, பெண்கள் அந்தக் காலை வேளையிலேயே வயல்களில் சுறுசுறுப்புடன் களை பறித்துக் கொண்டிருந்தனர். சில இளம்பெண்கள் வயலில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக்கொண்டே பறவைகளை விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஏரிக்கரைக்கு வந்தவர்கள் அங்கு இருந்த ஒரு சிறு மண்டபத்தில் தங்கள் மூட்டைகளைக் கீழே வைத்துவிட்டு, நடந்த களைப்பில் அமர்ந்தனர். கதிரவனின் ஒளிக் கதிர்கள் ஏரியில் பட்டு தங்க நிறமாகப் பளபளக்க, அக்காட்சியைக் கண்ட அவர்கள் பிரமித்துச் சட்டென்று எழுந்து நின்றார்கள்.
சூரியன் தன் ஒளியைத் தண்ணீரின் மீது பாய்ச்சிய அதே சமயம், சூரியனை ஒத்த தேஜஸுடன் ஏரிக்கரையில் காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஒருவர் அவர்களை நோக்கி நடந்து வந்தார். அவருடன் வயதில் இளையவர் ஒருவரும் உடன் வந்தார். இருவரும் சிகையும், பூணூலும், நெற்றியில் பிரகாசமான திருமண்ணும், கழுத்தில் துளசி மாலையும் அணிந்து, வைணவ ஸ்ரேஷ்டர்களாகக் காட்சி தந்தார்கள்.
மண்டபத்தில் இருந்த மூவரும் அவர்களைக் கைகூப்பி வணங்கி, "ஐயா! வந்தனங்கள்!" என்றனர்.
வந்தோரில் ஒருவர், "வந்தனங்கள்! இதற்கு முன் உங்களையெல்லாம் இந்த ஊரில் கண்டதில்லையே! உங்கள் முகத்தில் நீண்ட பிரயாணத்தின் களைப்பு தெரிகிறதே!" என்றார்.
வந்தவர்களில் ஒருவர் கைகூப்பி, "ஆம், ஸ்வாமி! நீண்ட பிரயாணம்தான். நான் தொண்டனூர் நம்பி. இவர் இயல்பிள்ளை, அது அவருடைய புதல்வன் பெருநல்துறைவன்[3]. நாங்கள் மேலை நாட்டிலிருந்து யாத்திரையாகப் புறப்பட்டு, காவிரியின் போக்கிலேயே பயணம் செய்து, திருக்குடந்தை பெருமாளைத் தரிசித்தோம். பின், அகண்டக் காவிரி அணைத்துக்கொண்டிருக்கும் திருவரங்கனைத் தரிசித்துவிட்டு, தில்லைத் திருச்சித்திரகூடப் பெருமாளைத் தரிசிக்கும் வழியில் இந்தக் கோயில் கோபுரம் தென்பட்டது. இந்தப் பெருமாளையும் சேவித்துவிட்டுச் செல்லலாம் என்று இங்கு வந்தோம். இந்த ஏரியைப் பார்த்துப் பிரமித்து நின்றோம்! இப்போது உங்கள் ஞானம் பெற்ற முகப் பொலிவைப் பார்த்து மேலும் பிரமித்துப் போகிறோம்! உங்கள் திருநாமத்தை அறிந்துகொள்ளலாமா? உங்களைப் போலவே பொலிவுடன் உடன் இருப்பவர் உங்கள் குமாரரா? இந்த அழகிய கிராமத்தின் பெயர் என்ன?" என்று கேள்விகளை அடுக்கினார்.
"இந்த ஊர் 'வீர நாராயணச் சதுர்வேதி மங்கலம்'. சோழப் பேரரசன் வேதங்கள் ஓதும் எங்களைப் போன்றவர்களுக்கு மனம் உவந்து அளித்த இடம் இது. நீங்கள் தரிசித்துவிட்டு வரும் திருவரங்கப் பெருமாளின் பெயரான ரங்கநாதன் என்பதுதான் என் பெயரும். ஆனால், ஊரில் எல்லோரும் என்னை 'நாதமுனிகள்' என்று அழைப்பார்கள். அருகில் இருப்பவன் என் குமாரன் ஈஸ்வர முனி. அதோ தெரியும் வீர நாராயணப் பெருமாள் கோயிலில் நாங்கள் இருவரும் திருப்பணி செய்கிறோம். நீங்கள் நீராடி, உங்கள் காலை அனுஷ்டானங்களை முடித்துவிட்டுப் பெருமாளைச் தரிசிக்க வர வேண்டும். அதோ தெரிகிறது பாருங்கள், அந்தக் கோபுரத்திற்குக் கிழக்குப் பக்கத்தில் இருக்கிறது எங்கள் குடிசை. இன்று நீங்கள் எங்கள் குடிசைக்கு அதிதியாக உணவு அருந்த வேண்டுகிறேன்," என்றார்.
"நாதமுனிகளே! எங்களுக்குப் பரிபூரணச் சம்மதம்! மிக்க சந்தோஷம்! இது எங்கள் பாக்கியம், நிச்சயம் வருகிறோம்!" என்று வணங்கி விடைபெற்று, யாத்திரிகர்கள் நீராடச் சென்றனர்.
நாதமுனிகளும், அவர் குமாரர் ஈஸ்வர முனிகளும் வேகமாகப் பெருமாள் கோயிலை நோக்கி புறப்பட்டார்கள்.
விஷ்ணுக்ரஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு, சோழ தேசத்தில் வீரநாராயணப் பெருமாள் கோயில் என்று வழங்கப்பட்டது. இக்கோயில் பராந்தக சோழன் காலத்திற்கும் முன்பே சிறப்புற்று விளங்கியது. பராந்தகனுக்கு வீரசோழன், மதுரை கொண்ட கோப்பரகேசரி போன்ற பல விருதுப் பெயர்கள் இருந்தாலும், வீரநாராயணன் என்ற பெருமாளின் பெயரைச் சேர்த்து 'பராந்தக வீரநாராயணன்' என்று சிறப்பு விருதுப் பெயராக வைத்துக் கொண்டதில், அவனுக்கு எப்போதுமே பெருமிதம் தான்.
ஒரு சமயம் அவன் காவிரியின் நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாகக் கடலில் கலப்பதைப் பொறுக்காமல், போர் இல்லாத காலத்தில் லட்சக் கணக்கான வீரர்களைக் கொண்டு குடிமக்களுக்கு உபயோகமாக வீரநாராயணப் பெருமாள் கோயிலருகே இருந்த சிறு குளத்தைப் பெரிய ஏரியாக விரிவுபடுத்தினான். அதன் கரையிலேயே, 'வீரநாராயண சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் அந்தணர்கள் வேதம் ஓதி வாழும் சிற்றூர் ஒன்றையும் அமைத்துக் கொடுத்தான். நாளடைவில் அது வீரநாராயணபுரம் என்று என்றும், அதன் பக்கமிருந்த ஏரியும் வீரநாராயண ஏரி என்றே வழங்கலாயிற்று.
நாதமுனிகள் கடல் போன்ற தோற்றம் கொண்ட இவ்வேரியைப் பார்க்கும் போதெல்லாம், ’மாட்டின் குளம்பு பதிந்த சிறு குழியில் தேங்கிய தண்ணீர் சில குருவிகளுக்கு மட்டுமே குடிநீராகும். ஆனால், வீரநாராயண ஏரியிலே இருக்கும் தண்ணீரோ நாட்டுக்கே நீராகும்" என்பார்[4].
இந்த ஏரியின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். நாட்டுப்புற நாரை நண்டுக் கதை ஒன்று உண்டு[5]. காவிரியிலிருந்து வீரநாராயண ஏரிக்குள் பாயும் தண்ணீர் கடல் அலைபோலக் கரைகளில் மோதும். ஒரு சமயம் நாரை ஒன்று, மீன் கிடைக்குமா என்று கரைப் பக்கம் மேயும்போது அங்கே ஒரு நண்டு கரைப்பக்கமாக ஒதுங்குகிறது. காவிரித் தாய், ‘ஐயோ! இந்த நண்டு இந்த நாரையிடம் மாட்டிக்கொள்ளப் போகிறதே!’ என்று எண்ணி, தன் அலைகளை வேகப்படுத்தி, நண்டை வாரி அணைத்து காப்பாற்றுகிறாள்.
சாதாரண நண்டுக்கே அருளும் காவிரி, நாதமுனிகளுக்கு அருளாமல் இருப்பாளா? யாத்திரிகர்களுடன் இருக்கும் பாலகன், ஒரு பெரும் புதையலைக் காண்பிக்கப் போகிறான் என்று நாதமுனிக்கு அப்போது தெரியவில்லை.
நாதமுனிகளும், அவர் குமாரர் ஈஸ்வர முனிகளும் கோயிலை அடைந்தார்கள். கோயிலுக்குள் இருக்கும் நந்தவனத்தில் நாதமுனிகள் பூக்களைப் பறித்துக் கொடுக்க, அதை ஈஸ்வர முனிகள் அழகான மாலைகளாகக் கட்டத் தொடங்கினார். இரண்டரை நாழிகைக்குப் பிறகு திருமண் தரித்துக்கொண்டு யாத்திரிகர்கள் கோயிலுக்குள் நுழைய, மாலைகளும் தயாராக இருந்தன.
"வாருங்கள்! வாருங்கள்!" என்று அவர்களை நாதமுனிகள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். ‘துளபம் தொண்டு ஆய தொல் சீர்’ ஆகக் கட்டப்பட்ட மாலைகளும், கமழும் துளசி கூடையுடன் ஈஸ்வர முனிகள் பின் தொடர்ந்தார்.
________________
[1] பட்டினப்பாலை
[2] தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் என்று திருவாய்மொழியின்’ வாசகத்தை அடியேற்று, ஸ்ரீமந் நாதமுனிகள் திருவாய்மொழிக்கு சூட்டிய பெயர் ‘பக்தாம்ருதம்’,
[3] நம்மாழ்வாரின் பிறபெயர்களின் ஒன்று
[4] ‘குளப்படியிலே தண்ணீர் தேங்கினால் குருவி குடித்துப் போகும். வீராணத்து ஏரியில் தங்கினால் நாடு பிழைத்துப் போகும்'
[5] தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய்
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே"
என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை தழுவி எழுதியது.
Comments
Post a Comment