"White Noise 2 - The Light" என்ற ஆங்கிலப் படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்தேன். முதல் காட்சியில், இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவருக்கு 'சி.சி.யூ'வில் இருதயத் துடிப்பு நின்று போகும். உடனே மருத்துவர்கள் நெஞ்சை அழுத்தி, பிசைந்து இருதயத் துடிப்பை மீட்டுகொண்டு வருவார்கள். 2008, பிப் 27ஆம் தேதி, சுஜாதாவிற்கு இந்த மாதிரியான ஒரு சிகிச்சையை நான் நேரில் பார்க்க நேர்ந்தது. சி.சி.யூ வேறு உலகம். கால்களுக்கு பாலிதீன் உறை அணிந்துகொண்டு, டெட்டால் போன்ற கிருமிநாசினி திரவத்தினால் கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும். 'நீங்க எப்படி உள்ளே வந்தீங்க?' போன்ற பார்வைகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் இரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு எல்லாம் சீராக இருக்கிறதா என்று கண்காணித்துக்கொண்டே இருக்க, இரண்டு மூன்று பேர் பக்கத்திலேயே எப்போதும் இருக்கிறார்கள். எல்லா அறைகளுக்கு வெளியிலும் ஒரு மஞ்சள் விளக்கு எரிகிறது. எமர்ஜன்ஸி என்றால் இந்த விளக்கு ஆம்புலன்ஸ் சத்தத்துடன் கண் சிமிட்டுகிறது. உடனே அக்கம்பக்கத்து டாக்டர், நர்சுகளும் உதவிக்கு ஓடி வருகிறார்கள்.