மணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் ! சிறுவயதில் ஒரு நாள் கொள்ளிடக்கரை கல்லணை வழியாக கோயிலடி என்று அழைக்கப்படும் அப்பகுடத்தானை சேவிக்கச் சென்றேன். சந்நிதி பூட்டியிருந்தது. விசாரித்ததில் அர்ச்சகர் வீட்டைக் காண்பித்தார்கள். அர்ச்சகரிடம் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். அவரும் அதற்குச் செவிசாய்த்து சந்நிதியின் கதவைத் திறந்தார். ஆனால் அகத்தில் எதையோ மறந்துவிட்டார். இதோ வந்துவிடுகிறேன் என்று சென்றார். கியூரியாசிட்டியினால் ஒரு காரியம் செய்தேன் ( கவனிக்கவும் - விவரம் தெரியாத சின்ன பையனாக இருந்த போது ) கருவரை உள்ளே சென்று பெருமாள் பக்கம் இருக்கும் அப்பகுடத்தையும் பெருமாளையும் தொட்டுச் சேவித்துவிட்டு வெளியே வந்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்த அர்ச்சகர் “நம்மாழ்வார் இங்கிருந்து தான் தன் கடைசிப் பாசுரத்தைப் பாடி மோட்சமடைந்தார்” என்றார். சில வருடங்கள் முன் மணல் லாரிகள் ‘சைடு’ கொடுக்காமல் ஓரம்கட்டிய போது மணக்கால் என்ற ஊர் பலகை வர “இங்கே தான் ஆளவந்தாருக்கு ஆசாரியரான மணக்கால் நம்பிகள் பிறந்த இடம்” என்று பெயர்ப் பலகையை கை கூப்பிச் சேவித்துவிட்டு ஒரு கிமீ தூரம் செண்டிருப்பேன்