Skip to main content

நம் கூரத்தாழ்வான்

நம் கூரத்தாழ்வான்


ஸ்ரீராமானுஜரைக் காக்க ஆழ்வான் உடையவர் மாதிரி காவி உடை தரிக்கக் கோபம் கொண்ட சோழ அரசனால் ஆழ்வான், பெரிய நம்பிகளின் கண்கள் பறிபோனது.  

ஆழ்வான், பெரிய நம்பிகளை வழி நடத்திக்கொண்டு பெரிய நம்பிகளின் குமாரத்தி அத்துழாய் ஸ்ரீரங்கம் நோக்கி நடந்தார்கள். பெரிய நம்பிகள் மிகவும் சோர்ந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தார்.  அப்போது அத்துழாய் “கோயில்(திருவரங்கம்) இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும். அதுவரை அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். 

பெரிய நம்பிகள் உடனே அந்த இடத்திலேயே ஆழ்வானின் மடியில் பரமபதித்தார். 

அவர் பரமபதிக்கும் முன் கூறிய வார்த்தை “ஒரு ஸ்ரீவைஷ்ணவன் மடியைக் காட்டிலும் கோயில் சிறந்தது கிடையாது, அடியேனுக்கு நம் ஆழ்வானின் மடியே சித்தித்துள்ளது!” என்று தன் ஆசாரியனான ஆளவந்தார் திருவடிகளைத் தியானித்து திருநாட்டுக்கு எழுந்தருளினார். 

’நம்’ என்ற அடைமொழி சில ஆழ்வார், ஆசாரியர்களுக்கும், பெருமாளுக்கும் உண்டு. உபதேச ரத்தினமாலையில் மாமுனிகள் 

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர்
அவரவர் தம் ஏற்றத்தால்
அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே!
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று
அன்புடையார் இவர்களுக்கு அன்பாகச் சாற்றிய திருநாமங்கள் என்கிறார்.

கூரத்தாழ்வானுக்கும் இந்த ‘நம்’ பொருந்தும். 

இராமானுச நூற்றந்தாதியில் 

”மொழியைக் கடக்கும் பெரும்புகழான் - வஞ்ச முக்குறும்பாம்

குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்”

என்கிறார் அமுதனார். காரணம் என்னவாக இருக்கும் ? 

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று தெரிகிறது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் பெரிய நம்பிகளிடம் கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் பிராத்திக்கிறார்கள். 

பெரிய நம்பிகள் ”சரி செய்கிறேன் ஆனால் என்னுடைய நிழல்  போலப்  பாரதந்திரியத்தை முழுமையாக உணர்ந்து நடப்பவர் ஒருவர் என்னைப் பின் தொடர வேண்டும்”  என்றார். 

”அப்படிப்பட்டவர் யார்? என்று ஸ்ரீராமானுஜர் கேட்க “நம் கூரத்தாழ்வான்” என்றார் பெரிய நம்பி. “நம்” என்ற பிரயோகம் பெரிய நம்பிகள் உபயோகித்ததையே அமுதனார் உபயோகித்துள்ளார் என்று கொள்ளலாம்.  

“வஞ்ச முக்குறும்பு ஆம் குழியைக் கடக்கும்” என்பதற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்கும். 

முக்குறும்பு என்பது 

கல்வி செருக்கு ( அதிகம் படித்தவன் என்ற எண்ணம் ); 

செல்வச் செருக்கு ( அதிக பணம் இருக்கிறது என்ற எண்ணம் ); 

குலச் செருக்கு ( உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணம் )

இந்த மூன்று கர்வங்களும் ஒரு பெரும் குழியைப் போன்றவை. அதற்குள் விழுந்துவிட்டால் வெளியேறுவது மிகக் கடினம். நம் கூரத்தாழ்வான் இந்த மூன்று கர்வங்களையும் ஜெயித்தவர்.

இராமானுச நூற்றந்தாதியில் இந்த வரிக்கு இரண்டு விதமாகப் பாடங்கள் உண்டு 

குழியைக் கடக்கும் 

குழியைக் கடத்தும் 

எது சரி ? 

முதல் பாடத்துக்கு அர்த்தம் - குழியைக் கடக்கும் - இந்த மூன்று கர்வங்களாகிய படு குழியைக் கடந்தவர் என்று பொருள். 

அடுத்த பாடம் குழியைக் கடத்தும் - இந்த மூன்று கர்வங்கள் ஆகிய படுகுழியைத் தான் கடந்தது மட்டும் அல்லாமல், தன் சீடர்களையும் கடக்க வைத்தார் என்று பொருள்.  

ஆக இரண்டும் சரியானவை தான் !

ஆழ்வானின் மேன்மையை உணர இந்தச் சம்பவத்தைப் பாருங்கள். 

அந்த ஸ்ரீ வைஷ்ணவனுக்கு ஒரே புதல்வன். ஓர் நாள் திடீர் என்று தன் சிகையை எடுத்துவிட்டு, வேறு மார்க்கம் சென்றுவிட்டான். அந்த ஸ்ரீ வைஷ்ணவர் மிகுந்த வேதனையில் துடித்தார்.  பல வருடங்கள் கழித்து அந்தப் பையன் திருமண் சிகையுடன் இல்லம் தேடி வந்து தன் தந்தை காலில் விழுந்தான். அந்தத் தந்தை அவனிடம் கேட்ட வார்த்தை “வழியில் ஆழ்வானைக் கண்டாயோ ?” என்பது தான். 

அப்பன் என்ற தனவந்தர் கூரத்தாழ்வான் திருமாளிகைக்குப் பக்கம் வசித்து வந்தார். ஆழ்வானைப் பற்றி அறிந்து அவரின் சீடராக வேண்டும் என்று விரும்பி ஆழ்வான் இல்லத்துக்கு வந்தார். துரதிருஷ்டவசமாக அப்போது ஆழ்வான் உயிர் பிரியும் சமயமாக இருந்தது. அதனால் அப்பன் ஆழ்வானைப் பார்க்க முடியவில்லை. மிகவும் மனம் வருந்தினார். அருகிலிருந்த பட்டரிடம் என்ன செய்யலாம் என்று கேட்க அதற்குப் பட்டர் “எப்பொழுது அப்பன் ஆழ்வானை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாரோ அப்போதே ஆழ்வானின் சீடராகிறார்” என்றார்.  கூரத்தழ்வானின் சீடராக ஆகவேண்டும் என்ற எண்ணமே ஒருவனுக்கு நல்லது செய்யும் என்கிறது வார்த்த மாலை 

இன்று ஆழ்வானின் திருநட்சத்திரம். 

ஆழ்வார், எம்பெருமானார், ஆழ்வான் திருவடிகளே சரணம்.

- சுஜாதா தேசிகன்

2-2-2021

தை ஹஸ்தம் 

கூரத்தாழ்வான் திருநட்சத்திரம் 

படம்: அடியேன் இல்லத்தில் உடையவருடன் கூரத்து ஆழ்வான் சேர்த்தி சேவை

Comments