Skip to main content

திருவரங்கப் பெருமாள் அரையர்

திருவரங்கப் பெருமாள் அரையர்



ஸ்ரீராமானுஜர் அவதரித்த அதே வருடம் ( 1017 ) வைகாசிக் கேட்டையில் ஆளவந்தாரின் புத்திரனாகத் திருவரங்கப் பெருமாள் அரையர் அவதரித்தார். ஆளவந்தார் இவரைத் தன் ஆசாரியன் மணக்கால் நம்பியை ஆச்ரயிக்கச் செய்தார்.

ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளும் சமயம் அவருடைய சீடர்கள் ஆளவந்தார் திருவடிகளை வணங்கி “எங்களுக்கு ஒரு நல்வார்த்தை அருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள். இதற்கு ஆளவந்தார் “பெரிய பெருமாள் கீழே எப்போதும் சேவித்து நிற்கும் திருப்பாணாழ்வாரே நம் ஸ்ரீ வைஷ்ணவத்தின் ரகசியம். பெரிய பெருமாளே உபாயமும், உபேயமும் என்று நமக்கு உணர்த்தியவர். பெரிய பெருமாள், திருப்பாணாழ்வாரிடம் மிகுந்த பக்தியுடைய திருவரங்கப் பெருமாள் அரையரை அண்டி இருங்கள்” என்று உபதேசித்தார்.

நம் ராமானுஜரைத் திருவரங்கம் அழைத்து வந்ததில் பெரும் பங்கு அரையரையே சாரும். ஆளவந்தார் பரமபதம் அடைந்த பின் எம்பெருமானார் சன்னியாசம் பெற்றார். காஞ்சி தேப்பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வந்தார். ராமானுஜரைத் திருவரங்கம் அழைத்துவர வேண்டும் என்று அடியார்கள் பெரிய பெருமாளிடம் வேண்டினார்கள். அரங்கன் மேற்பார்வையில் திருவரங்கத்தில் ராமானுஜரை எப்படி அழைத்துவரலாம் என்று திட்டம் தீட்டினார்கள். திட்டம் இது தான் காஞ்சி தேவப் பெருமாளை அரையர் ஆழ்வார் பாசுரங்களை விண்ணப்பித்து மயக்க வேண்டும். இது எப்படி சாத்தியமா என்று யோசிக்க வேண்டாம். திருவரங்கப் பெருமாள் ஆரையர் எப்படி லயித்து அரையர் சேவைப் புரிந்தார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.



நம்மாழ்வார் எம்பெருமானுக்கு இடைவிடாமல் எல்லாக் காலங்களிலும் தொண்டு புரிந்தார். “ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” என்று ஆழ்வார் திருவாய்மொழியில் அருளியது.

ஒரு நாள் அரையர் இந்தப் பாசுரத்தைப் பெருமாள் முன்னே விண்ணப்பம் செய்ய ஆரம்பித்தார். “ஒழிவில் காலம் எல்லாம் ...” இந்த வரியையே திரும்ப திரும்ப நெடுநேரம் கண்ணீருடன் விண்ணப்பம் செய்தார். அதற்கு மேலே பாசுரத்தைப் பாடவில்லை. பக்கத்தில் இருந்தவர்களுக்குப் புரியவில்லை. பிறகு அரையர் கைங்கரியம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார் என்று புரிந்துகொண்டார்கள்.

அரையர் காஞ்சிக்குப் புறப்பட்டார். அங்கே திருகச்சி நம்பிகளைச் சந்தித்து அவர்மூலம் காஞ்சி பேரருளாளனுக்கு அரையர் சேவையை ஏற்பாடு செய்தார். அரையரும் அபிநயத்துடன் பிரமாதமாக அரையர் சேவை புரிந்தார். நம்பெருமாளே அரையரிடம் மயங்குவார் அப்படி இருக்கப் பேரருளாளன் என்ன செய்வார் ? மயங்கி “திருவரங்கப் பெருமாள் அரையரே ! என்ன வேண்டும் கோளும்” என்றார்

பக்கத்தில் இருந்த ராமானுஜரைக் காட்டி “இவரைச் சன்மானமாகத் தந்தருள வேண்டும்!” என்றார். வேறு வழி இல்லாமல் ராமானுஜரைப் பிரிந்தார் காஞ்சி பெருமாள்.

ஸ்ரீரங்கம் வந்த ராமானுஜருக்கு ஆளவந்தார் நியமனப்படி அவருக்கு ஆழ்வார்களின் அருளிச்செயல் ரகசியங்களை அருளினார். ராமானுஜர் இவரிடம் ஆறு மாதம் கைங்கரியம் செய்து அர்த்தங்களைப் பெற்றார்.



ஒருநாள் ராமானுஜர் மஞ்சள் காப்பு அரைத்து அரையருக்குப் பூசிவிடும்போது, அது அவருக்குச் சற்று உறுத்துவதைக்கண்டு ராமானுஜர் மஞ்சள் காப்பை மீண்டும் நன்றாக அரைத்துப் பூசிவிட்டார். அரையர் ராமானுஜருடைய குரு பக்தியைக் கண்டு மகிழ்ந்து அவருக்கு

குருவே ப்ரப்ரும்மம்
குருவே பராகதி
குருவே பராவித்யா
குருவே பரம்தனம்
குருவே பேரின்பம்
குருவே பராயணம்

என்ற பரம ரகசியத்தை உபதேசித்தார். பிறகு ஆசாரியனே உபாயோபேயம் என்ற தத்துவத்தை விளக்கினார்.

அரையரைப் பற்றிச் சில விஷங்களைப் பார்க்கலாம்

“பொன்னரங்கம் எனில் மயலே பெருகும் இராமாநுசன்" என்பது திருவரங்கத்து அமுதனார் ராமானுஜர் பற்றி அருளியது. இந்த எண்ணம் ராமானுஜருக்கு எப்படி வந்திருக்கலாம் ?

திருவரங்கப் பெருமாள் அரையர் அவருடைய அந்திம காலத்தில் ( மரணத்தருவாயில் ) எழுந்தருளியிருந்தபோது அவரிடம் உடையவர் சென்று “தற்போது தேவரீர் மனதில் ஓடுகின்ற நினைவு எதைப் பற்றியது ?” என்று கேட்க அதற்கு அரையர் “எம்பெருமானுக்கு பற்பல திருநாமங்கள் இருந்தாலும் ‘திரு-வ-ர-ங்-க-ம்’ என்று நாலைந்து எழுத்துக்கள் சேர்ந்திருக்கின்ற அழகு தான் என்னே! என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். இதனால் தான் உடையவர் “பொன்னரங்கம் என்னில் மயலே பெருகுமிராமானுசன்” என்கிறார் அமுதனார். அரையருக்கும் ராமானுஜருக்கும் மனதில் திருவரங்கம் ‘அகல கில்லேன்’ தான்.

எப்படி ஆழ்வார் பாசுரங்களையும் அரையர் சேவையும் அனுபவித்தார்கள் எம் ஆசாரியர்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். ஒரு நாள் அரையர் ‘ஆருயிர் பட்டது எனது உயிர் பட்டது’ என்ற பாசுரத்தை விண்ணப்பித்தார். அப்போது உடையவர் ’இங்கே எனது உயிர் பட்டது. ஆனால் பரமபதத்தில் யார் உயிர் பட்டது ?’ என்று நம்மாழ்வார் வினவுவதாகக் கூறினார். அதாவது நம்மாழ்வார் அனுபவித்ததைப் பரமபதத்தில் நித்தியசூரிகள் அனுபவிக்கவில்லை என்று பொருளில் ராமானுஜர் கூறினார்.

இதை நஞ்சீயர் உடையவர் இப்படி கூறுவார் என்று தன் காலட்சேபத்தில் கூற உடனே பக்கத்தில் இருந்த நம்பிள்ளை ஆழ்வார்கள் நித்தியச் சூரிகள் போல் அனுபவிக்க ஆசைப்பட்டார்கள் அப்படி இருக்க ஆழ்வார் அனுபவம் எப்படி நித்தியசூரிகளின் அனுபவத்தைக் காட்டிலும் மேம்பாட்டது ? என்று கேள்வி எழுப்பினார். நஞ்சீயர் “புதுமணப் பெண் மணாளனுடைய கையை முதலில் பற்றும்போது புத்துணர்ச்சியுடன் அவளுக்கு வேர்ப்பது மாதிரி ஆழ்வார்களுக்கு அந்த அனுபவம். பலகாலம் கணவனோடு பழகிய பெண்களுக்கு அப்படிப்பட்ட புத்துணர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லையே ! நித்தியசூரிகள் அதுபோல என்று பதில் கூறினார்.

-0-0-

பரஸ்தானம் என்பது எங்காவது ஊருக்குப் புறப்படுவதற்கு முன் பேக வேண்டிய திசையில் உள்ள ஒருவர் இல்லத்தில் தம்முடைய சாமான்களை வைத்துவிட்டு பிறகு அங்கிருந்து புறப்படுவார்கள். ஒரு நாள் கூரத்தாழ்வான் நம்பெருமாளிடம் மோட்சம் அளிக்க வேண்டும் என்று பிராத்தித்தார். பெருமாளும் “தந்தோம்” என்றார். கூரத்தாழ்வான் தன் இல்லத்துக்குச் செல்லவில்லை. பரஸ்தானமாகத் திருவரங்க பெருமாள் இல்லத்திலேயே தங்கினார். அதாவது மோட்சம் போகும் திசையில் இவருடைய இல்லம் இருந்தது என்பதை ஆழ்வான் அறிந்திருந்தார். நாமும் அதை இன்று அறிந்துகொள்ளலாம்.

- சுஜாதா தேசிகன்
6-6-2020
வைகாசி கேட்டை
திருவரங்கப் பெருமாள் அரையர் திருநட்சத்திரம்

Comments