Skip to main content

ஸ்ரீ உறங்காவில்லியின் உள்ளம்

 ஸ்ரீ உறங்காவில்லியின் உள்ளம்

 ‘பேலன்ஸ் ஷீட்’(balance sheet) போன்ற’ கணக்கு வழக்குகளைப் பார்க்கும்போது அடிக்குறிப்பில்(footnotes) பல ரகசியங்கள் அடங்கியிருக்கும். அதுபோலச் சமீபத்தில் புத்தகம் ஒன்றைப் படித்தபோது அதில் ஒரு அடிக்குறிப்பில்  ”குருபரம்பரை புத்தகங்களில் இவர்களைப் பற்றி தகவல் இருப்பதில்லை. ’இவர்கள்’ என்பது  ‘மாறநேரி நம்பி, உறங்காவில்லி தாஸர் போன்ற ’சாத்தாத’ ஸ்ரீ வைஷ்ணவர்கள்.  இந்த அடிக்குறிப்பு ஒருவரின் கண்ணோட்டம். உண்மையாக இருக்கலாம் அல்லது அவர் பார்த்த புத்தகங்களில் அப்படி இருந்திருக்கலாம். இந்த கட்டுரை இதைப் பற்றியதில்லை. ஸ்ரீ உறங்காவில்லி தாஸரைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். 

ஒரு முறை ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ ராமானுஜரின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து ஒரு கேள்வியைக் கேட்டார் “அடியேனுக்கு வெகுநாட்களாக  ஒரு சந்தேகம்” 

 உடையவர் ”என்ன ?” என்று கேட்க முதலியாண்டான் கேட்கக் கேள்வி இது 

 “பூணூல் தரித்து வேதம் சொல்லும் நம்மில் சிலர் ஆசாரியனாகக் கூட இருக்கிறோம்  பிள்ளை உறங்காவில்லி தாஸர் போன்ற ‘சாத்தாத’ ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?” என்றார்  ( பூணூல் தரிக்காத ஸ்ரீ வைஷ்ணவர்களைச் சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர்கள் அல்லது பாகவதர்கள் என்று அழைக்கிறோம் ) 

 இதற்கு உடையவர் “அடியேனே இந்த விஷயத்தைப் பற்றிக் கூற வேண்டும் என்று இருந்தேன். நீரே கேட்டுவிட்டீர்” என்று பத்து வார்த்தைகளில் தன் பதிலைக் கூறினார்.  அதைப் பார்க்கும் முன் ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லி தாஸர் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். 

 ஸ்ரீபிள்ளை உறங்கா வில்லி தாஸர் திருநட்சத்திரம் மாசி ஆயில்யம். 

 சில வருடங்கள் முன் என்னிடம் இருக்கும் பல புத்தகங்களில் தேடியபோது பிள்ளை உறங்கா வில்லி தாஸருக்கு வாழி திருநாமம் இல்லை என்று தெரிந்தது. நாமே ஏன் முயற்சி செய்யக் கூடாது அடியேன் ஒன்றை எழுதினேன். எட்டு அடி கடைசியில் ’வாழி’ போட்டு மடித்து எழுதினேன் அவ்வளவு தான். எண்சீர்க் கழிநெடிலடி இலக்கணம் பார்ப்பவர்கள் அடியேனை பொருத்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

மாசி ஆயில்யத்தில் உதித்த தனுர்தாஸர் வாழியே !
பாண்பெருமாள் கண்ட கண்ணுக்கு மயங்கியோன் வாழியே !இளையபெருமாள் போல் துயிலாது சேவை செய்தோன் வாழியே !
பண்புடனே அடியார்களைப் போற்றியோன் வாழியே !
மதில் அரங்கர் வீதி உலாவிற்கு வாள் பிடித்தோன் வாழியே !
அன்புடனே எதிராசனுக்கு கை கொடுத்தான் வாழியே !
சங்கிலித்தொடர் சரணாகதி உணர்த்தியோன் வாழியே !
சடகோபன் பொன்னடியை பற்றிய பொற்பதங்கள் வாழியே !

 மேலே உள்ள ஒவ்வொரு வரியும் படிக்கும் போது அதனுடன் கூடிய சம்பவங்களை நினைத்துப்பார்க்க வசதியாகக் கீழே சுருக்கமாகத் தந்துள்ளேன்.

 1. மாசி ஆயில்யத்தில் உதித்த தனுர்தாஸர் வாழியே !

 மாசி ஆயில்யத்தில் பிறந்தவர். இயற்பெயர் தனுர் தாஸர்

 2. பாண்பெருமாள் கண்ட கண்ணுக்கு மயங்கியோன் வாழியே !

 நல்ல உடற்கட்டு. மற்போரில் சிறந்த மல்லன். பெயர் வில்லி. வில்லிக்கு ஒரு காதலி. பொன்னாத்தாள். அழகான கொடியிடையாள் கூடுதல் அழகு கண்களில்.

வில்லி மயங்கி அவளுடைய அழகிற்கு அடிமையானான். உறையூரை ஆண்ட அரசனுக்கு மல்லனாக இருந்த வில்லி பல மல்லர்களை வென்று மரியாதை மிக்கவனாக இருந்தான்.ஸ்ரீரங்கத்தில் உற்சவ காலம். எங்கும் கூட்டம். பொன்னாத்தாள் உற்சவம் பார்க்கப் போக வேண்டும் என்று விருப்பப்பட மல்லன் அவளை அழைத்துக்கொண்டு சென்றான். போகிற வருகிற மக்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டு சென்றார்கள். காரணம் மல்லன் வெய்யிலில் அவள் தேகத்துக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று குடை பிடித்துக்கொண்டு சென்றான் ! கூடவே அவள் கால்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நடைபாதையில் தூண்டோ அல்லது ராஜா இவனுக்கு அளித்த பொன்னாடையையோ விரித்து அதன் மீது நடத்தி அழைத்துக்கொண்டு வந்தான்.

 போகிற வருபவர்களின் நமுட்டு சிரிப்பையும், கேலிப் பேச்சை அவன் கண்டுகொள்ளவில்லை. அவன் காதலிக்கு ஏதுவும் ஆகிவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். நடந்து சென்ற பலருக்கு இது சம்பவம் வேகத்தடையாக இருக்கக் கூட்டம் சேர்ந்தது.

 அந்த பக்கம் உடையவர் தன் சீடர்களுடன் வர “என்ன கூட்டம்?” என்று விசாரிக்க, கேலியாகப் பதில் சொன்னார்கள். எம்பெருமானார் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார். மடத்துக்குச் சென்ற பிறகு ஒரு சிஷ்யனை அனுப்பி மல்லனை அழைத்து வரச் சொன்னார். மல்லன் மடத்துக்கு வந்தான்.

 “என்ன விஷயமா என்னை… ?” என்று மல்லன் கேட்க

 “ஏம்பா பட்டப்பகலில் பலர் பரிகாசம் செய்ய நீயோ உன் காதலிக்குக் குடைபிடித்துக்கொண்டு, துண்டை விரித்துக்கொண்டு போகிறாய்..”

  “அவள் அழகுக்கு நான் அடிமை..சாமி”

 “அடிமையாகும் அளவிற்கு அவளிடம் என்ன கண்டாய்?”“நீங்க அவள் கண்ணழகை பார்த்தால் இப்படி சொல்ல மாட்டீங்க.. அதை பாதுகாக்க குடை பிடித்துக்கொண்டு போவதில் என்ன தப்பு ? “

 “அப்படியா ? அவளுடைய கண்ணழகை காட்டிலும் மிக அழகிய கண்களைக் கண்டால் நீ என்ன செய்வாய்?”

  “அப்படி காட்டினால் அவளை விட்டுவிட்டு அந்த கண்களுக்கு அடிமை ஆகிவிடுவோன்”

  “சரி வா என்னுடன்” என்று உடையவர் மல்லனை அவன் மனைவியுடன் பெரிய பெருமாள் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். பெரிய பெருமாளிடம் திருப்பாணாழ்வாருக்குக் காட்டியருளிய கண்களை மல்லனுக்கும் காண்பித்தருளும்படி வேண்டினார்.

மல்லனும் அவன் மனைவியும் மெய்சிலிர்த்துப் போனார்கள்.

மல்லனும் பொன்னாச்சியும் ஸ்ரீராமானுஜர் சிஷ்யர்கள் ஆனார்கள்.

  பாண்பெருமாள் - திருப்பாணாழ்வார்; திருப்பாணாழ்வார், பிள்ளை உறங்காவில்லி தாஸர் இருவருக்கும் பிறப்பிடம் உறையூர்.

3. இளையபெருமாள் போல் துயிலாது சேவை செய்தோன் வாழியே !

ஸ்ரீராமரின் வனவாசத்தின்பொழுது இளையபெருமாள்(லக்ஷ்மணர்) உறங்காமல் அவருக்குக் கைங்கரியம் செய்தார். அதுபோல் தாஸரும் இடைவிடாது ஸ்ரீராமானுஜருக்கு கைங்கரியம் செய்துகொண்டு இருந்ததால் அவருக்கு உறங்கா வில்லி என்ற திருநாமம் பிரபலமாகியது.

 பிள்ளை என்பது “நம்ம பையன்” என்று சொல்லமாட்டோமா ? அது மாதிரி பிள்ளை அடைமொழி4. பண்புடனே அடியார்களைப் போற்றியோன் வாழியே !

 மடத்துச் சிஷ்யர்கள் சிலர் தாஸர் மீது அசூயை கொண்டார்கள். அவரின் உயர்வைக் காட்ட ஸ்ரீராமானுஜர் ஒரு நாடகத்தை நிகழ்த்தினார்.

தாஸர் மீது அசுயை கொண்டவர்களைக் கூப்பிட்டுத் தாசரின் இல்லத்துக்குச் சென்று அங்கே இருக்கும் நகைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து வரச் சொன்னார்.

சிஷ்யர்கள் தாசரின் இல்லத்துக்குச் சென்ற போது பொன்னாச்சியார் உறங்கிக் கொண்டிருந்தார். சத்தம் எதுவும் போடாமல், அவள் அணிந்திருந்த நகைகளைச் சிஷ்யர்கள் கழற்ற முற்பட்டனர் பொன்னாச்சியாரும் இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் வறுமையின் காரணமாக களவாடுகிறார்கள் என்று எண்ணி அவர்கள் நகைகளை எளிதில் கழற்றுவதற்கு இடம் கொடுத்தார்.

ஒரு பக்கம் நகைகளைக் கழட்டிய பின் அடுத்த பக்கம் திரும்பிப் படுத்தால் மறுபக்கம் நகைகளையும் கழட்ட வசதியாக இருக்கும் என்று இயல்பாகத் தூக்கத்தில் திரும்புவது போலப் பாசாங்கு செய்தார், ஆனால் திரும்புவதைக் கண்ட சிஷ்யர்கள், அவள் எழுந்துவிட்டாள் என்று ஒரே ஓட்டமாக எம்பெருமானாரிடம் சென்று நடந்தவற்றைக் கூறினார்கள்.

எம்பெருமானார் சிஷ்யர்களை மறுபடியும் தாசரின் இல்லத்திற்குச் சென்று அங்கு நடப்பவற்றைக் கவனிக்கச் சொன்னார். அங்கே பொன்னாச்சியாரிடம் தாசரிடம் நடந்தவற்றைச் சொல்லிக்கொண்டு இருந்தார்.. “அவர்கள் பயந்து ஓடி விட்டார்கள்” என்று சொன்னது தான் தாமதம், உடனே தாஸர் மிகுந்த வருத்தப்பட்டு “நீ கல்லைப் போலக் கிடந்து அவர்கள் விருப்பம் போல நகைகளை எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்க வேண்டும்..பெரிய பாகவத அபசாரம் செய்துவிட்டோம்” என்று கோபத்துடன் கூறினார். சிஷ்யர்களுக்கு தாஸர், பொன்னாசியின் உயர்ந்த குணம் விளங்கியது.5. மதில் அரங்கர் வீதி உலாவிற்கு வாள் பிடித்தோன் வாழியே !

 பிள்ளை உரங்காவில்லி தாஸர் நம்பெருமாள் புறப்பாடு கண்டாளும் போது ஒரு கத்தியைப் பிடித்துக்கொண்டு சேவித்து வருவாராம். பெருமாள் திருமேனிக்கு ஏதேனும் அசைவு ஏற்பட்டால், அந்தக் கத்தியால் தம்மைக் குத்திக்கொண்டு உயிரை விட்டு விடுவதற்காகவே அப்படிச் செய்வாராம். நம்பெருமாள் மீது அப்படி ஒரு பரிவு!

6. அன்புடனே எதிராசனுக்கு கை கொடுத்தான் வாழியே !

தினமும் காலை உடையவர் காவிரிக்கு நீராடச் செல்வார். அப்படிச் செல்லும் போது அவர் முதலியாண்டான் கையை பிடித்துக்கொண்டு செல்வார். நீராடிவிட்டு வரும் போது தாஸர் கையை பிடித்துக்கொண்டு வருவார்.

ஒரு குரு தன் சீடனின் கையை பிடித்துக்கொண்டு வருவதில் என்ன தப்பு என்று தோன்றலாம். ஆனால் ஆயிரம் வருடம் முன் இது ஒரு பெரும் சர்ச்சையாகியது.

 ஸ்ரீராமானுஜர், முதலியாண்டான் இருவரும் பிராமணர்கள் ஆனால் பிள்ளை உறாங்காவில்லி தாஸர் அந்தணர் குலம் கிடையாது. பொதுவாக நீராடிவிட்டு வரும் போது யார் மீதும் பட மாட்டார்கள். ஆனால் உடையவர் அந்தணர் அல்லாத தாஸர் கையை பிடித்துக்கொண்டு வருவது வியப்பை அளித்தது. பலர் முகம் சுளித்தார்கள். சிலர் ஸ்ரீரமானுஜரிடம் இதைப் பற்றி கேட்க அதற்கு உடையவர்

“தாஸருக்கு உள்ள நல்ல எண்ணம், பாவம், பக்தி அடியேனுக்கு இன்னும் வரவில்லை அது வர வேண்டும் என்று தான் அவர் கையை பிடித்துக்கொள்கிறேன்.. அது மட்டும் இல்லை, ஆழ்வார்களின் பாசுரங்களைக் கேட்கும் போது பிள்ளை உறங்காவில்லி தாஸர் மனம் உருகி அவர் கண்ணில் நீர் வருகிறது. ஆனால் அடியேனுக்கு அந்த மாதிரி வருவதில்லை… எனக்கு அந்த உருக்கும் பக்தி, பணிவு வர வேண்டும்” என்றார் மேலும்

“எப்ப பிராமணாக பிறந்தேனோ எனக்குள் குல செருக்கு எங்காவது வந்துவிடுமோ என்று பயமாக இருக்கு. ஆனால் உறங்காவில்லி தாசருக்கு அந்த செருக்கு கொஞ்சம் கூட இல்லை. அதனால் அவர் கையை பிடித்துக்கொண்டு வருகிறேன்” என்றார்.

 7. சங்கிலித்தொடர் சரணாகதி உணர்த்தியோன் வாழியே !

 ஒருமுறை ஸ்ரீராமானுஜர் விபீஷண சரணாகதி காலக்ஷேபம் அருளிக்கொண்டிருந்தார். கோஷ்டியிலிருந்த ஸ்ரீபிள்ளை உறங்காவில்லி தாஸர் எழுந்து புறப்பட்டார்.

உடையவர் “ஏன் என்று கேட்க” அதற்கு தாஸர் ”ஸ்ரீராமர் சுக்ரீவன், ஜாம்பவான் முதலியவர்களிடம் விவாதம் செய்த பின்பே விபீஷணரை ஏற்றுக் கொண்டார். அவருக்கே அந்த நிலைமை என்றால் அடியேனுக்கு..? “

உடையவர் பதிலளித்தார் “அடியேனுக்கு மோக்ஷம் கிட்டினால், உமக்கும் மோக்ஷம் கிட்டும், பெரிய நம்பிக்கு மோக்ஷம் கிட்டினால், தமக்கு அது கிட்டும், ஆளவந்தார் மோக்ஷமடைந்தால் பெரிய நம்பிக்கு அது கிட்டும்;... இது சங்கிலித்தொடர் போல்...நம்மாழ்வார் தமக்கு மோக்ஷம் கிட்டியதென்று அறிவித்ததைப் போலவும், பெரிய பிராட்டியாரும் நாம் அனைவரும் மோக்ஷம் அடைய எம்பெருமானிடம் பரிந்துரைக்கிறார்.. கவலைப் பட வேண்டாம்” என்றார்.

8. சடகோபன் பொன்னடியை பற்றிய பொற்பதங்கள் வாழியே !

 ’சடகோபன் பொன்னடி’ என்றால் அது ஸ்ரீராமானுஜரை குறிக்கும். ஸ்ரீபிள்ளை உறங்கா வில்லி தாஸர் இயற்றிய தனியன்

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறை இல்லை ஓதினோம்
குன்றம் எடுத்தான் அடிசேர் ராமனுசன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி

அன்று ‘குன்று குடையாய்’ கோவர்தன மலையைத் தூக்கிப் பிடித்துத் தன் மக்களைக் காத்த கண்ணனின் அடியவரான ஸ்ரீ ராமானுஜரும், அவர்க்கு அடியவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நாங்கள் அடியவர்களாக இருப்பதால் எங்களுக்கு ’ஒரு குறையும் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லுகிறார். இந்த ஒரு பாசுரம் ஸ்ரீவைஷ்ணவ சூத்திரம் என்று கூடச் சொல்லலாம். அதனால் தான் இயல் சாற்றுமுறையில் இந்தத் தனியன் முதலில் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீ முதலியாண்டான் ஸ்ரீ ராமானுஜரிடம் கேட்ட கேள்விக்கு ஸ்ரீராமானுஜரின் பதில்களை இப்போது பார்க்கலாம். (‘நாம்’ - பூணூல் தரித்த ஸ்ரீவைஷ்ணவர்களை குறிக்கும் ‘அவர்கள்’ என்பது சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களை குறிக்கும்) 

1.நாம் ஊர் ஊராகச் சென்று நாட்டை திருத்துவதற்கு உபதேசம் செய்வோம் ஆனால் அவர்கள்  ’நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே’ (திருவாய்மொழி) என்று நம்மாழ்வார் கூறுவது போல, உலகப் பற்று தவிர்த்து நாராயணானே நமக்கே’ (திருப்பாவை) ஸ்ரீமத் நாராயணனைப் பெற்றோம் என்று ’நாராயணானே நமக்கே’ (திருப்பாவை) கதி என்று இருப்பார்கள். 

2. நாம் தண்ணியில் விழுந்தவன் கையில் மரக்கட்டை கிடைத்தால் ஒரு கையில் மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் நீந்துவது போல (இரண்டையும் விடாமல்) நாம் கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று ஏதாவது ஒரு திவ்ய தேசத்தில் இல்லாமல் அங்குமிங்கும் சென்றுகொண்டு இருப்போம். அவர்கள் ஏதாவது ஒரு பிரதான திவ்ய தேசம் ஒன்றில் ’மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும்' ( இரா. நூற்)  என்று பிராட்டி திருமால் விட்டு என்றும் பிரியாமல் அண்டி இருப்பது போல இருப்பார்கள். 

 3. நாம் மற்ற ஆழ்வார்கள் போல ’கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்' ( நம்மாழ்வார்) மன கலக்கத்திற்கு ஏற்ப அவனிடம் கோபம் கொண்டு விலகியும், சில சமயம் அவனைப் போற்றி பல்லாண்டு பாடுவோம். ஆனால் அவர்கள் பெரியாழ்வார் போல எப்போதும் பல்லாண்டு பாடிக்கொண்டு ‘கலக்கமில்லா நாள் தவ முனிவர்' (நம்மாழ்வார்) போல  இருப்பார்கள். 

 4. நாம் சம்சாரம் என்னும் கடலில் மழை, காற்று போன்றவற்றால் கலக்கம் ஏற்படுவது போலச் சுக துக்கத்துக்கு ஏற்ப ’அலை நீர் கடலுள் அழுந்தும் நாவாய்' (திருவாய்மொழி) போல உழன்று கொண்டு இருப்போம் ஆனால் ’தளர்தல் அதன் அருகும் சாரார்'  (இரண்டாம் திருவந்தாதி ) என்பது போல அவர்கள் நங்கூரம் பாய்ச்சும் கப்பல் போல ஸ்திரமாகப் பெருமாளைப் பற்றி ’தரு துயரம் தடாய் ஏல்’ (பெருமாள் திருமொழி )என்பது போல  இருப்பார்கள். 

 5. அணுவிற்கும் மேருவிற்கும்(மலை) உள்ள வித்தியாசம் போல, நாம் நம் குலம், கோத்திரம் என்பதை (மலை எப்படி பூமியில் ஸ்திரமாகப் பற்றியிருக்குமோ )அது போலப் பற்றிப் பற்றி இருப்போம். ஆனால் அவர்கள் அணுக்கள் எப்படி ஒன்றோடு ஒன்று இணைந்து நிரந்தரமாகப் பிடித்துக் கொண்டு இருக்குமோ அது போல ஜீவாத்மா பரமாத்மா சம்பந்தத்துடன் இருப்பார்கள். 

 6. நாம் வேதம் என்கிற சக்கை கலந்த கரும்பைக் கடித்து பல்லை முறித்துக்கொள்வோம். ஆனால் அவர்கள் கரும்புச் சாறாகிய த்வயத்தை  பருகி இன்புறுவார்கள். 

 7. நாம் இந்த உலகத்தில் ‘மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா’ (திருவாய்மொழி) , ’அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்’ ( பெரிய திருமொழி ) ’பாவியேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ’ (திருவாய்மொழி) ’திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்' (பெரிய திருமொழி) என்று பயம், குழப்பத்துடன் லீலா விபூதியில் கலங்கி நிற்போம். அவர்கள் ’இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்?’ ( திருவாய்மொழி), ‘வான் உயர் இன்பம் எய்தில் என் நரகமே' ( திருவாய்மொழி ), ‘நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே' (கண்ணிநுண்) ‘நாற்றுப் போல் அவன் செய்வன செய்துகொள்ள' (பெரியாழ்வார் திருமொழி) என்று  நித்ய விபூதியில் இருப்பவர்களைப் போல கலக்கமும் பயமும் இல்லாமல் இருப்பார்கள். 

 ( இந்த பகுதியில் இருக்கும் ஆழ்வார் பாசுரங்களின் குறிப்புகளை எளிமையாக இப்படிப் படிக்கலாம்  என்று  நித்ய விபூதியில் இருப்பவர்களைப் போல கலக்கமும் பயமும் இல்லாமல் இருப்பார்கள். 

 ( இந்த பகுதியில் இருக்கும் ஆழ்வார் பாசுரங்களின் குறிப்புகளை எளிமையாக இப்படிப் படிக்கலாம்  ”நாம் இந்த 

 இந்நிலத்தில் நிலவும் பஞ்சேந்திரியங்களால் ஓயாமல் அலைந்து அற்ப விஷயங்களை இந்த பாவியின் கண்ணிலே நீ காண்பித்து என்னை முடிக்க நினைக்கிறாயா ? இனி என்ன செய்வது என்று அறியாமல்' பயம், குழப்பத்துடன் லீலா விபூதியில் கலங்கி நிற்போம். அவர்கள் ’இந்த உலகத்தில் திரியும் எனக்கு என்ன தாழ்வு ? திருநாட்டிலே போய்ச் சிறந்த ஆனந்தத்தைப் பெற்றால் என்ன ? இல்லை சம்சாரத்தைப் பெற்றால் தான் என்ன ? நம்பிக்கையுடன் வைகுந்தம் நிச்சயம் என்று வயலில் வளர்ந்த நாற்றை வயக்குடையவன் எப்படி தன் இஷ்டப்படி விநியோகிப்பானோ' அது போல நித்ய விபூதியில் இருப்பவர்களைப் போலக் கலக்கமும் பயமும் இல்லாமல் இருப்பார்கள். 

8. நாம் வேதத்தைப் படித்துவிட்டு, இருட்டான இரவில் 'திக்கு தெரியாமல்' இருப்போம். அவர்கள் ’பேர் ஆயிரமும் ஓதுமின்கள்' (பெரிய திருமொழி) என்று அவன் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டு திருமாலை தனக்குத் துணையாகப் பெற்று 'மாதவன் தன் துணையா நடந்து’ (பெரிய திருமொழி) அவன் காட்டும் சரம ஸ்லோகம் என்ற வெளிச்சத்தில் 'செப்பிய கீதையின் செம்மை பொருள்’  (இரா.நூற்ற) நேர் வழியில் செல்வார்கள். 

9. நாம் ’அந்தி வைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்- வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே’ (திருநெடும் தாண்டகம்) என்று தினமும் மந்திரங்களை ( காயத்திரி மந்திரம் ) சொல்லிக்கொண்டு இருப்போம். அவர்கள் ’ஓதி உரு எண்ணும் அங்கு ஆம் பயன் என் ?’ ( முதல் திருவந்தாதி ) என்று எப்போதும் மந்திர ரத்தினமான த்வயத்தையே சிந்தித்திருப்பார்கள். 

 10. நாம் வைதீக கர்மங்களைப் பற்றிக்கொண்டு, அக்னி போன்ற தேவதைகளைப் பற்றி அதன் மூலம் பெருமாளைப் பற்றி இருப்போம்.  அவர்கள் அவனுக்கும், அவனைப் பற்றியிருப்பவர்களுக்கும் சேஷம் என்று இருப்பார்கள். 


‘Where others see a besotted man, an Acharya sees a pure soul‘ ஸ்ரீராமானுஜர் போன்ற நம் ஆசாரியர்கள் ஸ்ரீபிள்ளை உறங்காவில்லி தாஸர் போன்றவர்களை கண்டுபிடித்தார்கள்.  இன்றும் ஸ்ரீ தாஸர் பரம்பரையில் சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களாக  இடுப்பில் சின்ன கத்தியுடன் நம்பெருமாளுக்கு கைங்கரியம் செய்கிறார்கள். 

 ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லி தாஸர் திருவடிகளே சரணம்.

- சுஜாதா தேசிகன்
26-02-2021
மாசி ஆயில்யம், ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லி தாஸரின் திருநட்சத்திரம் 

படம் : ஸ்ரீ பிள்ளை உறங்காவில்லி தாசர் பட்டத்தில் திருவரங்கத்தில் இருப்பவர் 


Comments

  1. அருமையான தொகுப்பு ,ஸ்வாமி.சிறந்த பக்தர்களை,வெளிச்சம் இட்டு,காட்டியதற்கு,நன்றி.

    ReplyDelete

Post a Comment