Skip to main content

மணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் !

மணக்கால் நம்பி - தேடி வரும் ஆசாரியன் !சிறுவயதில் ஒரு நாள் கொள்ளிடக்கரை கல்லணை வழியாக கோயிலடி என்று அழைக்கப்படும் அப்பகுடத்தானை சேவிக்கச் சென்றேன். சந்நிதி பூட்டியிருந்தது. விசாரித்ததில் அர்ச்சகர் வீட்டைக் காண்பித்தார்கள். அர்ச்சகரிடம் பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். அவரும் அதற்குச் செவிசாய்த்து சந்நிதியின் கதவைத் திறந்தார். ஆனால் அகத்தில் எதையோ மறந்துவிட்டார். இதோ வந்துவிடுகிறேன் என்று சென்றார்.

கியூரியாசிட்டியினால் ஒரு  காரியம் செய்தேன் ( கவனிக்கவும் - விவரம் தெரியாத சின்ன பையனாக இருந்த போது ) கருவரை உள்ளே சென்று பெருமாள் பக்கம் இருக்கும் அப்பகுடத்தையும் பெருமாளையும் தொட்டுச் சேவித்துவிட்டு வெளியே வந்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்த அர்ச்சகர் “நம்மாழ்வார் இங்கிருந்து தான் தன் கடைசிப் பாசுரத்தைப் பாடி மோட்சமடைந்தார்” என்றார். 

சில வருடங்கள் முன்  மணல் லாரிகள் ‘சைடு’ கொடுக்காமல் ஓரம்கட்டிய போது மணக்கால் என்ற ஊர் பலகை வர “இங்கே தான் ஆளவந்தாருக்கு ஆசாரியரான மணக்கால் நம்பிகள் பிறந்த இடம்” என்று பெயர்ப் பலகையை கை கூப்பிச் சேவித்துவிட்டு ஒரு கிமீ தூரம் செண்டிருப்பேன்  ”மணற்கால் நம்பி அவதார ஸ்தலம்” என்ற சின்ன பலகை என் கண்ணில் பட்டவுடன் வண்டியைத் திருப்பி சென்ற போடு கோயில் கதவு பூட்டியிருந்தது. கதவு திறப்பதற்கு முன் அவரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

உய்யக்கொண்டாரின் பிரதான சீடர் மணற்கால் நம்பி இயற்பெயர் “ஸ்ரீராமன்”. உய்யக்கொண்டாரின் மனைவி பரமபதிக்க, அவருடைய திருமாளிகை காரியமெல்லாம் மணற்கால் நம்பியே செய்துவந்தார். உய்யக்கொண்டாரின் இரண்டு சின்ன பெண் குழந்தைகளையும் இவரே பார்த்துக்கொண்டார். ஒரு நாள் அந்தக் குழந்தைகளை நீராட்டி அழைத்து வரும் வழியில் வாய்க்காலில் சேறாயிருப்பதைக் கண்டு அவர்களுடைய கால்கள் சேற்றில் படாமல் இருக்கத் தானே படியாய்க்கிடந்து, அவர்களை தன் முதுகிலே கால் வைத்துக் கடக்க செய்தார். தம்முடைய குழந்தைகளில் கால் சுவடுகளை அவர் முதுகில் பார்த்த உய்யக்கொண்டார் அவருடைய ஆசாரிய அபிமானத்தைக் கண்டு வியந்து அவருக்கு மணற்கால் நம்பி என்று திருநாமம் சாத்தினார்.

ஆசாரிய சம்பந்தம் இருந்தால் மட்டுமே பகவானால் உத்தாரணம் பண்ண முடியும் என்பதற்கு மணற்கால் நம்பிச் சிறந்த உதாரணம். அவருடைய பெயரே இந்த ஊரின் பெயராக இன்றும் இருக்கிறது. (அதற்கு முன் அந்த ஊரி பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது!)

மணற்கால் நம்பி அவதார ஸ்தலத்துக்குச் சென்ற போது கோயில் பூட்டியிருந்தது. ”அர்ச்சகர் வேலைக்குச் சென்றுவிட்டார்” என்று அவர்கள் வீட்டு மாமி எங்களுக்காகக் கோயிலைத் திறந்துவிட்டார். மணற்கால் நம்பியைச் சேவித்துவிட்டு வரும் வழியில் காவிரியில் தண்ணீர் அலை மோதியது. நீர் பற்றி நம்மாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம். 

குழையும் வாள் முகத்து ஏழையைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு*
இழை கொள் சோதிச் செந்தாமரைக்கண் பிரான்* இருந்தமை காட்டினீர் **
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு*அன்று தொட்டும் மையாந்து*
இவள்
நுழையும் சிந்தையள், அன்னைமீர்!* தொழும்-அத் திசை உற்று நோக்கியே 

மேலே நீங்கள் படித்தது திருவாய்மொழி பாசுரம். திருத்தொலைவில்லி மங்கலத்து பெருமானைக் கண்டவுடன் பராங்குச நாயகிக்கு மழை பெய்தாற் போல கண்ணீரானது தாரை தாரையாகப் பெருகியது என்று தோழி சொல்லுவது போல அமைந்த பாசுரம் இது. 

பாசுரத்துக்கு எளிய பொருள் -  குழையும் மென்மையான ஒளி கூடிய முகமும் உடையவள் ; இவளைத் தொலைவில்லி மங்கலத்துக்குக் கொண்டு அவன் இருப்பைக் காட்டினீர்கள். மீளாத சபலம் உடைய இவள் பெருமானின் சுய ஒளி வீசும் தாமரைக் கண்களின் அழகில் ஈடுபட்டாள். அவன் வடிவழகு கண்டதிலிருந்து மழை நீர் போலக் கண்ணீர் வடிக்கிறாள். தேவபிரான் இருக்கும் திசையையே பார்க்கிறாள்.

இதைப் படிக்கும் போது இப்படி எல்லாம் கண்ணீர் வருமா ? இது எல்லாம் கவிதையில் வரும் மிகைப்படுத்திய உவமை என்று தோன்றும்.

மணக்கால் நம்பி பகவத்கீதையை விளக்கி எம்பெருமானைக் குறித்து ஆளவந்தாருக்கு உபதேசம் செய்தார். கீதையின் சரமச்லோகத்தை கேட்ட ஆளவந்தார் “எம்பெருமானே உபாயம். அவனைக் காண வழியுண்டா ?” என்றார். மணக்கால் நம்பி ஆளவந்தாரைத் திருவரங்கம் அழைத்துச் சென்று பெரிய பெருமாளைக் காட்டினார். ’காட்டவே கண்ட பாதமாக’ ஆளவந்தார் பெரிய பெருமாளைச் சேவித்த உடனே அவர் கண்ணிலிருந்து தாரை தாரையாக பராங்குச நாயகியின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருகியது போலப் பெருகியது. 

இன்று பதம் பிரித்த பிரபந்தம் அறிவிப்பில் கவனம் சென்றதால் மணக்கால் நம்பியின் திருநட்சத்திரம் என்பதை மறந்தேன். ஒரு மணி நேரத்துக்கு முன்பு நண்பர் ஒருவர் அழைத்து “இன்று மணக்கால் நம்பி திருநட்சத்திரம். மணக்காலில் இன்று  தீர்த்த வாரி நன்றாக நடந்தது” என்றார். 

ஆளவந்தாரை நம் சம்பிரதாயத்துக்கு கொண்டு அவர் இருப்பிடம் தேடிச் சென்று தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு அவரை தன்பக்கம் திரும்பச் செய்து அவருக்கு உபதேசம் செய்தார். அதே போல இன்று இருக்கும் இடத்திலிருந்து அடியேனுக்கு ஞாபகப் படுத்தினார்!

- சுஜாதா தேசிகன்
27.02.2021
மாசி மகம், மணக்கால் நம்பி திருநட்சத்திரம் 

Comments