ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்! கோவிட் வருவதற்கு ஒரு வாரம் முன் அமெரிக்கா சுற்றுலா விசா வாங்கச் சென்றிருந்தேன். பராக்குப் பார்க்கும் போது ஒன்றைக் கவனித்தேன். எல்லோரும் ஒழுங்கான உடை, திருத்தப்பட்ட முகமண்டையுடன், நாற்றம் அடிக்காத ஷூ-சாக்ஸ் கையில் ஒரு ஃபைல் என்று ஒழுங்காக வந்திருந்தார்கள். பெரும்பாலோர் முகத்தில் கனவுகளுடன் பதற்றமாகக் காணப்பட்டார்கள் ( விசா ரிஜக்ட் ஆகிவிடுமோ ?). டோக்கன் நம்பர் கூப்பிட்ட சமயம் சிலர் கை கூப்பி வேண்டிக்கொண்டு சென்றார்கள். அமெரிக்காவிற்குள் போவதற்குத் தடையாக நம்மை அறியாமல் ஏதாவது பாவம் செய்திருப்போமோ என்று பயந்துகொண்டு, கேட்ட வேள்விகளுக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற துடிப்பில் பதில் கூறினார்கள். இவர்களுடைய அடுத்த இலக்கு பச்சை அட்டை வாங்கி அந்தச் சொர்க்கப் பூமியில் நிரந்தரமாக வாசம் செய்வது தான். அமெரிக்காவுக்குப் போவதற்கே இந்த மாதிரி தயார் செய்துகொண்டால், பரமபதம் செல்ல எப்படி எல்லாம் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும் ? ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கரின் அமுத மொழி ஒன்றில் நம்மைத் தனியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ‘இந்த மானிடப் பிறவி...