திரு பாவை துதி -26
கோதா ஸ்துதி - 26- கோதையே நம் சம்சார தாபங்களை போக்கும் ஆசாரியன்
ரங்கே தடித்குணவதோ ரமையைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ்ய கடிதாம் க்ருபயா ஸுவ்ருஷ்ட்யா |
தௌர்கத்யதுர்விஷவிநாச ஸுதாஅந்தீம் த்வாம்
ஸந்த: ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந் || .26.
எளிய தமிழ் விளக்கம்
கோதா தேவியே!
திருவரங்கத்தில்
மின்னற்கொடியான பெரிய பிராட்டியுடன்
கூடிய கரு மா முகிலனான அரங்கன்
கருணை மழையாகப் பொழிய,
கோதா என்ற அமுத வெள்ளத்தில்
உன்னைச் சரணடைந்து,
உன்னில் நீராடுவதால்
சம்சாரத் துஷ்ட விஷம் அடித்துச் செல்லப்படுகிறது!
சற்றே சிறிய விளக்கம்
இதில் ஸ்வாமி தேசிகன் கோதையே நமக்கு ஆசாரியை என்கிறார்.
திருப்பாவைக் கொண்டே இந்த ஸ்துதிக்குச் சிறு விளக்கம் கொடுக்கலாம்.
ஸ்ரீரங்கத்தில்
மெய் கறுத்த ஆழி மழைக் கண்ணா!
ஆழி போல் மின்னும் திருமகளுடன்
சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திட
நாங்களும் அதில் நீராட
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்!
அதனால் நீராடப் போதுவீர் போதுமினோ !
என்று ஆண்டாள் ’நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று உபதேசிக்கும் ஆசாரியனாக நம்மை குள்ளக் குளிரக் குடைந்து நீராட அழைக்கிறார் நம் தேசிகன்
படம்: சாலப் பெரும்பறையே...
- சுஜாதா தேசிகன்
12.1.2023
மாலே!
Comments
Post a Comment