திரு பாவை துதி -24
கோதா ஸ்துதி - 24 - அரங்கனின் இடதுபக்கத்தில் நீ இல்லை என்றால் எங்கள் நிலமை ?
ஆர்த் ராபராதிநி ஜநேப் யபிரக்ஷணார்த்தம்
ரங்கேஸ்வரஸ்ய ரமயா விநிவேத்யமானே |
பார்ச்வே பரத்ர பவதீ யதி தஸ்ய நஸ்யாத்
ப்ராயேண தேவி வதனம் பரிவர்த்திதம் ஸ்யாத் ||–24-
எளிய தமிழ் விளக்கம்
ஹே கோதா தேவியே!
ஈரம் உலராத கை போல்
ஓயாமல் அபராதங்களை
விடாது செய்யும் சாதாரண பிரஜைகளின்
‘பிழைகளைப் பொருத்தருள வேண்டும்’
என்று பெரிய பிராட்டி
ரங்கநாதனிடம் வற்புறுத்திப் பரிந்துரைக்க,
இடதுபுறத்தில்,
ஆண்டாளே! நீ மட்டும் இல்லை என்றால்
அரங்கனின் திருமுகம் பக்தர்களின் மீது விழாமல்
திரும்பியே இருந்திருக்கும்!
சற்றே பெரிய விளக்கம்
இந்த ஸ்லோகத்தை எப்படிப் புரிந்துகொள்ளலாம். குற்றம் செய்த ஒருவன் ஈரம் உலராத நிலையில் குற்றம் செய்வதை நிறுத்தாமல், செய்துகொண்டே பெருமாளை அண்டி “என்னைக் காப்பாற்று” என்கிறான். பெருமாள் நீ செய்த குற்றத்துக்கு மன்னிப்பா ? என்று நினைக்க, பெரிய பிராட்டி “தப்பு யார் தான் செய்யவில்லை? இவனை ரக்ஷிக்க வேண்டும்” என்பாள். அப்போது அரங்கன் செவிசாய்த்தால் சரி, ஆனால் அவனுக்குக் கருணை காட்ட விருப்பம் இல்லாமல் இடதுபக்கம் திரும்பினால் அங்கே கோதை இருக்கிறாள்! அவள் விடுவாளா ? அவள் கருணை காட்டியே தீர வேண்டும் என்று அடித்துப் பேசுவாள் ( முதல் ஸ்லோகம் - ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலா மிவாந்யாம்). இப்போது பெருமாளுக்கு வேறு வழியில்லாமல் நேராகப் பார்த்து நமக்கு அருள் புரிகிறார்! ஆகவே கோதைத் தாயே! நீ மட்டும் இடது பக்கம் இல்லை என்றால் பெருமாள் திருமுகம் அந்தத் திசையில் திரும்பி நமக்கு அருள் கிடைக்காமல் போயிருக்கும் என்கிறார் ஸ்வாமி தேசிகன். அதனால் தான் கோதையின் பாசுரங்களைச் சேவித்தால் “பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்” என்கிறார்கள்.
இந்த ஸ்லோகத்தை உதாரணம் கொண்டு இன்னும் சுலபமாகப் புரிந்துகொள்ள ஸ்ரீமத் ராமாயணத்தில் காகாசுரன் சரணாகதி எப்படிச் செய்தான் என்று பார்க்கலாம்.
ஸ்ரீராமர் சீதையின் மடியில் தூங்கிக்கொண்டு இருக்கும் போது காகாசுரன் என்ற அசுரன் சீதையிடம் பெரும் அபசாரப்பட்டான். உடனே ராமர் சிறு புல்லை அடுத்து அதையே ஓர் அஸ்திரமாக அவன் மீது பிரயோகிக்கிறார். அவன் எல்லா லோகங்களையும் சுற்றி வந்து இறுதியில் ஸ்ரீ ராமர் காலிலேயே வந்து விழுந்தான். அப்போது ஸ்ரீராமர் அவனைப் பார்க்கிறார். அவன் அலகில் ‘ஈரம் உலராத கை போல்’ சீதையின் ரத்தம் தான் தெரிகிறது. அப்போது ஸ்ரீராமருக்கு அவனை ரக்ஷிக்கும் எண்ணம் இல்லை. இதைப் புரிந்துகொண்ட சீதை ‘இந்த உலகத்தில் யார் தான் தப்பு செய்யவில்லை’ என்று அவன் கீழே விழுந்திருப்பதைப் பார்க்கிறாள். அவனுடைய தலை ஸ்ரீ ராமர் திருவடி பக்கம் இல்லாமல் கொஞ்சம் தள்ளி இருக்கிறது. உடனே அவன் தலைப் பக்கத்தை ஸ்ரீ ராமன் திருவடி பக்கம் திருப்பிவிடுகிறார்.
இதில் சீதை தானே அவனுக்குச் சிபாரிசு செய்தாள் பூமாதேவியின் சம்பந்தம் இங்கே இல்லையே என்று நினைக்கலாம். காகாசுரன் ஆகாசத்தில் சுற்றிக்கொண்டு இருந்த போது அவன் க்ஷிக்கபடவில்லை. கடைசியில் கீழே விழுந்த பூமாதேவி மடியில் தானே! பூமாதேவி சம்பந்தம் கிடைத்த பின் தான் ரக்ஷிக்கப்பட்டான்.
இந்த உதாரணம் கொண்டு மீண்டும் இந்த ஸ்லோகத்தைப் படித்துப் பாருங்கள்.
மேலும் சில குறிப்புகள்
குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் வரும் எளிமையான பாசுரம். ஆழ்வார் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை*
விரை குழுவும் மலர்ப்பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே*
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும்* மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி;அதுவே போன்று இருந்தேனே
நறுமணம் கமழும் சோலை சூழ்ந்து இருக்கும் வித்துவக்கோட்டு அம்மானே - நீ எனக்குத் தரும் துன்பத்தை நீயே போக்கிட உன் திருவடி அன்றி வேறு புகலலிடம் எனக்கு இல்லை. பெற்ற தாய் கோபத்தோடு தன் குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும், குழந்தை தாயின் கருணையை எதிர்பார்த்து தாயின் சேலைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு தாயின் காலையே சுற்றிச்சுற்றி வரும், அது போல நான் இருக்கிறேன் என்கிறார்.
இந்தப் பாசுரத்தில் ‘குழவி’ என்ற சொல்லுக்குப் பொருள் இளங் குழந்தை. சின்ன குழந்தை, அம்மா அடித்தாலும் அம்மாவையே சுற்றுச் சுற்றி வரும், ஆனால் அதே குழந்தை வளர்ந்து அம்மாவையே கைநீட்டத் தொடங்கினால் ?
தொண்டரடிப்பொடி ஆழ்வார் (இன்று திருநட்சத்திரம்) “அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!” என்ற திருமாலை பாசுரம் உங்களுக்குத் தெரியும். இங்கே உரையாசிரியர் “மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் ’அம்மே’ என்ன பிராப்தி உண்டாயிறே போலே” என்ற ஒரு வாக்கியத்தைச் சொல்லுகிறார். இதன் அர்த்தம்
தன்னைப் பெற்ற தாயையே ஒருவன் அடிக்க நேரிடும் போது அடித்து அடித்து கை வலிக்க நேரிட்டால் உடனே “அம்மா” என்று சொல்லித்தான் அறுதல் அடைவான். அப்போது அவன் கண் முன் தான் அடித்த தன் தாய் நினைவுக்கு வருவதில்லை. இருந்தாலும் ‘அம்மா’ என்ற அந்தச் சொல் அவனுக்கு அறுதல் தருகிறது அது போல பெருமாளின் நாமத்தைச் சொன்னாலே அது பயன் தரும். ஆனால் அந்தப் பயனுக்குப் பின் இரண்டு தாய்கள் இருக்கிறார்கள். உபய நாச்சிமார்கள் வெவ்வேறு பக்கமாக இருந்தாலும், இருவரும் ஒரே பக்ஷம்.
இரண்டு தாய்களுக்கும் இந்தத் துஷ்டப்பையல் பெற்ற பிள்ளையாகிறான். அவனை மன்னித்து அவனைச் சேர்த்துக்கொள்ளுவது இருக்கும் ஒரே பக்ஷம்!
இந்த ஸ்லோகத்தில் உபய நாச்சிமார்களுடன் பெருமாள் சேவை சாதிக்கும் போது நாம் சரணம் அடைவது எப்படிப் பலிக்கிறது என்று எல்லோருக்கும் புரிகிற மாதிரி சொல்லுகிறார் நம் தேசிகன்
தேவிமார்களின் குணங்கள்
குற்றம் புரியாதவர் யார் ? என்பாள் பெரிய பிராட்டி;
குற்றம் புரிந்தவர் யார் ? என்பாள் பூமிப்பிராட்டி;
குற்றம் என்று ஒன்று இருக்கிறதா ? என்பாள் நீளாதேவி!
திருக்கோவலூரில் மூன்று ஆழ்வார்களிடம் கசக்கப்பட்டு கரும்பு போலப் பிழியப்பட்டு நமக்கு ஈரத்தமிழில் மூன்று திருவந்தாதி கிடைத்தது போல, திரு(க்கள்) கோயிலில் பெருமாள் மூன்று தேவியர்களிடம் சிக்கித் தவித்து நம்மை ‘இன்றுயாம் வந்தோம் இரங்கி’ நமக்கு அருள் புரிகிறான்.
படம்: அன்று இவ்வுலகம் அளந்துகொண்டு இலங்கை செல்லும் கண்ணன்!
- சுஜாதா தேசிகன்
9.1.2023
அன்று இவ்வுலகம்
Comments
Post a Comment