திரு பாவை துதி -19
கோதா ஸ்துதி - 19 - கோதையின் மாலையால் புது வாசனையைப் பெறும் பெருமாள்
துங்கைரக்ருத்ரிமகிர: ஸ்வயமுத்தமாங்கை:
யம் ஸர்வகந்த இதி ஸாதரமுத்வஹந்தி |
ஆமோதமந்யமதிகச்சதி மாலிகாபி:
ஸோபி த்வதீயகுடிலாளகவாஸிதாபி: || .19.
எளிய தமிழ் விளக்கம்
யாராலும் உண்டாக்கப்படாத வேதங்களுக்குத்
தலையான வேதாந்தம்,
எந்தப் பகவானை அனைத்து வாசனைகளையும் உடையவன்
என்று தானாக அன்போடு தலையில் வைத்துக் கொண்டாடுகின்றனவோ,
அந்த வாசனை களஞ்சியமான பெருமாள்,
உன் இருண்டு சுருண்டு நெற்றியின் மேலேறிய
நாற்றத் துழாய் முடியால் மணமூட்டப்பெற்ற மாலைகளால்
தனித்துவமான புதிய வாசனையை அனுபவிக்கிறார்
சற்றே பெரிய விளக்கம்
இந்த ஸ்லோகத்தை ஒரே வரியில் சுருக்கிவிடலாம்.
நீ முடிசூடிக் கொடுத்த மாலையின் மணத்தில் மயங்கி, உன்னை மணம் புரிந்து, ஒரு புதுமணம் பெற்றார் !
மேலும் சில குறிப்புகள்.
திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்தாகும்” என்று கூறுகிறோம். அதாவது வேதம் அனைத்துக்கும் இதுவே விதை என்கிறோம்.
இன்னொரு மாதிரியும் இதைப் பார்க்கலாம் - வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமஸ்கிருதத்தில் ‘அறிதல்’ என்று பொருளாகும். ஆக வேதம் அனைத்தையும் திருப்பாவை கொண்டு அறிந்துவிடலாம் ( வித்தாகும்).
இந்த ஸ்லோகத்தில் ஸ்வாமி தேசிகன் ஆண்டாளின் ‘சுருண்ட முன் மயிர்களால்’ மணம் பெற்ற மாலை என்று ஆண்டாளின் திருமுடியை வர்ணிக்கிறார். இந்த மாதிரி ‘சுருண்ட முன் மயிர்’ குறித்து பெரியாழ்வார் மட்டுமே “குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில்” என்று சொல்லியிருக்கிறார்.
ஸ்வாமி தேசிகன் அதனால் தான் என்னவோ கோவிந்தனுக்கு கோதை சரியான ஜோடி என்று இப்படி வர்ணிக்கிறார் போலும்.
நம்மாழ்வார் “மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்” என்று பராங்குச நாயகியாகப் பாடுகிறார். பராங்குச நாயகி மண்ணை துழாவி அதில் வரும் வாசனை வாமனனாக அளந்த போது அவன் திருவடி சாம்பத்தால் பெற்ற வாசனை என்கிறாள்.
அந்தப் பூமியிலிருந்து முளைக்கும் போதே பரிமளத்துடன் இருக்கும் திருத்துழாய் தோட்டத்தில் பூமித்தாயின் வடிவமாகவே தோன்றிய கோதையின் திருமுடியில் கிடைக்கும் மணம் எப்படிப் பட்டதாக இருக்கும்?
- சுஜாதா தேசிகன்
4.1.2024
குத்து விளக்கெரிய…
Comments
Post a Comment