Skip to main content

திரு பாவை துதி -18

திரு பாவை துதி -18






கோதா ஸ்துதி - 18 - கோதையின் ஆடை, மாலையால் அரங்கனுக்கு பெருமை



சூடாபதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்

மாலாமபி த்வதௌகைரதிவாஸ்ய தத்தாம் |

ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே

ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் || (18)



எளிய தமிழ் விளக்கம்


ஹே கோதா!

இந்த ரங்கபதி

உன் மேலாடையையும், 

நீ முடிசூடிக் கொடுத்த மாலையையும் 

தலைவணங்கி ஏற்று, அணிந்து 

மங்களத்தன்மை பெற்று,  

மங்களத்தைக் கொடுக்கும் தகுதியைப் 

பெற்று முடிசூடி நிற்கிறார்


சற்றே பெரிய விளக்கம்


இந்த நாச்சியார் திருமொழி பாசுரத்தைக் கொஞ்சம் சுவைக்கலாம் 





அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்*

அவன் முகத்து அன்றி விழியேன் என்று*

செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச்*

சிறு மானிடவரைக் காணில் நாணும்**

கொங்கைத் தலம் இவை நோக்கிக் காணீர்,*

கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா*

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்*

யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்


ஆண்டாளைத் தேற்ற வந்த தாய்மார்களைப் பார்த்துச் சொல்லுவது போல அமைத்துள்ளது இந்தப் பாசுரம் 


“அழகிய திருக்கையில் திருசக்கிரத்தை ஏந்திக்கொண்டிருக்கிற கண்ணனின் முகத்தில் முழுப்பேனே அன்றி மற்றொருவர் முகத்தில் விழிக்கமாட்டேன். செம்மையான மேலாடையினால் கண்களை மூடிக்கொண்டு, சாதாரண மனிதர்களைக் கண்டால் தானே வெட்கப்பட்டுத் தலைகுனியும் என் மார்பை நன்றாகக் கவனித்துப் பாருங்கள்” என்கிறாள் ஆண்டாள். 


இங்கே ‘செங்கச்சு’ என்று ஆண்டாள் குறிப்பிடுவது செம்மையான கச்சு. கச்சு என்பது மார்பை மறைக்கும் மேலாடை. செம்மை என்பதைச் செந்நிறம் என்றும் கொள்ளலாம். (கோபியர்களின் மார்பில் பூசிய குங்குமங்களால் முத்திரையிட்ட மேலாடையைக் கண்ணன் எழுந்துகொண்டதும் சமர்ப்பிப்பார்கள் என்கிறார் சுகர்). 


பெரியாழ்வார் கண்ணனின் உடைவாள், சுண்டுவில், செண்டுகோல் மற்றும் மேலாடையைத் தோழர்கள் எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள் ( ‘சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட’) என்று பாடுகிறார். ஏன் கண்ணன் தன் மேலாடையைக் கழட்டிக் கொடுத்தார் என்று யாருக்கும் தெரியாது.  


அதற்குக் காரணம், ஆண்டாளின் இந்தச் செம்மையான திருமார்பு ‘கச்சு’ என்ற மேலாடையை ரங்கநாதன் ‘உடுத்து களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு’ என்பதைப் போல விரும்பி ஏற்றுக்கொள்ளவே! போன யுகத்தில் கழட்டி தோழர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டான். 



நாச்சியார் திருமொழியில் இன்னொரு பாசுரம் 


பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும்

அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்

செங்கோல் உடைய திருவரங்க செல்வனார்

எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே


பொங்கும் கடலாலே சூழப்பட்ட பூமண்டலம், பரமபதம் எல்லாவற்றிற்கும் தலைவன் என் திருவரங்க செல்வனார் என்கிறாள் ஆண்டாள். 


இத்தனையும் செல்வமும் இருந்தாலும், தன் பக்தர்களான சீரிய செல்வம் அடைவதற்குத் தகுதி பெற்றது அவன் தலை வணங்கி விரும்பி ஏற்ற கோதையின் ’கந்தம் கமழும் குழலி’ என்ற வாசனை மாலையாலே என்கிறார் நம் தேசிகன். 


AI-படம்: நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!



- சுஜாதா தேசிகன்

3.1.2024

உந்துமத களிற்றன்..




Comments