Skip to main content

பக்தியும் உணர்ச்சியும்

 பக்தியும் உணர்ச்சியும்



பொதுவாக பெருமாளை பார்த்து நான் கண்ணீர் விட்டதில்லை. சில வருடங்களுக்கு முன் பெரிய பெருமாளை விசேஷமாகச் சேவித்த போது அழுதேன். அதற்குப் பிறகு 22 அன்று தொலைக்காட்சியில் நேரலையில் ஸ்ரீராமர் நேராக காட்சி கொடுத்த போது தொலைக்காட்சி என்பதை மறந்து, மனதுக்கு இனிய ஸ்ரீராமரின் பாதங்களைத் தொட்டுச் சேவித்த போது கண்ணீரை அடக்க முடியவில்லை.

இந்த உணர்ச்சி அனுபவத்தை விவரிக்க முடியாது.

சமஸ் ஸ்ரீராமர் கோயில் குறித்து தன் கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறார்.

இந்தியா 1947, ஆகஸ்ட் 15 அன்று ஒரு சுதந்திர நாடாக உருவாகி எழுந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி இருந்தது. “ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயிலை இடித்துக் கட்டப்பட்ட மசூதி அது” என்று உருவாக்கப்பட்ட கதையின் தொடர்ச்சியாக 1992 டிசம்பர் 6 அன்று ஆர்எஸ்எஸ் பரிவாரத்தால் அது தகர்க்கப்பட்டது. 2024 ஜனவரி 22 அன்று அங்கே ராமரின் பெயரால் ஓர் அரசியல் கட்டுமானம் திறக்கப்படுகிறது. ஆட்சியில் இருந்த பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் இதன் சூத்திரதாரிகளாக இருந்தார்கள். இது மட்டுமே நம் கண் முன் நடந்த உண்மை வரலாறு.

இவர் அயோத்திக்குச் சென்றிருப்பாரா என்று எனக்குச் சந்தேகம். சென்றிருந்தால் அது எப்பேர்ப்பட்ட இடம் என்று தெரிந்துகொண்டிருப்பார். அயோத்தி முழுவதும் ஸ்ரீராமரே குடிகொண்டுள்ளார். வயதானவர்கள் சதா ஸ்ரீராமாயணத்தை படித்துக்கொண்டு இருக்க அது அபூர்வப் பூமி. அந்த மாதிரி ஓர் இடத்தைத் தமிழ்நாட்டில் பார்க்க முடியாது.

2017ல் நான் அயோத்திக்குச் சென்ற போது இவ்வாறு எழுதியிருந்தேன்.

ஸ்ரீராமரை சேவித்துவிட்டு அவர்கள் கொடுத்த கற்கண்டு பிரசாதத்தை எடுத்துக்கொண்டு நடக்கும் போது மனம் முழுவதும் ஸ்ரீராமரே குடிகொண்டு இருந்தார். சீக்கிரம் இங்கே கோயில் கட்டப்பட்டு அதில் ஸ்ரீராமரைச் சேவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அங்கே இருந்த ஒரு ஜவானிடம் பேச்சுக் கொடுத்தோம் (நல்ல வேளை என் நண்பருக்கு ஹிந்தி தெரியும்!)

சம்பாஷனை இதுதான்.

“இங்கே தான் பாப்ரி மஸ்ஜித் இருந்ததா?” என்று கேட்டோம். அதற்கு அந்த ஜவான், “நீங்களே மஸ்ஜித் என்று சொல்லலாமா? இங்கே ராமர் கோயில்தான் இருந்தது, மஸ்ஜித் இல்லை... இது ராமருக்கே சொந்தமான இடம்...”

உணர்ச்சிவசப்பட்டு “ஜெய் ஸ்ரீராம்!” என்றேன்

கொஞ்சம் தூரம் நடந்தபின் மேலும் இன்னொரு ஜவானிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“எவ்வளவு நாளா இங்கே காவல் புரிகிறீர்கள்?”

“இங்கே ராமர் கோயில் வரும் வரை நாங்கள் காவல் காப்போம்... கோர்ட் கோயில் கட்டலாம் என்றால் நான்கே மணி நேரத்தில் கோயில் கட்டி முடித்துவிடுவோம்!”

மீண்டும் “ஜெய் ஸ்ரீராம்” என்றோம். ஜவான்கள் சல்யூட் அடிக்க, உணர்ச்சிவசப்பட்டுத் திரும்பினேன்.

இராஜாஜியின் அணுக்கத் தொண்டரும் , மருத்துவரும் , இராஜாஜி அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவருமான Dr T S S ராஜன் 1916 ஆம் ஆண்டு அவர் அயோத்தி சென்ற வந்தது குறித்து ‘கலிகால அயோத்தி’ என்ற ஓர் அத்தியாயம் முழுவதும் தன் யாத்திரை அனுபவம் குறித்து எழுதியிருக்கிறார். சில பகுதிகள்

“அயோத்தியில் அவசியம் தரிசிக்கவேண்டிய இடம் ராம ஜனன ஸ்தானம். ..பிற்பகல் அங்கே சென்றேன். ...ராமன் அவதாரம் செய்த ஸ்தலத்தைத் தரிசிக்க வேண்டியது எனது கடமை என நினைத்து. ...ஊருக்கு வெளியே சுமார் ஒரு மைல் தூரம் சென்றதும் ஒரு மசூதி தென்பட்டது. அதைக் கடந்து சென்று அதன் பின்புறத்தில் பத்தடிச் சதுரமுள்ள ஒரு சிறு கட்டடத்தைப் பார்த்தேன். அந்த அறையின் தளம் பூமி மட்டத்திற்குக் கீழே இறக்கிக் கட்டப்பட்டு இருள் மண்டிக் கிடந்தது. ...இந்த அற்பமான இருட்டில்தான் தசரதச் சக்கரவர்த்தியின் மனைவி ராமனை ஈன்றெடுத்து வளர்த்திருப்பாள்? பார்ப்பவர் நகைக்கும்படியான ஓர் இடத்தில்... என்னை அறியாமலே என் கண்களில் நீர் ததும்பியது. ...ஒவ்வொரு நூற்றாண்டிலும் நமது நாட்டில், நமது மதத்தில் பிறந்து வளர்ந்துவந்த நம் சகோதரர்களைக் கோடிக்கணக்காக வேறு மதத்திற்குப் புகச் செய்து இழந்தோம். இழந்தது மட்டுமல்லாமல், அவர்களே நம் கோயில்களையும், புண்ணிய க்ஷேத்திரங்களையும், தெய்வங்களையும் ஹதம் செய்ய, நாம் பயந்து வாளா இருந்து வந்திருக்கிறோம். வட இந்தியாவில் எங்கே சென்று பார்த்தாலும், நம் புனித ஸ்தலங்கள் இடிக்கப்பட்டு, பாழாக்கப்பட்டு, அந்த இடத்திலேயே மசூதிகள் கட்டப்பட்டு... இவ்வளவு கொடுமைக்கு ஆளாகியும், நாம் துவேஷம் கொள்ளாமல் கூடியமட்டும் சேர்ந்து வாழ்ந்துவருகிறோம்.
ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை நாட்டிற்கு அவசியம். அதற்காக எவ்வளவு விட்டுக்கொடுக்கமுடியுமோ அவ்வளவு விட்டுக்கொடுக்க வேண்டியதும் நமது கடமை. இருந்தபோதிலும் நம் நாட்டினர் அனுபவித்திருக்கும் இன்னல்களையும் அவமானங்களையும் பார்க்கும்பொழுது மனம் வாடாமல் இருக்க முடியாது...”

ஒரு முறை சுஜாதாவை அவர் இல்லத்தில் சந்தித்த போது ஒரு நாவல் குறித்து பேச்சை சுஜாதாவே தான் ஆரம்பித்தார்.
‘நம்மாழ்வார் பற்றி இப்படி எல்லாம் எழுதியிருக்கிறார்’ என்று மிகவும் வருத்தப்பட்டு உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். பொதுவாக சுஜாதா உணர்ச்சிவசப்பட்டு நான் பார்த்ததில்லை. அன்று அவர் உணர்ச்சிவசப்பட்டதைப் பார்த்தேன்.

‘புத்தகத்தைத் திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்றார்.

ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் நம்மாழ்வார் மிக முக்கியமானவர். ஆசாரிய குருபரம்பரை வரிசையில், பெருமாள், பிராட்டி, விஷ்வக்ஸேனருக்குப் பின் பூலோக ஆசாரியார்களில் முதலிடத்தில் இருப்பவர். ஸ்ரீ வைஷ்ணவத்துக்கே இவர்தான் ஃபவுண்டேஷன். சுஜாதாவின் மன உளைச்சலுக்குக் காரணமில்லாமல் இல்லை.

ஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு முறை ஸ்ரீராமானுஜர் குருவுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாகத் தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், குரு யாதவப் பிரகாசர் சாந்தோக்கிய உபநிஷத்தில் வரும் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார். கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்றால் அதன் பின்பகுதி. ஆகவே பகவானுடைய கமலக் கண்கள் குரங்கின் பின்பகுதியைப் போலச் சிவந்து இருந்தன என்று விபரீதமாக அர்த்தம் சொன்னார். இதைக் கேட்டதும் ஸ்ரீராமானுஜர் கண்களிலிருந்து நீர் பெருக அவற்றில் சில துளிகள் யாதவப் பிரகாசர் தொடையில் சூடாகப் பட, யாதவ பிரகாசர் ஏன் என்று கேட்க, அதற்கு ஸ்ரீராமானுஜர், "இதற்கு இப்படி அர்த்தம் செய்யக் கூடாது; சூரியனின் கதிர்களால் ஆஸம்- மலரச் செய்யப்பட்ட புண்டரீகம் தாமரை மலர்; அந்த மலரைப் போன்ற கண்களை உடையவன்" என்று பொருள் என்றாராம்.

இந்த நிகழ்ச்சி பெருமாள் மீது ஸ்ரீராமானுஜர் வைத்திருந்த பிரேமை, அதனாl உணர்ச்சிவசப்பட்ட பக்தியைக் காட்டுகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்தைப் பார்த்துவிட்டு
என் பையன் “ராமர் good தானே ? இதில ஏன் bad ? its confusing " என்றான்.
குழந்தைகள் மனங்களில் நஞ்சை கலப்பது இது தான். ஆன்மீக அரசியலுடன் காலா காக்டெய்ல் என்று குழப்பிக்கொண்டு இருந்தார்.

காலாவில் நானா படேகர் வில்லனாக வருகிறார். அவர் ராமர்(பக்தர்). கதாநாயகனாக ரஜினி ராவணன். ஆன்மீக அரசியல் என்று சொல்லும் ரஜினி திராவிடப் பிரச்சாரத்தை மறைமுகமாகச் செய்திருந்தார். (நானா படேகர் ஒவ்வொரு முறை எழுந்துகொள்ளும் போதும், அவர் குர்த்தாவை உதறுவது அச்சு அசல் மோடியின் மேனரிசம்)

இரானில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப்(ஸ்கார்ஃப்) அணிய வேண்டும் என்பதால் செஸ் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் அறிவித்திருந்தது உங்களுக்கு நினைவில்லாமல் இருக்கலாம். என் கலாசாரத் தன்மானம் வேஷம் போட மாட்டேன் என்றார். ஆன்மீகவாதி என்று சொல்லிக்கொள்ளும் சூப்பர் ஸ்டார் இது போல ஒரு தன்மானத்தை ஏன் கடைப்பிடிக்கவில்லை என்பது புரியாத புதிர்.

சமீபத்தில் அன்னபூரணி திரைப்படம் ஓடிடியில் வந்த பிறகு அதற்கு எழுந்த எதிர்ப்பு, மன்னிப்பு, பின் படத்தைத் தூக்கினார்கள். இன்று உலகமே ஸ்ரீராமருடன் ஒன்றாக இருக்கும் இந்தச் சமயத்தில் காலா போன்ற படங்கள் வந்தால் இதே நிலைமையைச் சந்தித்திருக்கும். ஸ்ரீராமர் அயோத்திக்கு வந்த பின் இந்தியா ராம பக்தியில் திளைத்துள்ளத என்பது நிதர்சனம்.

- சுஜாதா தேசிகன்
24.1.2024

Comments