Skip to main content

ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை

ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை



17 ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்( 58ஆம் பட்டம் ) வாழ்வில் நடந்த ஓர் அதிசயச் சம்பவத்தைச் சொல்லுகிறேன்.

காஞ்சியில் ஸ்ரீ காமகோடி பீடாதிபதியாக இருந்தார் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி மடத்தில் கேசவ பாண்டுரங்கன் கைங்கரியம் செய்து வந்தார்.

கேசவ பாண்டுரங்கன் தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. தன் குருவிடம் பிராத்திக்க அவரும் “சீக்கிரமே உங்களுக்குப் புத்திர பாக்கியம்” ஏற்படும் என்று ஆசி வழங்கினார். சில காலம் கழித்து அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. புருஷோத்தமன் என்று நாமகரணம் செய்தார்கள்.

புருஷோத்தமனுக்கு உபநயனயத்துக்கு பிறகு முதல் முறையாகத் தன் குருவிடம் அழைத்துச் சென்றபோது “யார் இந்தப் பையன்?” என்று கேட்க அதற்குக் கேசவ பாண்டுரங்கன் “இது தங்களுடைய குழந்தை ( அதாவது தங்கள் ஆசீர்வாதத்தால் பிறந்த குழந்தை ) “ என்று கூற உடனே குருவும் “அப்படி என்றால் எனக்கே தந்துவிடு” என்று கேட்க அவரும் தன் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார்.

புருஷோத்தமன் மடத்தில் வளர்ந்தான். அவனுக்கு ஒரு நண்பனும் கிடைத்தான். பெயர் ஞானசேகரன். இருவரும் குருவின் அரவணைப்பில் வேதம், சாஸ்திரம் எல்லாம் பயின்றார்கள்.

ஒரு நாள் குரு இவர்களை அழைத்து “தான் காசி யாத்திரை சென்று வருகிறேன்... மடத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கிளம்பினார்.

சில காலம் கழித்து, குருவின் பிரிவால் வாடிய இவர்கள் குருவைப் பார்க்க காசிக்குப் புறப்பட்டார்கள்.

ஞானசேகரனுக்கு ஜோசியம் தெரியும். யாரோ ஒருவர் காசி போகும் போது மரணம் ஏற்படப் போகிறது என்று ஞானசேகரனுக்குத் தெரிந்தது. போகும் வழியில் யாராவது இறந்தால் உயிருடன் இருப்பவர் ஈமச் சடங்கைச் செய்துவிட்டு காசிக்குச் சென்று காசியில் உயிர்த் தியாகம் செய்ய வேண்டும் வேண்டும் என்று இருவரும் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள்.

பல மாதங்கள் நடந்து சென்று போது ஞானசேகரன் ஒரு விஷக் காய்ச்சல் வந்து ஒரே நாளில் இறந்து போகிறான்.

புருஷோத்தமன் அவனுக்குச் சடங்குகள் செய்துவிட்டு, காசியை நோக்கிச் சென்று காசியில் உயிரை விட ஆயத்தமாக இருக்கும் போது தன் குருவைப் பார்க்கிறான். நடந்தவற்றைச் சொல்லித் தான் உயிரை விட வேண்டும் அதற்கு உத்தரவு கொடுக்கும்படி கேட்கிறான்.

குரு அவனுக்கு அந்த நிமிடமே காஷாயம், தண்டம் கொடுத்து சன்னியாச ஆசிரமம் ஏற்க வைத்து ”நண்பனுக்கு நீ கொடுத்த வாக்கு பொய்க்காது ...இது உன்னுடைய புது பிறப்பு” என்று கூறுகிறார். புருஷோத்தமனுக்கு “போதேந்திர சரஸ்வதி” என்ற துறவுத்திருநாமம் அளித்து நீ காஞ்சிக்குச் செல்ல வேண்டும், போகும் வழியில் புரி ஜெகந்நாத தலத்தில் லட்சுமி ஸ்ரீதர் என்பவர் வசமிருக்கும் “பகவன் நாம கௌமுதி” என்ற நூலை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.

போதேந்திரர் புரிக்கு வந்த அடைந்த போது லட்சுமி ஸ்ரீதரர் காலமாகிவிட்டார், அவரது மகனான ஜகந்நாத பண்டிதர் இருப்பதாக அறிந்துகொள்கிறார். அவர்கள் வீட்டைத் தேடிச் செல்கிறார். மாலை இருட்டிவிட்டதால் அவர்கள் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொள்கிறார்.

நடு இரவில் அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது.

ஒரு தம்பதி அங்கு வந்து ஜகந்நாத பண்டிதர் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள்.

“என்ன வேண்டும்?” என்று ஜகந்நாத பண்டிதர் கேட்கக் கணவன் தன் கதையைச் சொல்லுகிறார்.

தீர்த்த யாத்திரையாகக் காசிக்குச் செல்லும் போது என் மனைவியை சில இஸ்லாமியர்கள் அபகரித்துச் சென்றுவிட்டனர். மனமுடைந்த நான் என்ன செய்வது என்று தெரியாமல் காசி கரையில் இருக்க, சில மாதங்களுக்குக் கழித்து என் மனைவி ஓடோடி வருகிறார். ஒரு இஸ்லாமியப் பெண்ணாகவே அவள் மாறியிருந்தார். தம்மை மீண்டும் ஏற்றுக்கொண்டு எனக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்று கதறுகிறாள். இன்னொருவர் இல்லத்தில் அவருடைய மனைவியாகவே வாழ்ந்துவிட்ட என் மனைவியை மீண்டும் மனைவியாக ஏற்கச் சாஸ்திரம் இடங்கொடுக்குமா என என உங்களைச் சந்திக்க வந்தேன். எங்களுக்கு ஒரு நல் வழியைக் காட்டுங்கள் என்று கணவன் கதறுகிறான்.

இதனைக் கண்ட ஜகந்நாத பண்டிதர் தம்பதிகளுக்கு ஆறுதல் அளித்து இதற்குப் பிராயச்சித்தமாக நதியில் மூழ்கி ராமநாமத்தை மூன்று முறை உச்சரித்தாலே போதுமானது என்று கூறினார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த அவரது அன்னை உள்ளே இருந்து “ஒரு முறை சாப்பிட்டாலே குணம் ஆகும் மருந்தை ஏன் மூன்று முறை சாப்பிட வேண்டும் ? ( அதாவது ராம நாமத்தை ஒரு முறை சொன்னாலே போதும் மூன்று முறை எதற்கு?) என்ற பொருளில் சொல்ல மறுநாள் அவர்களும் ராமநாமத்தைச் சொல்லி நதியில் மூழ்கி எழுந்த போது அவள் மீண்டும் ஹிந்து பெண்ணாக எழுந்து கணவனுடன் இணைந்தாள்.

அதன் பின் ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ”பகவன் நாம கௌமுதி” என்ற நூலைப் படித்துப் பகவன் நாமம்பற்றிப் பிரச்சாரம் செய்து அவரே ”பகவன் நாம போதேந்திரர்” என்று புகழ்பெற்றார்.

- சுஜாதா தேசிகன்
18.1.2024
படம்: நன்றி : Guruprasad

Comments

Post a Comment