Skip to main content

தொலைந்து போன வாழ்த்துகள்!

தொலைந்து போன வாழ்த்துகள்!


அலைப்பேசி அதிகம் புழங்காத முன்னொரு காலத்தில் தீபாவளி, புதுவருடம், பொங்கல் போன்ற விசேஷ நாட்களுக்கு வாழ்த்து அட்டை என்று ஒரு வஸ்து இருந்தது.

அந்தந்த காலங்களில் நடைமேடைகளிலும், புத்தகக் கடைகளில் தோரணமாக கிள்ப்பிட்ட அழகான ஓவியங்களும் படங்களும் தொங்க, யார் யாருக்கு என்ன பிடிக்கும் என்று யூகித்து, வாங்கி , இறுக்கமான இராணுவச் சீருடை போன்ற உறையில் நுழைத்து, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி, சென்றதா ? இன்னும் இரண்டு ரூபாய் சேர்த்து உறையை ஒட்டாமல் அனுப்பியிருக்க வேண்டுமோ ? போன்ற சஸ்பென்ஸுடன் நாட்களைக் கடந்து. பல வாரங்கள் கழித்து ‘... அனுப்பிய ’கிரிட்டிங்’ கிடைத்தது. அழகாக இருந்தது’ என்று ஒரு வரி பதிலைப் படிக்கும் போது ஓர் ஆனந்தம் ஏற்படும்.

இந்த வாழ்த்து அட்டைகளால் தபால் நிலையங்கள் ஓவர் டைம் செய்து, முக்கியமான கடிதங்கள் தாமதமான காலங்களும் உண்டு.

அதே போல் நமக்கு யாராவது அனுப்பும் வாழ்த்து அட்டைகள் கசங்கியோ அல்லது வீட்டுச் சண்டை முத்திரையில் பிறதிபலிப்பவைகள் எரிச்சலை உண்டுசெய்யும்.

நிறுவனங்கள் அனுப்பும் வாழ்த்து அட்டைகள் ஒஸ்தியான காகிதத்தில் வட இந்திய மார்டன் ஆர்ட் படத்தில் ‘seasonal 'greetings' என்ற இரண்டு வார்த்தைகளுடன் சுவரஸியம் அற்ற அடாசாக இருக்கும்.

பெரும்பாலும் பொங்கல் வாழ்த்து அட்டைகள் கே.மாதவன் வாட்டர் கலர் ஓவியங்களில் வைக்கோல் மாடுகளுடன் எப்போதும் சிரித்துக்கொண்டு இருக்கும் உழவர்கள் இருப்பார்கள்.

தாத்தா பாட்ட்டிகளுக்கு சாமிப்படம், பெண்களுக்குக் குழந்தை, இயற்கைக் காட்சிகள் போன்ற உபத்திரவம் இல்லாத படங்கள் என்று அனுப்புவதிலும் சிற்சில வரைமுறைகள் இருந்தது. கொஞ்சம் விலை உயர்ந்த அட்டைகளைத் திறந்தால் ‘கட்-அவுட்’ படங்கள் எழும்பி ஜிம்பூம்பா போல இசை வரும். அவைகளைப் பார்த்துவிட்டு எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவோம். சினிமா நடிகர்கள், நடிகைகள்(குறிப்பாக ஸ்ரீதேவி), திமுக, அதிமுக வாழ்த்து அட்டைகளையும் பார்த்திருக்கிறேன்.

சென்னை ஹிஜ்ஜின்பாதம்ஸ் கடையில் ஈஸ்வரன் இயற்கை ஓவிய வாழ்த்து அட்டைகளை எல்லாவற்றையும் மொத்தமாக வாங்கியது நினைவு இருக்கிறது. வாழ்த்து அட்டையில் உள்ள வாசகங்களை ஆராய்ந்து ஒரு முனைவர் பட்டமே வாங்கலாம். உங்கள் வாழ்கை பட்டாசு போல ஒளிரட்டும், இந்தப் பொங்கல் திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும் என்ற ‘க்ளீஷே’க்களை தவிற பல நல்ல வாசகங்களைப் படித்திருக்கிறேன்.




பள்ளியில் படிக்கும் காலத்தில் வாழ்த்து அட்டைகளை நானே செய்துகொண்டு இருந்தேன். (40வருடங்கள் முன் நான் வரைந்த சிலவற்றை உங்கள் பார்வைக்கு இணைத்திருக்கிறேன்). திருச்சி சிங்காரத்தோப்பில் அட்டையை வாங்கி, வீட்டருகில் உள்ள அச்சக இயந்திரத்தில் கட் செய்து, ஸ்கெட்ச் பேன் கொண்டு துவாரபாலகர் போல இரண்டு வளைந்த கரும்புகளுக்கு நடுவில் சூரியனை உதிக்கவிட்டு, விரகு அடுப்பில் பானையைப் பஞ்சால் பொங்கவிட்டு. மேலே ‘ஹாப்பி பொங்கல்' என்று எழுதி அனுப்பியிருக்கிறேன்.

ஸ்கிரீன் பிரிண்டிங் வந்த சமயம், என் அறையில் நானே பல வாழ்த்து அட்டைகளை வடிவமைப்பு செய்து பல வண்ணங்களில் அச்சடித்தேன்.

இந்த வா.அ கலாசாரம் மறைந்து ‘காதலர் தினம்’ வாழ்த்து அட்டைகளாக பரிணாம வளர்ச்சி பெற்றது.

இன்று எனக்கு வரும் வாழ்த்துகள் பெரும்பாலும் சாய்ந்த எழுத்துக்களில் ‘Forwarded many times' என்ற பனிபடர்ந்த படங்களை ஏந்திக்கொண்டு வருகிறது, அவற்றை மடியாகத் தொட்டுப் பார்க்காமல் கடாசிவிட்டு, நன்றி என்று ஒற்றை பதிலை ரோபோட் போல அனுப்பிவிடுகிறேன்.

- சுஜாதா தேசிகன்
15.1.2024
பொங்கல் திருநாள்
படங்கள்: நான் உருவாக்கிய வாழ்த்து அட்டைகள்
மாதவன் ஓவியங்கள் - உதவி இணையம்.

Comments