திரு பாவை துதி -16
கோதா ஸ்துதி - 16 - கோதையின் சுயம்வரத்துக்கு வண்டுகள் மங்கள வாத்தியங்கள் இசைக்கின்றன
த்வந்மௌளிதாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்தகல்பித ஸபீதிரஸ ப்ரமோதா|
மஞ்ஜுஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்களதூர்யகோஷம் || .16.
எளிய தமிழ் விளக்கம்
கோதையே!
நீ முடி சூடிக்களைந்த மாலையைத்
திருவரங்கன் திருமுடியாலே ஏற்க,
வண்டுகள் தம் விருப்பத்துக்கு ஏற்ப அதிலுள்ள தேனைப் பருகி,
மகிழ்ச்சி பொங்க, ஒன்றாகக் கூடி ரீங்காரம் செய்ய,
தங்கள் மனத்துக்கு இனியவனையே மணவாளனாகத் தேர்ந்தெடுத்துவிட்டதைக் குறிக்கும்
இனிய மங்களக் கெட்டிமேளம் முழக்கமாக அமைந்தது!
சற்றே பெரிய விளக்கம்
கோதை நாச்சியார் திருமொழியில் கனவு காண்கிறாள்.
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை
கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழீ நான்
மத்தளங்கள் கொட்ட, சங்குகள் ஊத முத்துக்கள் உடைய மாலைத் திரள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழே மைத்துனனான மதுசூதனன் என்னைத் திருமணம் செய்துகொள்ளக் கனவு கண்டேன் என்கிறாள்.
ஆண்டாளின் இந்தக் கனவை ஸ்வாமி தேசிகன் வண்டுகள் கொண்டு பந்தல் அமைத்து, அதே வண்டுகள் கொண்டு மத்தளம் கொட்ட, சங்கம் ஊத நனவாக்கும் ஸ்லோகம் இது.
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆசாரிய ஹிருஹயத்தில் உள்ள 152ஆம் சூத்திரத்திற்கு ஆழ்வார் பாசுரங்களின் எடுத்துக்காட்டுகளைக் கொஞ்சம் சேர்த்து அனுபவித்தால் சுவைத் தேன் போலக் கூடுகிறது.
( நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் உள்ளவற்றைத் தொகுத்து கீழே கொடுத்துள்ளேன்).
ஆழ்வார் பாசுரங்களில் உள்ள வண்டுகளுக்கு ‘மதுவிரதம்’ எனப் பெயர். இவை எம்பெருமான் திருமுடி வனத்திலுள்ள திருத்துழாய் மலரின் தேனையும், ‘உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை’ மட்டுமே ‘தூ மது வாய்கள் கொண்டே ’ விரும்பி பருகும்.
இந்தக் கருமையான வண்டுகள் பூவில் தேனைப் பருகும் போது ‘வண்டு இனங்கள் வண்ணப் பொடி (திருமண் போல) அணிந்து, அந்த இன்ப ரசத்தால் யாழின் இசையான வேதத்தியல்களை ஆளம் செய்வது போலவும், ‘வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி’, ‘எம்பெருமான் குணம் பாடி மல்லிகை வெண்சங்கு ஊதுவது’ போல இருக்கிறது!
ஆண்டாள் தன் திருமுடியில் சூட்டிக் களைந்த மாளையை பெருமாள் தன் திருமுடியில் சாற்றிக்கொள்ளும் அந்தக் க்ஷணத்தில் (திருமுடி மாலையில் உள்ள தேனைப் பருகி ஆனந்தத்தில்) வாத்ய கோஷம் செய்யும் இந்தத் திரு வண்டுகளைத் தான் தான் திருமங்கை ஆழ்வார் “அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை” என்கிறார் !
ஆளம் - ஆலாபனை செய்வது போல வண்டுகளின் ரீங்காரம்.
AI-படம்: நாயகனாய் நின்ற..
- சுஜாதா தேசிகன் 1.1.2024
நாயகனாய்..
Comments
Post a Comment