Skip to main content

திரு பாவை துதி -27

திரு பாவை துதி -27




கோதா ஸ்துதி - 27- கோதாய் - கோ’தாய்’


ஜாதாபராதமபி மாமநுகம்ப்ய கோதே

கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா: |

வாத்ஸல்ய நிர்பரதயா ஜநநீ குமாரம்

ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்டபயோதராபி || 27


எளிய தமிழ் விளக்கம்


கோதையே!

அறிந்தோ அறியாமலோ தவறுகள் செய்திருந்தாலும்

என்னிடம் கருணையுடன் இரங்கி ரக்ஷிப்பது உனக்குத் தகுமே

ஏனென்றால்

தாய்ப்பால் அருந்தும் போது முலையைக் கடித்த கைக்குழந்தையை

மிகுதியான வாத்ஸலத்துடன் தன் பாலினால் காப்பாற்றுவாள் அல்லவா ? 


சற்றே பெரிய விளக்கம் 


மதுரகவியாழ்வார் கண்ணிநுண்சிறுத்தாம்பில் பாசுரம் நம் எல்லோருக்கும் தெரிந்தது. 


அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்

தன்மையான் சடகோபன் என் நம்பியே


அம்மையப்ப தன்மையுடன் சடகோபன் அடியேனைக் ஆட்கொண்டர் அவரே நம்பி அவரே எனக்கு அழியாத உறவு என்கிறார். 


இதில் ‘அன்னையாய் அத்தனாய்’ என்று மதுரகவிகள் சொல்ல, திருமழிசைபிரானோ திருச்சந்த விருத்தத்தில் சற்று மாற்றி  ‘அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரான்’ என்கிறார்.


எம்பெருமான் நன்மை செய்வதற்காக முதலில் தந்தை போலத் தண்டனை அளித்து, திருத்தி, பிறகு தாய்போல விரும்பியதைக் கொடுப்பார் என்கிறார். 

ஆனால் மதுரகவி ‘அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்’ என்று மாற்றி சொல்லுகிறார். 


ஆழ்வார் முதலில் தாய்போல இனியவளாய் திருத்தி, பின்பு தந்தை போல நன்மையும் செய்கிறார். அதனால் தான் ’தன்மை’ என்ற வார்த்தையை மதுரகவிகள் இங்கே உபயோகிக்கிறார். 


சுலபமாக புரிய மலஜலம் கழித்த குழந்தையைத் தாய் சுத்தம் செய்து, தந்தை மடியில் உட்கார வைப்பாள். ( மலஜலம் = பாவம்; தாய்=ஆசாரியன் ; சுத்தம் செய்து = உபதேசம் ; தந்தை மடி = எம்பெருமான் திருவடி)

மதுரகவிகளுக்கு நம்மாழ்வார் போல ஸ்வாமி தேசிகனுக்குத் தாய் தந்தை எல்லாமே வாத்ஸல்யம் மிக்க கோ’தாய்’ தான் என்கிறார். 


வாத்ஸல்யம் என்றால் என்ன என்று முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வாத்ஸல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான சொல். 

ஆங்கிலத்தில் “Parental Love” என்று சொல்லலாம்.  நம் பல காலமாக ’வாத்ஸல்யம்’ என்ற சொல்லுக்குப் பசு கன்றிடம் நக்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது மாதிரி என்ற உதாரணத்தைப் பல காலமாகச் சொல்லுகிறார்கள். 


ஆண்டாள் “கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால்சோர” என்கிறாள்.  பசு தன் கன்றை நினைத்த மாத்திரத்தில் வாத்ஸல்யத்துடன் முலை வழியே பாலை சொரியும் என்கிறாள்

இரண்டாம் திருவந்தாதியில் 

தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே

போய் நாடிக்கொள்ளும் புரிந்து


தன் தாயைத் தேடும் கன்று போலத் துளசி மாலை அணிந்தவன் திருவடிகளையே விரும்பி அடைந்து தானே சென்று சேர்ந்துகொள்ளும் என்கிறார் ஆழ்வார்.


ஸ்வாமி தேசிகன் கன்று போலத் துளசி வனத்துக் கோதையை நாடி,

குழந்தை கடித்தது என்று தாய் அதன் மீது கோபம் கொள்வதில்லை அது போல என் மீது கடிந்து கொள்ளாதே என்கிறார். 


படம்: ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு!


- சுஜாதா தேசிகன்

12.1.2023

கூராரை… 


Comments