Skip to main content

திரு பாவை துதி -17

திரு பாவை துதி -17



கோதா ஸ்துதி - 17 - கோதை சூடிய மாலையே அரங்கனுக்குப் பெரும் மதிப்பு


விஶ்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ

வக்ஷஸ்த்தலே ச கமலாஸ்தநசந்தநேந |

ஆமோதிதோபி நிகமைர் விபுரங்க்ரியுக்மே

தத்தே நதேந ஶிரஸா தவ மௌளி மாலாம் || .17.


எளிய தமிழ் விளக்கம்


எங்கும் பரந்துள்ள, உலகங்களுக்கு எல்லாம் நாயகன், 

திருவரங்கனின் திருமேனி முழுவதும் பரிமளம்!

தாமரையின் ஒவ்வொரு மகரந்தத் துகளும் ஓர் அண்டமாகத் 

திரு நாபியில் பரிமளம் வீச, 

திருமகளின் திருமார்பில் பூசியுள்ள சந்தன

பரிமளம் திருமார்பில் வீச, 

உபய வேதங்களால் பெற்ற பரிமளம் திருவடியில் வீசினாலும்

கோதையே! நீ முடிசூடிக் கொடுத்த வாச நறும் குழல் மாலையைக் குனிந்து ஏற்று பெருமையுடன் சூடிக்கொள்கிறான். 



சற்றே சிறிய விளக்கம்

‘கொப்பூழில் எழு கமல பூ அழகர்’ என்று உந்தியில் கமலத்தின் வாசனையும், ‘பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா’ என்று மார்பில் கமலையின் வாசனையும், ‘திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள்’ என்று திருவடியில் மகிழம் பூ வாசனையுடைய, ஓங்கி உலகை அளந்த உத்தமன், உன் துழாய் மாலை முடிசூடிக் கொடுத்ததை ஏற்கக் குனிந்து நிற்கிறான்!


AI-படம்: அறம் செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா!


- சுஜாதா தேசிகன்

2.1.2024

அம்பரமே….


Comments