ஸ்ரீ தியாகராஜர் சில குறிப்புகள்
சில வருடங்கள் முன் தியாகராஜரும் ஸ்ரீரங்கமும் பற்றி படித்த போது சில குறிப்புகளை எழுதினேன்.
ஸ்ரீதியாகராஜருடைய ஜாதகத்திலிருந்து அவருடைய பிறந்த நாளை நிர்ணயிக்க முடிகிறது. தாய்க்கு நன்கு பாட தெரியும். புரந்தரதாஸரின் பாட்டுக்கள் பலவற்றை அவர் கற்று வைத்திருந்தார். மகாராஜாவுக்கு தியாகராஜர் ஸ்லோகம் வாசிக்க இவருடைய தந்தை பொருளை விளக்குவார். இதனால் ஸ்ரீராமாயணம் இவர் மனதில் நன்கு பதிந்துவிட்டது.
தியாகராஜரின் பல வாழ்க்கை குறிப்புகள் அவர் பாடலின் மூலமே நமக்குக் கிடைக்கிறது. எளிய வாழ்க்கை, உயர்ந்த நோக்கு ( simple living, high thinking ) அதனால் பக்தியும், தொண்டும் அவருக்கு வந்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
தியாகராஜர் பக்தி என்பது விவரிக்க முடியாதது. பக்திக்கு முன் ecstasy என்ற வார்த்தையை போட்டுக்கொள்ள வேண்டும்.
உஞ்சவ்ருத்தியின் மூலமாக உப்பு முதல் கற்பூரம் வரை அவர் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் சேகரித்ததாக மாளவஸ்ரீ ராகத்தில் ‘என்னாள்ளு திரிகேதி’ என்ற கீர்த்தனையில் அவரே கூறுகிறார்.
இவருக்கு 18வது வயதின் போது, காஞ்சிபுரத்திலிருந்து ஹரிதாஸ் என்ற ஒருவர் இவரை அணுகி ”96 கோடி முறை ராமநாமத்தை உச்சரி” என்று சொன்னதை தெய்வவாக்காக எண்ணி 21 ஆண்டுகளில் அதை முடித்தார். தினந்தோறும் சராசரி 1,25,000 முறை ராமநாமத்தை ஜபித்தார் ! இதைச் செய்து முடிக்க இவருக்கு உதவியது ஸ்ரீராமராக தான் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் இதைச் செய்திருக்க முடியாது.
மனம் உருகி ஒரு முறை கூப்பிட்டாலே ராமர் வருவார் இவ்வளவு முறை கூப்பிட்டால் ? பல முறை இவர் முன் ராமர் தோன்றி தரிசனம் அருளியிருக்கிறார். ’ஏல நீ தயராது’, ’கனு கொண்டினி’ போன்ற கீர்த்தனைகள் இந்த அனுபவத்தைக் கொண்டு அவர் பாடியது.
ஸ்ரீரங்கத்தில் இவருக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவம் மிக உருக்கமானது:
ஸ்ரீரங்கத்தில் ஒரு சித்திரை உதஸ்வத்தின்போது தியாகராஜர் ஸ்ரீரங்கத்துக்கு வருகை தந்தார். தெற்கு சித்திரை வீதியும் மேற்குச் சித்திரை வீதியும் சேரும் முனையிலுள்ள தேர்வடம் நோக்கிய சந்தில் அந்த வீடு இருந்தது. நம்பெருமாள் குதிரை வாகனத்தில் அங்கே வர வாயிலில் நின்று கொண்டு பார்த்த தியாகராஜர் மனம் நெகிழ்ந்து “ராஜு வெடலெஜூதமு ராரே…” என்ற பாடலைப் பாடி நின்றார். 16 ஸ்ரீபாதம் தாங்கிகள் தங்கள் தேள்களில் நம்பெருமாளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு செல்ல, வாகனம் மேற்கு சித்திரை வீதியை நோக்கித் திரும்பியது .தியாகராஜர் நம்பெருமாளை அருகில் சென்று தரிசிக்க முயன்றார் ஆனால் திருப்பத்தில் தள்ளு முள்ளு ஏற்பட இவரை இடித்துச் தள்ளிச் சென்ற கும்பலில் சிக்கிக்கொண்ட தியாகராஜர் நம்பெருமாளை அண்மையில் சென்று சேவிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் நின்றுவிட்டார்.
இதற்கிடையில் திருப்பத்தை தாண்டிய ஊர்வலம் திடீர் என்று நின்றுவிட்டது. ஸ்ரீபாதம் தாங்கிகள் எவ்வளவு முயன்றும் மேலே செல்ல முடியாமல் தவித்தார்கள். அப்போது அர்ச்சகர் ஒருவர் மீது ஆவேத்து “பரம பக்தர் ஒருவர் அங்கே நின்றுகொண்டிருக்கிறார் அவரை இங்குக் கொணர்ந்து நம்பெருமாளைச் சேவிக்க செய்வித்தால்புறப்பாடு தொடர்ந்து நடைபெறும்” என்று கூறினார். கோயில் அதிகாரிகளும், அர்ச்சகர்களும் இவரைத் தேடி தியாகராஜரைப் பெருமாள் முன் நிற்க வைக்க தியாகராஜர் மனம் நெகிழ்ந்து படியது தான் “வினராதா நா மனவி”. இந்தப் பாடல் முடிந்ததும் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பாடு கண்டருளினார். ( இந்தச் சம்பவத்தை நினைத்து இந்தப் பாடலை தேடிக் கேட்டுப்பாருங்கள் அனுபவமே தனியாக இருக்கும் )
மற்றொரு சமயம், தியாகராஜர் பெரிய பெருமாள் முத்தங்கியில் சேவை சாதிக்கும் அழகைப் பார்த்து “ஓ ரங்கசாயி” என்ற பாடலை பாடினார். இவருக்கு “ஓ” என்றால் நம் திருப்பாணாழ்வாருக்கு “ஐயோ” ( நீலமேணி ஐயோ!) - பெரிய பெருமாள் கொடுக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வார்த்தைகள் இவை.
ஸ்ரீரங்கத்தில் நான்முகன் கோபுர வாசலில் (பிரசிதிப்பெற்ற ‘ரங்கா ரங்கா’ கோபுரம் ) வாசல் சுவரில் தியாகராஜருடைய ஐந்து கீர்த்தனைகள் தனியாக கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு பல வருஷங்கள் முன் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது, ஆனால் தற்போது அது இல்லை, புனர்நிர்மாணம் செய்யும் போது அதை எடுத்து எங்கோ ஆயிரம் கால் மண்டபத்தில் போட்டு வைத்துள்ளார்கள். தியாகராஜரையே மறந்துவிட்டோம். கல்வெட்டி எல்லாம் எம்மத்திரம் ?
./சுஜாதா தேசிகன்
30.1.2024
படம்: கேஷவ்
அருமை! ஆயிரம் கால் மண்டபத்தில் எறியப்பட்டருக்கும் தியாகய்யர் பாடல் சிலாசாசனங்களை நல்ல மனம் படைத்த கர்நாடக இசை வல்லுநர்கள் மீட்டு திருவையாற்றில் அவர் சமாதி மண்டபத்தில் பதிக்க ஏற்பாடு செய்யலாமே!
ReplyDelete